Skip to main content

ஸ்ரீநிஸகர்கதத்தா மஹாராஜ் - 1




அழகியசிங்கர்




ஸ்ரீநிஸகர்கதத்தா மஹாராஜ் அவர்கள் 17 ஏப்ரல் மாதம் 1887 அன்று ஹனுமான் ஜெயந்தி அன்று பிறந்தார். அவர் இயற்பெயர் மாருதி. 84 வயதில் 1981ஆம் ஆண்டு  நவம்பர் மாதம் மறைந்தார்.
நான் ஏற்கனவே நான்தான் அது என்ற அவருடைய நூலிலிருந்து சில பகுதிகளைத் தமிழில் மொழிபெயர்த்து விருட்சத்தில் வெளியிட்டுள்ளேன்.
அவருடைய பிறந்த தினத்தை ஒட்டி அவருடைய மொழி பெயர்ப்பைத் தருகிறேன்.  முகநூலில் தர இருப்பதால் இரண்டு அல்லது மூன்று தவணையாகத் தர உள்ளேன்.  தொடர்ந்து வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

ஸ்ரீநிஸகர்கதத்தா மஹாராஜ்
கேள்வி கேட்பவர் : தொழில் ரீதியாக நான் ஒரு மருத்துவன்.  நான் அறுவை சிகிச்சைச் செய்பவனாக என் தொழிலை ஆரம்பித்தேன்.  பின், மனோதத்துவ நிபுணனாகத் தொடர்ந்தேன்.  மேலும் நான் சில மனோதத்துவப்  புத்தகங்களையும் எழுதியிருக்கிறேன்.  நம்பிக்கையின் மூலம் குணப்படுத்த முடியுமென்று நம்புகிறவன்.  நான் உங்களைப் பார்க்க வருவதற்கு முக்கிய காரணம், ஆன்மிக விதிகளைக் கற்பதற்குத்தான்.

ஸ்ரீநிஸகர்கதத்தா மஹாராஜ்  : ஒரு நோயாளியின் நோயைத் தீர்க்குமுன் நீங்கள் எந்தவிதமாக நோயைத் தீர்க்க முயற்சி செய்கிறீர்கள்? நோயைத் தீர்ப்பது என்றால் என்ன?  எப்போது சொல்வீர்கள், ஒரு மனிதன் குணமடைந்துவிட்டானென்று?

கே.கே : நான் நோயைக் குணப்படுத்துவதோடல்லாமல், மனதிற்கும் உடலுக்கும் உள்ள தொடர்பை சரி செய்வேன்.  மனதைச் சரிசெய்ய முயற்சி செய்வேன்.

மஹாராஜ் : மனதிற்கும் உடலுக்கும் உள்ள தொடர்பை நீங்கள் ஆராய்ச்சி செய்வீர்களா?   எந்தத் தருணத்தில் அவை ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டுள்ளது?

கே.கே : உடலுக்கும், உணர்வுநிலைக்கும் இடையில் மனது 
உள்ளது.

மஹாராஜ் : உடல் உணவால்தானே உருவாக்கப்பட்டுள்ளது?
உணவு இல்லாமல் மனம் இருக்க முடியுமா?

கே.கே : உணவால்தான் உடல் உருவாக்கப்பட்டு நிலைத்திருக்கிறது.  உணவு இல்லாவிட்டால் மனமும் பொதுவாக தளர்ந்து விடும்.  ஆனால் உணவு மட்டுமல்ல மனம்.  வேறு ஒன்று ஒரு மனம் உடலில் இயங்கக் காரணியாக இருக்கிறது.  அப்படி மாற்றக்கூடிய ஒன்று என்ன?
மஹா : மரம் நெருப்பை உண்டாக்கக் காரணமாக இருந்தாலும், மரம் நெருப்பாகாது.  அதேபோல், மனதை உருவாக்க
உடல் காரணமாக இருந்தாலும் அது மனமாகாது.  ஆனால் யாருக்கு மனம் தெரியவரும்? யோசனைகளையும், உணர்வுகளையும் ஏற்றுக்கொள்பவர்களை நீங்கள் மனம் என்று கருதுகிறீர்களா?  மரம் இருக்கிறது, நெருப்பும் இருக்கிறது, கூடவே நெருப்பைப் பயன்படுத்திக் கொள்பவரும் இருக்கிறார்.  யார் மனதை பயன்படுத்திக்கொள்கிறார்?  அப்படிப் பயன்படுத்திக் கொள்பவருக்கும் உணவுதான் அடிப்படையா? அல்லது அது இல்லாமல் தனிமையாக இயங்கக் கூடியவரா?

கே கே : மனதை உணரக்கூடியவர் தனிமையாக இயங்கக் கூடியவர்.

மஹா : எப்படி உங்களுக்குத் தெரியும்?  உங்களுடைய அனுபவத்திலிருந்து பேசுங்கள்.  நீங்கள் உடலும் இல்லை, மனமும் இல்லை.  நீங்கள் அப்படிச் சொல்லலாம்.  எப்படித் தெரியும்?

