அழகியசிங்கர்
(ஸ்ரீநிஸகர்கதத்தா மஹாராஜ் அவர்கள் 17 ஏப்ரல் மாதம் 1887 அன்று ஹனுமான் ஜெயந்தி அன்று பிறந்தார். அவர் இயற்பெயர் மாருதி. 84 வயதில் 1981ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மறைந்தார்.
நான் ஏற்கனவே நான்தான் அது என்ற அவருடைய நூலிலிருந்து சில பகுதிகளைத் தமிழில் மொழிபெயர்த்து விருட்சத்தில் வெளியிட்டுள்ளேன்.
அவருடைய பிறந்த தினத்தை ஒட்டி அவருடைய மொழி பெயர்ப்பைத் தருகிறேன். முகநூலில் தர இருப்பதால் இரண்டு அல்லது மூன்று தவணையாகத் தர உள்ளேன். தொடர்ந்து வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.)
கே.கே : நான் மருத்துவத் துறையைச் சார்ந்தவன். நான் அதிகமாகவே படித்திருக்கிறேன். உடல் பயிற்சி செய்வதன் மூலமும், தேவைக்கேற்ப உடலைப் பரிசோதனை செய்வதன் மூலமும் நான் ஒழுங்கைக் கடைப்பிடித்து வருகிறேன்.
மஹா : ஆனால் மனதைத் தொட்டு சொல்லுங்கள். நீங்கள் விரும்புவது என்ன?
கே.கே : உண்மையை அறிய விரும்புகிறேன்.
மஹா : உண்மையை அறிய என்ன விலை கொடுக்க விரும்புகிறீர்கள்? எதாவது விலை உண்டா?
கே.கே : அதற்கு தியரிப்படி எதாவது விலை கொடுக்கத்தான் விரும்புகிறேன். இந்த வாழ்க்கையில் திரும்பவும் திரும்பவும் உண்மைக்கும் எனக்கும் வாழத் தூண்டப்படுகிறேன். ஆசை என்னை எடுத்துக்கொண்டு போய்விடும்.
மஹா : உங்களுடைய ஆசைகளை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள், உண்மை நிலையை நீங்கள் உணரும்வரை. ஆசைப்படுவது தப்பில்லை. ஆனால் அதன் குறுகியத்தன்மையும், சின்னத்தனமும்தான் தப்பு. ஆசை என்பது பக்தி. உண்மைநிலைக்காக பக்தியைச் செலுத்துங்கள். எல்லையில்லா, பிரபஞ்சத் தன்மைக்காக. ஆசையை அன்பாக மாற்றுங்கள். நீங்கள் வேண்டுவது சந்தோஷமாக இருப்பது. எல்லாவிதமான உங்கள் ஆசைகளும், நீங்கள் நீண்டகாலமாக ஏங்கிக்கொண்டிருக்கும் சந்தோஷத்திற்குத்தான். அடிப்படையில் நீங்கள் நன்றாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறீர்கள்.
கே.கே : எனக்குத் தெரியும், நான் அப்படி இருக்கக்கூடாதென்று..
மஹா : பொறுங்கள் . யார் சொன்னார்கள் நீங்கள் ஆசைப்படக்கூடாதென்று? என்ன தப்பு ஆசைப்படுவதால்?
கே.கே : எனக்குத் தெரியும், ஆன்மா போகவேண்டும்.
மஹா : ஆனால், ஆன்மா இருக்கிறது; உங்கள் ஆசைகளும் இருக்கின்றன. நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது கூட இருக்கிறது. எதனால்? ஏனென்றால் நீங்கள் உங்களை விரும்புகிறீர்கள். கெட்டிக்காரத்தனமாய் உங்களை விரும்புகிறீர்கள். என்ன தப்பு என்றால் முட்டாள்தனமாய் உங்களை நீங்கள் விரும்புவதுதான். அதனால் நீங்கள் துன்பத்தை அடைகிறீர்கள். உங்களை கெட்டிக்காரத்தனமாய் நேசியுங்கள். எளிமையாக இருப்பதும், அதிக ஈடுபாட்டுடன் இருப்பதும் சந்தோஷத்தைத் தேடும் நோக்கத்தில்தான். அதிக ஈடுபாடுடன் இருப்பது முட்டாள்தனமான வழி, எளிமையாக இருப்பது கெட்டிக்காரத்தனமான வழி.
கே.கே : எளிமையாக இருப்பதென்றால் என்ன?
