Skip to main content

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் ...24

அழகியசிங்கர் 


மரத்துக்கு முன்னால் நின்று இரண்டு உறுதி மொழிகளை எடுத்துக்கொண்டுதான் புத்தகக் கண்காட்சியை ஆரம்பித்தேன்.  மரம் முனக ஆரம்பித்தது இன்று.  என்ன என்று கேட்டேன்?  நீ மீறி விட்டாய் என்றது மரம்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை.  நான் ஜாக்கிரதையாக இருக்கிறேன்.  மீற வில்லை என்றேன்.
பொய் சொல்லாதே.  நீ மீறி விட்டாய்.  உன்னை அறியாமல் மீறி விட்டாய்.
நான் யோசித்தேன்.  மரம் சொல்வது உண்மை என்று எனக்குத் தோன்றியது.
இரண்டு நாட்களுக்கு முன்னால் ஒரு நண்பர் போனில் கேட்டார், 'புத்தகக் காட்சி எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது,?' என்று.
'ஆமாம், போய்க்கொண்டிருக்கிறது.  என் முன்னால் பலர் முன்னாலும் பின்னாலும் போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள்.  என் ஸ்டாலுக்குத் தான் வரவில்லை,' என்றேன்.
அதைத்தான் மரம் ஞாபகப்படுத்தியது.  'சாரி,' என்றேன் மரத்திடம்.
நான் இன்று எடுத்துக்கொண்டு எழுத உள்ள புத்தகங்கள் மூன்று.  ஒன்று இரா முருகனின் 1975. இரண்டு வண்ணதாசனின் மதுரம். மூன்று சாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்கள் 3 வது தொகுதி.
இப்போது நேரமில்லை.  குளித்துவிட்டு ஓட வேண்டும் புத்தக அரங்கிற்கு.  முடிந்தால் இரவு எழுதப் பார்க்கிறேன்.

Comments