கே.கே : எனக்குத் தெரியாது.  ஆனால் அப்படி ஊகிக்கிறேன்.

மஹா : சத்தியம் நிலையானது.  உண்மை மாற்றமில்லாதது. எது மாறக்கூடியதோ அது உண்மையில்லை.  எது உண்மையோ அது மாற்றம் அடையாதது.  இப்போது சொல்லுங்கள், எது உங்களிடம் மாற்றம் இல்லாதது?  உணவு இருக்கும்வரை, உடலும், மனமும் இருக்கிறது.  உணவு நின்றவுடன், உடல் அழிந்து விடுகிறது.  மனமும் கரைந்துவிடுகிறது.  ஆனால் உற்று நோக்குபவனும் அழிந்து விடுகிறானா?

கே கே : இல்லை என்றுதான் நான் ஊகிக்கிறேன்.  ஆனால் என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை.

மஹா : நீங்கள்தான் அதற்கு ஆதாரம். உங்களுக்கு வேறு எந்த ஆதாரமும் கிடைக்காது.  நீங்கள் தான்.  உங்களுக்குத் தெரியும் உங்களை.  நீங்கள் உங்களை விரும்புகிறீர்கள்.  என்னதான் மனது  செய்தாலும், அது தன்னுடைய விருப்பத்திற்காகச் செய்யும்.  ஆன்மாவின் இயற்கை அன்புதான்.  அன்பு செலுத்திக் கொண்டிருந்தது, அன்பு செலுத்திக்கொண்டிருக்கும், அன்பு செலுத்தும்.   ஆன்மாதான் உடலையும், மனதை நெருக்கமாகவும்,
ஆர்வமுள்ளதாகவும் மாற்றும். 

கே கே : ஆன்மா என்பது உடலாகவும், மனதாகவும் இல்லையென்றால், அது உடல் இல்லாமலும், மனம் இல்லாமலும் இயங்க முடியுமா?

மஹா : ஆமாம்.  நிச்சயமாக இருக்கும்.  உண்மையில் அது  அனுபவமாக உள்ளது.  மனமும் உடலையும் இல்லாமல் தனியாக இயங்கக் கூடியது.  அது விழிப்புணர்வுடன் இயங்கிக் கொண்டிருப்பது. 
விழிப்புணர்வுடன் இருப்பது பேரின்பம்.

கே கே : உங்களுக்கு வேண்டுமென்றால் உண்மையான அனுபவமாக இருக்கலாம்.  ஆனால் எனக்கில்லை.  எப்படி நான் அதே அனுபவத்தைப் பெறுவது?  என்ன பயிற்சிகளை எடுத்துக்கொள்வது?  என்ன நடைமுறையைப் பின்பற்றுவது?

மஹா : நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  நீங்கள் உடலும் இல்லை. மனமும் இல்லை.   ரொôம்பவும் ஜாக்கிரதையாகக் கவனிக்க வேண்டும்.  உடலாலும், மனதாலும் பாதிப்பு இல்லாமல் வாழ வேண்டும்.  முழுவதுமாகவும், தனியாகவும், அதாவது நீங்கள் இறந்து போனால் எப்படியோ அப்படி.  இதற்கு என்ன அர்த்தமென்றால் உங்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை, இந்த உடலாலோ மனதாலோ..

கே.கே : பயங்கரமானது

மஹா : நான் உங்களைத் தற்கொலை செய்துகொள்ளும்படி சொல்லவில்லை.  உங்களாலும் முடியாது.  நீங்கள் உடலை மட்டும் கொலை செய்யலாம்.  ஆனால் மூளையின் தொடர்ச்சியை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.  நீங்கள் நினைப்பதுபோல் ஒரு மனிதனைத் தடுத்து நிறுத்தவும் முடியாது.  எந்தப் பாதிப்பும் ஏற்படாத மாதிரி அப்படியே இருங்கள்.  இப்படி தனியாக உடலுக்கும், மனதுக்கும் தொடர்பு இல்லாதவாறு இருக்கும்போது, நீங்கள் உடலும் இல்லை, மனமும் இல்லை.  நீங்கள் உங்களுடைய உண்மையான தன்மைக்கு ஆட்படுவீர்கள்.  உங்கள் உடலுக்கும், மனதிற்கும் என்ன நடப்பதென்பதை மாற்றுவதற்கு உங்கள் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம்.  ஆனால், நீங்கள்தான் உடல் அல்லது மனம் என்று
கற்பனை செய்வதை நிறுத்தி விடலாம். என்னதான் நடந்தாலும், உங்கள் உடலுக்கோ மனதிற்கோ நடப்பதாகவும் உங்களுக்கில்லை என்றும் அசையாமல் இருங்கள்.   
சொல்லுங்கள் என்ன முயற்சியை நீங்கள் மேற்கொண்டீர்கள்?  உடலையும், மனதையும் மாற்றமே இல்லாத ஆன்மாவுடன் பார்ப்பதற்கு.
                                                                                      (இன்னும் வரும்)

Comments