மஹா : நீங்கள் ஒரு அனுபவத்திற்குள் போய்விட்ட பிறகு, திரும்பவும் அதே அனுபவத்திற்குப் போகாமலிருப்பது எளிமையான வழி. தேவையில்லாதவற்றில் ஈடுபடாமலிருப்பது எளிமையான வழி. இன்பத்தையும் துன்பத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்காமலிருப்பது எளிமையான வழி. எப்போதும் எல்லாவற்றையும் உங்கள் ஆஞ்ஞைக்கு உட்பட்டுக் கொண்டுவருவது எளிமையான வழி. ஆசைப்படுவது தப்பில்லை. வாழ்க்கை முழுவதும் அறிவாலும், அனுபவத்தாலும் வளர வேண்டுமென்று
அவா ஏற்படுவதுண்டு. நாம் எதுமாதிரி விருப்பப்படுகிறோமோ அதுதான் தவறாகப் போய்விடுகிறது. யோசனை செய்து பாருங்கள். சின்ன விஷயங்களான உணவு, பாலுணர்வு, அதிகாரம், புகழ் - உங்களை ஏமாற்ற சந்தோஷத்தைத் தரும். ஆனால் உண்மையாகவே ஆழமானதாகவும், விஸ்தாரமானதாகவும் உங்களின் உண்மையான ஆன்மாதான் எப்போதும் உங்களை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும்.
கே.கே : அடிப்படையில் ஆன்மாவின் அன்பை வெளிப்படுத்தும் ஆசையினால் தவறில்லை. ஆனால் ஆசையை எப்படி சமாளிப்பது?
மஹா : உங்கள் மனதில் உள்ள ஆழமான ஆர்வங்களுடன் உங்கள் வாழ்க்கையைக் கெட்டிக்காரத்தனமாய் வாழப் பழகிக்கொள்ளுங்கள். நீங்கள் என்ன பெரிதாய் விரும்பப் போகிறீர்கள்? முழுமையை அல்ல. நீங்கள் ஏற்கனவே முழுமையானவர். நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்களென்றால், உங்கள் செயல் மூலம் வெளிப்படுத்துவதை. இதற்கு உங்களுக்கு உடலும் மனமும் தேவைப்படும். அவற்றை எடுத்துக்கொண்டு உங்களுக்கு அவை பணிசெய்யும்படி மாற்றுங்கள்.
கே.கே : யார் இங்கே செயல்படுத்துபவர்? யார் உடலையும் மனதையும் கையாள்வது?
மஹா : உள்ளேயும் வெளியேயும் உள்ள கருவிகளைப் பயன்படுத்தி, உண்மையான மனம்தான் நம்பிக்கையான பணியாளாக ஆன்மாவிற்கு இருக்கிறது. தேவைக்கேற்ப பயன்படுபடியாக இருக்கிறது.
கே. கே : அவற்றின் தேவைகள்தான் என்ன?
மஹா : ஆன்மா என்பது பிரபஞ்சதன்மை கொண்டது. அவற்றின் குறிக்கோள்களும் பிரபஞ்சதன்மை கொண்டவை. எப்போதும் ஆன்மாவிற்கென்ற தனிப்பட்ட தன்மை கிடையாது. ஒரு ஒழுங்கான வாழ்க்கைமுறையை வாழுங்கள். ஆனால் அதுதான் உங்கள் குறிக்கோள் என்று எண்ணாதீர்கள். ரொம்ப துணிச்சலான செயலுக்கு அதுதான் ஆரம்பமாக இருக்கும்.
கே கே : திரும்ப திரும்ப இந்தியாவிற்கு வரும்படி நீங்கள் அறிவுரை கூறுவீர்களா?
மஹா : நீங்கள் அக்கறையுடன் இருந்தால், நீங்கள் எங்கு நகர்வதற்கும் தேவை இருக்காது. எங்கிருந்தாலும் நீங்கள் நீங்களாகவே இருப்பீர்கள். உங்களுக்குத் தேவையான சூழலை உருவாக்கிக் கொள்வீர்கள். இடம் விட்டு இடம் பயணம் மேற்கொள்வது எந்தவித முக்தியையும் உங்களுக்குத் தராது. நீங்கள்
உடல் மட்டுமன்று. உடலை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இழுத்துக்கொண்டு போவது உங்களை எங்கேயும் கொண்டு செல்லாது. üமனதை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்ý என்பதில்தான் உங்கள் மனதை தடங்களின்றி சுழலவிடவேண்டும்.
