Skip to main content

எம் ஜி சுரேஷ் சில நினைவுகள்...

அழகியசிங்கர்


ஒரு எழுத்தாளரைப் பற்றி யாராவது எதாவது ஒன்று சொல்ல வேண்டுமென்றால், அவர் எதாவது பரிசு பெற்றிருக்க வேண்டும்.  இல்லாவிட்டால் மரணம் அடைந்திருக்க வேண்டும்.  சமீபத்தில்  பரிசுப்பெற்ற சிறுகதைத் தொகுதி ஒன்று 5000 பிரதிகள்மேல் விற்றதற்குக்.  காரணம், அவர் சாகித்திய அக்காதெமி விருதையும், விஷ்ணுபுர விருதையும் ஒரு சேரப் பெற்றதால்.
வித்தியாசமான பல புதினங்களையும், சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதிக் குவித்த எம் ஜி சுரேஷ் என்ற எழுத்தாளர் சிங்கப்பூரில் அவர் பெண் வீட்டில் மரணம் அடைந்து விட்டார். அவருக்கு இன்னும் அதிகமாக எழுத வேண்டுமென்ற தணியாத தாகம்  உண்டு.  அவர் கடைசியாக எழுதிய நாவல் தந்திர வாக்கியம்.    அ சஞயஅக  ஐச ஊதஅஎஙஉசபந    என்று இந் நாவலைப் பற்றி சுரேஷ் எழுதியிருப்பார். அதேபோல் 37 என்ற நாவலில் பல குரல்களில் ஒரு அறிவியல் புனைகதை என்று எழுதியிருப்பார்.  சிலந்தி என்ற நாவலை ஒரு துப்பறியும் கதையாக எழுதியிருப்பார். கனவுலக வாசியின் ஒரு நனவுக் குறிப்புகள் என்ற சிறுகதைத் தொகுப்பும் கொண்டு வந்திருக்கிறார்.
சுரேஷ் ஒரு வித்தியாசமான எழுத்தாளர்.  சாதாரணமாக யோசிக்காமல் அசாதாரணமாக யோசித்து கதை எழுதுபவர்.  கோட்பாடு ரீதியாக சிந்திக்கவும் எழுதவும் தெரிந்தவர்.  
இவருடைய பின் நவினத்துவம் என்றால் என்ன? என்ற புத்தகம் முக்கியமானது. 
கோட்டபாடு ரீதியாக சிந்தித்த சுரேஷ், தனியாகத்தான் இயங்கி உள்ளார்.   அவர் யாருடனும் கூட்டு சேரவில்லை என்றே தோன்றுகிறது.  அவர் எழுத்துக்களை திரும்பவும் எடுத்து தூசித் தட்டும்போதுதான் ஒரு அற்புதமான மனிதரை இழந்துவிட்டோம் என்று தோன்றுகிறது.  
எப்போதும் தன்னைப் பற்றி பெருமை அடித்துக்கொள்ளத் தெரியாதவர் சுரேஷ்.  ஆனால் அவர் சாதனைகளை நாம் உற்று நோக்கினால், பெருமை அடித்துக்கொள்ள வேண்டிய எத்தனையோ விஷயங்கள் அவரிடம் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. 
அவர் கடைசியாக எழுதிய தந்திர வாக்கியம் என்ற நாவலைக் குறித்துப் பேசுவதற்கு எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.  வெகு ஆண்டு கழித்து அப்போதுதான்  'சுரேஷை திரும்பவும் சந்திக்கிறேன்.  அதே சிரித்த முகம், மெலிதான பேச்சு.'   யாரையும் அவர் கோபப்படும்படி பேசி நான் பார்த்ததில்லை.  அவர் நாவலைக் குறித்து பேசியதை அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.   ஒன்றும் சொல்லவில்லை.  
கோட்பாடு ரீதியாக சிந்திக்கத் தெரிந்தவர் என்றாலும் யாருடனும் அவர் ஒன்ற மாட்டார்.  தன் போக்கிலேயே  எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டு போவார்.  பின் நவீநனத்துவம் என்றால் என்ன என்பது அவருடைய முக்கியமான புத்தகம். அந்தப் புத்தகத்தில் அமைப்பியல் என்றால் என்ன, பின் அமைப்பியல் என்றால் என்ன என்பதையெல்லாம் சுலபமாகப் படிப்பவருக்குப் புரியும்படி விளக்கிக் கொண்டு போவார்.  யார் வேண்டுமானாலும் அந்தப் புத்தகத்தைப் படித்துப் பலவற்றைப் புரிந்து கொண்டுவிட முடியும்.
கோட்பாடு ரீதியாக சிந்திப்பவர்கள் எல்லோரும் படிப்பவர்களை ஒரு குழப்பு குழப்புவார்கள்.  ஆனால் சுரேஷ் வேற விதம்.  அவர் அதிகம் படித்தவர்.  'அடலாண்டிஸ் மனிதன்,' என்ற நாவல் மூலமாகத்தான் அவரைப் பற்றி எல்லோரும் பேச ஆரம்பித்தார்கள்.  
