Skip to main content

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் ...16

அழகியசிங்கர்





புத்தகக் காட்சியை இரண்டு விதமாகப் பயன்படுத்துகிறேன். விருட்சம் வெளியீடாக வந்துள்ள புத்தகங்களையும் விற்பனைக்காகக் கொடுத்துள்ள புத்தகங்களையும் விற்கிறேன்.  இது முதல் வகை.  இதில் வெற்றியோ தோல்வியோ நான் பொருட்படுத்தப் போவதில்லை. மரத்தின் முன் உறுதிமொழி எடுத்துள்ளதால் இது குறித்து எழுதப் போவதில்லை. 
நான் புத்தகங்களை வாங்குகிறேன்.  இது இரண்டாவது வகை. இதனால் வீட்டில் எனக்கு வசவு கிடைக்கிறது.  படிக்க வேண்டும் என்கிற புத்தகங்களை வாங்குகிறேன்.  கிட்டத்தட்ட நான் வாங்கிக் குவிக்கும் புத்தகங்கள், விற்கும் புத்தகங்களை விட அதிகமாகப் போய்விடும்.  அதனால் இரண்டு விதங்களில் புத்தகக் காட்சி எனக்கு முக்கியமாகப் படுகிறது.  ஒன்று நான் விற்க முயற்சி செய்கிறேன்.  இரண்டு  வாங்கிச் சேகரிக்கிறேன்.
இப்போது என் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் இன்னொரு எழுத்தாளர் புத்தகங்களைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன்.  நேற்று அம்ஷன் குமார் புத்தகத்தைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன். 
இன்று விமலாதித்தன் மாமல்லன்.  அவருடைய மூன்று புத்தகங்களை விருட்சம் ஸ்டால் விற்கிறது.  1. விமலாதித்த மாமல்லன் கதைகள். 2. புனைவு என்னும் புதிர். 3. ஷோபாசக்தியின் கதைகளை வைத்து புனைவு என்னும் புதிர் இரண்டாம் பாகம். 
முதல் புத்தகமான விமாலாதித்த மாமல்லன் கதைகளை எடுத்துக்கொள்வோம்.  விமலாதித்த மாமல்லன் கதைகள் என்ற புத்தகத்தை எடுத்துக்கொள்வோம்.  344 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தில் இரண்டு குறுநாவல்கள், நான்கு நெடுங்கதைகள், 24 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு.
1980லிருந்து 1994வரை எழுதப்பட்ட சிறுகதைகள், நெடுங்கதைகள், குறுநாவல்கள் அனைத்தும் அடங்கிய தொகுப்பு.  சிறுமி கொண்டு வநத் மலர் என்ற கதையை ஒருவர் கட்டாயம் வாசிக்க வேண்டும். 
விமலாதித்த மாமல்லனின் இன்னும் இரண்டு புத்தகங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.  ஒன்று புனைவு என்னும் புதிர்.  இத் தொகுதியில் உள்ள கட்டுரைகள் தமிழ் இந்துவில் தொடராக வந்தது.  ஆனால் இப் புத்தகத்தில் சிறுகதையும் அந்தச் சிறுகதையைப் பற்றி அவருடைய அலசலையும் முன் வைக்கிறார்.  உதாரணமாக வண்ணநிலவனின் கதையான மிருகம் பற்றி சொல்லும்போது மிருகம் என்ற கதையையும் அது குறித்து மாமல்லனின் அலசலும் வெளிவருகிறது.  இது முக்கியமான விஷயமாக எனக்குப் படுகிறது.  அதேபோல் ஷோபாசகத்தியின் 12 கதைகளும் அவை குறித்த விமலாதித்த மாமல்லனின் பார்வையும் வெளிப்படுகிறது. 
இந்த மூன்று புத்தகங்களும் விற்பனைக்கு  விருட்சம் ஸ்டால் 403ல் உள்ளது.  வாங்க வரவும்.
 


Comments