கே.கே : நான் சுதந்திரமானவன் என்றால் ஏன் ஒரு உடலில் இருக்க வேண்டும்?
மஹா : நீங்கள் உடலில் இல்லை, உடல் உங்களிடம் இருக்கிறது. மனமும் உங்களிடம் உள்ளது. உங்களுக்காக அவை ஏற்பட்டுள்ளன. அவை இருப்பதால் உங்களுக்கு ஆச்சரியமூட்டுபவையாக இருக்கின்றன. உங்களுடைய உண்மையான தன்மை அளக்கமுடியாத அளவிற்கு வாழ்க்கையில் திளைப்பது. இது முழுவதும் அன்புமயமானதும், உற்சாகமுள்ளதாகவும் உள்ளது. தன்னிடம் விழும் எல்லாவிதமான அவதானிப்புகள்மீதும் தன்னுடைய சக்தியை வெளிப்படுத்துகிறது. அதற்கு அசிங்கமும் கெட்டதும் தெரியாது. அது நம்புகிறது. அன்பு செலுத்துகிறது. உங்களுடைய உண்மை சொரூபம் தெரியாமல், உங்களை மாதிரி இருப்பவர்கள் எவ்வளவு தூரம் இழக்கிறீர்களென்று. நீங்கள் உடலும் இல்லை, மனமும் இல்லை. நீங்கள் எண்ணையும் இல்லை, நெருப்பும் இல்லை. அவற்றின் விதிகள்படி அவை தோன்றுகின்றன, மறைந்துவிடுகின்றன.
உங்களுடைய உண்மையான ஆன்மாவை விரும்புகிறீர்கள். நீங்கள் என்ன செய்தாலும் உங்களுடைய சந்தோஷத்திற்காகச் செய்கிறீர்கள். உங்களுடைய அடிப்படையான விழைவு, நீங்கள் கண்டுபிடித்து, அறிந்துகொண்டு, அதைச் செறிவூட்டுவதாகும். காலம் காலமாக நீங்கள் உங்களை விரும்புகிறீர்கள். ஆனால் புத்திசாலித்தனமாக இல்லாமல். உங்கள் உடலையும், மனதையும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துங்கள், உங்களுடைய ஆன்மாவின் சேவைக்காக. அவ்வளவுதான். உங்களுக்குள் உண்மையாக இருங்கள். முழுவதுமாக உங்கள் ஆன்மாவை நேசியுங்கள். மற்றவர்களை உங்களை மாதிரி நேசிப்பதாகச் சொல்லி நடிக்காதீர்கள். அவர்களும், நீங்களும் ஒன்று என்பதை உணராதவரை நீங்கள் அவர்களிடம் அன்பு செலுத்த முடியாது. நீங்கள் எதுவாக இல்லையோ அது இருப்பதாக எண்ணி நடிக்காதீர்கள். அதேபோல் நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அதை மறுக்காதீர்கள். நீங்கள் மற்றவர்களை நேசிப்பதென்பது உங்களுடைய சுய அறிவால் மட்டும்தான், அவற்றின் செயல்பாடுகளால் அல்ல. சுய அறிவு இல்லாமல் எந்தப் புனிதமும் நியாயமானதல்ல. எல்லோருக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கை ஓட்டம்தான் ஓடிக்கொண்டிருப்பதாக நீங்கள் நினைத்தீர்களென்றால், எல்லோரையும் இயல்பாகவும், இயற்கையாகவும் நேசிப்பீர்கள். முழுவதுமாகவும், ஆழமானதாகவும் நீங்கள் உங்களை விரும்புனீர்களென்றால், நீங்கள் உணர்வீர்கள், ஒவ்வொரு உயிரனமும், பிரபஞ்சம் முழுவதும் உங்களுடைய அக்கறையுடன் சேர்ந்துவிடுமென்பதை. ஆனால் நீங்கள் உங்களைத் தனிமைப்படுத்திப் பார்த்தீர்களென்றால், நீங்கள் யாரையும் நேசிக்க மாட்டீர்கள், மேலும் பயப்படவும் ஆரம்பிப்பீர்கள். தனிமை பயத்திற்குக் காரணமாகிறது. பயத்தின் ஆழம் தனிமையை அதிகரிக்கிறது. இது ஒருவிதமான சுழற்சி. சுய அறிவுதான் அதை உடைக்கும். உறுதியாக அதை நோக்கி செல்லுங்கள்.
தமிழில் : அழகியசிங்கர்
Comments