எம் ஜி சுரேஷ் அவருடைய கட்டுரைத் தொகுப்பில் 'அடலாண்டிஸ் மனிதன்' என்ற நாவலை எழுத என்ன முயற்சி செய்துள்ளார் என்பதை இப்படிக் குறிப்பிடுகிறார்: 
'மீண்டும் மீண்டும் வாசிக்கப்பட வேண்டுமென்றால், எளிமையான நடையில் சரளமாக எழுதப்பட வேண்டும் என்று தோன்றியது.  எனவே, எளிய நடையில் எழுதினேன்.  அப்போதுதான் வாசகனால் சலிப்படையாமல் வாசிக்க முடியும்.  ஆல்பெர் காம்யூ வெகுஜனப் பத்திரிகைக்கான எளிய நடையில்தான் அந்நியன் போன்ற நாவல்களை எழுதினார் என்று பிரெஞ்ச் அறிந்த நண்பர்கள் முலம் அறிந்திருக்கிறேன்.  அந்த நடையில் எழுதியே  அவரால் சர்வதேச அங்கீகாரம் பெறக்கூடிய அளவுக்கு உலகத்தரமான இலக்கிய அந்தஸ்தைப் பெற முடிந்தது.   ஆதலால் இந்த எளிய நடை இந் நாவலின் இலக்கிய மதிப்பை நீர்த்துப் போகச் செய்யாது என்று நம்பினேன்.' என்று விவரித்துக்கொண்டு போகிறார். 
உண்மையில்  'அடலாண்டிஸ் மனிதன்'  நாவல் வந்தபோது சில மாதங்கள் யாரும் இதைக் கண்டுகொள்ளவில்லை.  அதன் பிறகு இந்த நாவலுக்கு பெரிய வரவேற்பு இருந்தது என்று குறிப்பிடுகிறார்.   
இந்தக் கட்டுரையை எழுதும்போது திரும்பவும் இந்த நாவலை நான் படிக்க வேண்டுமென்று நினைக்கிறேன்.  தன்னுடைய கட்டுரை ஒன்றில்  நான் சொன்ன விஷயத்தை சுரேஷ் இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்.  
இந் நாவலை நகுலனின் நாவலோடு ஒப்பிடலாம் என்று நான் நவீன விருட்சத்தில் எழுதியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.  
சுரேஷ் பற்றி குறிப்பிடும்போது அவர் பல முயற்சிகளை தன் எழுத்தின் முலம் கொண்டு வந்துள்ளார்.  
'அரூபங்களாகக் கைகோர்த்துக் கனவுகளுடன் அலையும் என் முன்னோடிகளான 'போர்ஹேவும், கோஸின்ஸ்கியும்' என் முதுகுக்குப் பின்னால் நின்று மௌனமாக நான் எழுதுவதைக் கவனிக்கிறார்கள்.  மீசை மழிக்கப்பட்ட அந்த முகங்களில் புன்னகை அரும்புகிறது.
ஆனால், என் கையோ தொடர்ந்து எழுதிச் செல்கிறது.. என்கிறார் பரவசத்துடன்.'
'தந்திர வாக்கியம்' என்ற நாவலைப் படித்துவிட்டு நான் சில குறிப்புகளை எழுதியிருக்கிறேன்.  அதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.  
'தந்திர வாக்கியம்' என்ற நாவலும் துண்டாடப்பட்ட விவரணைகளைக் கொண்ட நாவல்தான். 
இந் நாவலில் இரண்டு விதமான வாழ்க்கை முறையைக் கொண்டு வருகிறார்.  ஒன்று தற்கால வாழ்க்கை முறை.  இன்னொன்று புத்தர் வாழ்ந்த கால வாழ்க்கை முறை.  ஐடி துறையில்  படுகிறபாட்டை ரொம்ப சுலபமாக சுரேஷ் விவரித்துக்கொண்டு போகிறார்.  நிகண்டன் என்பதுதான் நிக்கியின் நிஜமான பெயர்.  அப்பா ஜெயராமனுக்கும், இருளாயிக்கும் பிறந்த பையன்.  
இருட்டு ஒரு தருணம். வெளிச்சமும் ஒரு தருணம்.  இது ஒரு நிகழ்ச்சி.   மாறி மாறி நடக்கிறது என்கிறார் எம்.ஜி சுரேஷ்.  இந் நாவலைப் படிப்பது கூட ஒரு நல்ல தருணம் என்று எனக்குத் தோன்றுகிறது.  
இந் நாவலைப் படிக்கக் கொடுத்து  என்னை மதித்து என் அபிப்பிராயங்களைக் கேட்ட சுரேஷ் உயிரோடு இல்லை என்பதை  ஏற்றுக்கொள்ள என் மனது தயங்குகிறது.  ஆனால் அவர் உண்மையில் அவர் எழுத்துக்களில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். 
                      (மலைகள்.காம்மிற்காக எழுதப்பட்ட கட்டுரை இது)  

Comments