Skip to main content

கவிதைப் புத்தகங்களும் சில உண்மைகளும்....

அழகியசிங்கர்




விருட்சம் பதிப்பகத்தின் ஆரம்பத்தில் கவிதைப் புத்தகம் ஒன்றை கொண்டு வந்தேன்.   அது முதல் புத்தகமும் கூட.  500 பிரதிகள் அச்சடித்து வைத்திருந்தேன்.  அந்தத் தொகுதியைப் பார்த்தவர்கள் அதை எழுதிய கவிஞரை எல்லோரும் பாராட்டினார்கள்.  இன்னும் கூட பாராட்டுகிறார்கள். ஆனால் அந்தப் புத்தகத்தை 10 ஆண்டுகளாக முயற்சி செய்து ஒருவாறு விற்றேன்.  பெரும்பாலும் இலவசமாகக் கொடுத்தேன்.  விற்கிற இடத்தில் கொடுத்தப் புத்தகப் பிரதிகளை அவர்கள் விற்று பணம் கொடுப்பதில்லை. நானும் கண்டுகொள்வதில்லை.

அதன்பிறகு நான் கொண்டு வந்த பல கவிதைத் தொகுதிகளின் நிலை இன்னும் மோசம்.  எல்லோரும் கவிதைப் புத்தகங்களை வாங்காமல் சாட்டையால் அடிப்பதுபோல் அடித்தார்கள்.  நானும் திருந்த வேண்டுமே திருந்தவில்லை.  இன்னும் இன்னும் கவிதைப் புத்தகங்களைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறேன்.  இப்போது ஒரு உண்மை தெரிந்து விட்டது.  கவிதைப் புத்தகம் வாங்கும் வாசகர்களுக்கு கையளவு புத்தகங்களையே காட்டுங்கள் என்பதுதான் அந்த உண்மை.

நான் திரும்பவும் உமாபதி புத்தகத்தையும் நகுலனின் புத்தகத்தையும் அப்படித்தான் கொண்டு வந்துள்ளேன்.  விரல்களை சொடுக்கிற அளவு எட்டிவிட்டேன்.  தொகுப்பு கவிதை நூல்களையும் கொண்டு சேர்ப்பது சிரமமாக இருக்கிறது.  ஆனால் ஞானக்கூத்தனின் கவிதைத் தொகுதியும், பெருந்தேவியின் கவிதைத் தொகுப்புகளும் என்னுடைய விருட்சம் ஸ்டாலில் விற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.  ஆனால் கையளவு கவிதைத் திட்டம் என்னளவில் உண்மை என்றுதான் நினைக்கிறேன். 

விளையாட்டு


தம்ளர் காப்பியில் ஓர் எறும்பு நீந்திச் செல்கிறது
கடவுளைப் போல் நான் சக்தியோடிருக்கிற
அபூர்வத் தருணம்
எறும்பே இன்னும் படபடத்து நீந்தேன்
உன் ஆறு கால்களில் ஏதாவது இரண்டைத்
தூக்கித்தான் கும்பிடேன்

(பெருந்தேவியின் 'பெண் மனசு ஆழம் என 99.99 சதவிகித ஆண்கள் கருதுகிறார்கள்') 

Comments