Skip to main content

தெரியாமல் திரு;ட்டுப் புத்தகங்களை வாங்கிவிட்டேன்


அழகியசிங்கர்




எங்கள் வீட்டுக் கூடத்தில் ஒரு பெரிய பஞ்சமுக ஆஞ்சிநேயர் படம் உள்ளது.   பெரிய படம்.  அவரிடம் மண்டிப்போட்டு வேண்டிக்கொண்டேன்.  நான் இனிமேல் புத்தகங்களை வாங்காமல் இருக்க வேண்டுமென்று.  இரண்டு பிரச்சினைகளில் நான் மாட்டிக்கொண்டு தவிக்கிறேன்.  ஒன்று புத்தகங்களை வாங்காமல் இருக்க என்னால் முடியவில்லை.  இரண்டாவது பிரச்சினை அப்படி வாங்குகிறப் புத்தகங்களைப் படிக்கவே முடிவதில்லை.

எங்கள் வீட்டில் உள்ளவர்கள் வன்முறைக்கு ஆளாகி விடுவார்கள் என்று பயப்பட வேண்டி உள்ளது.    நான் வாங்கிக்  குவிக்கும் புத்தகங்களைப் பார்த்து ஒரு பெரிய பிரளயமே வீட்டில் வெடிக்கப்போவதாக நினைக்கிறேன்.  அதனால்தான் பஞ்சமுக ஆஞ்சிநேயரை வணங்குகிறேன்.

எங்கள் மாம்பல பகுதியில் பலர் திடீர் திடீரென்று வீடுகளைக் காலி செய்துகொண்டு போய்விடுகிறார்கள்.  இன்னும் சிலர் இருக்கிற வீட்டைவிட்டு சின்ன வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்.  ஒரு குடும்பத்தில் புத்தகம் படிப்பவர் ஒருவர் நோய்வாய்பட்டு இல்லாமல் போகும் சூழ்நிலையில் அவர் வைத்துவிட்டுப் போன புத்தகங்களை ஒழித்துக் கட்ட முயற்சி செய்கிறார்கள். அவர்கள் அவ்வாறு செய்வதற்கு பழையப் பேப்பர்களை வாங்குபவர்கள் உதவி செய்கிறார்கள்.  
ஒரு கிலோ புத்தகத்திற்கு ரூ.7 கடைக்காரர்கள் கொடுக்கிறார்கள்.  புத்தகங்களை வைத்துக்கொண்டு தடுமாறும் மேலே குறிப்பிட்டவர்கள்  ஏதோ கிடைக்கட்டும் என்று கேவலமான விவைக்கு அதிகமாகப் பணம் செலவழித்து வாங்கியப் புத்தகங்களை கொடுத்து விடுகிறார்கள்.  உண்மையில் பாதுகாக்கப் பட வேண்டிய புத்தகங்களையும் கொடுத்து விடுகிறார்கள்.

இதைத் தடுக்க நினைத்து நான் மாம்பலம் டைம்ஸ் என்ற பத்திரிகையில் விளம்பரம் கொடுத்தேன்.  என் விளம்பரத்தைப் படித்து யாரும் பெரிய அளவில் புத்தகங்களை விற்க வரவில்லை.  என்னிடம் வந்திருந்தால் ஒரு நியாயமான விலைக்கு அந்தப் புத்தகங்களை வாங்கியிருப்பேன்.   அதனால் வேற வழி இல்லாமல் நானும் பேப்பர் கடைகளுக்குச் சென்று புத்தகங்களைச் சேகரிக்கும்படி ஆகி விடுகிறது.  

அவர்கள் நம்மிடம் வாங்கும் புத்தகங்கள் கிலோ ரூ.7 ஆனால் அப் புத்தகங்களை நம்மிடம் விற்கும்போது கிலோ ரூ.100.  இன்னும் சிலர் புத்தகங்களைப் பார்த்து ஒரு புத்தகத்திற்குப் பாதி விலை கேட்பார்கள்.  பின் இன்னும் விஷயம் தெரிந்துகொண்டு அப் புத்தகம் இப்போது அச்சடித்திருந்தால் என்ன விலை ஆகுமோ அந்த விலையில் பாதி பணம் கேட்பார்கள்.   மிரட்டுவார்கள்.  வாங்காவிட்டால் போ என்பார்கள்.  அப்படித்தான் நான் கோவிந்தன் தெருவில் உள்ள ஒரு கடைக்குச் சென்று புத்தகம் வாங்கப் பேரம் பேசினேன்.  அந்தக் கடைக்காரன் தாறுமாறாக விலை சொன்னான்.  நானும் விடவில்லை.  üüநீங்கள் கிலோ ஏழு ரூபாய்க்குப் புத்தகங்களை வாங்கிக்கொண்டு, அந்நியாயமாய் விலை சொல்கிறீர்களே,ýý என்றேன்.  வந்தது வினை.  அடுத்த முறை அந்தக் கடைக்காரனை நான் திரும்பவும் பார்த்தபோது, புத்தகங்கள் இல்லை போய்வா என்று துரத்திவிட்டான்.   நான் அந்தக் கடைக்காரனிடம் பேசிக்கொண்டிருந்த போது ஒரு இளைஞன் நிறையாப் புத்தகங்களை எடுத்துக்கொண்டு வந்து கடையில் போட வந்தான்.  நான் அவனைத் துரத்திவிட்டேன்.  üüஏன் புத்தகங்களைப் போடுகிறீர்கள்?  குறைவாகப் பணம் கொடுப்பார்கள்,ýý என்றேன்.  புத்தகத்தின் அருமை தெரிந்த என் மாதிரி ஒருவனை அவர்களுக்குத் தெரியவில்லையே என்று கவலைப்பட்டேன்.

உங்களுக்கு என்னிடம் ஒரு கேள்வி கேட்கத் தோன்றும்.   üநீங்கள் எதுமாதிரியான புத்தகங்களை வாங்குகிறீர்கள்..ý என்று.     படிக்க உகந்தப் புத்தகங்களைத்தான் வாங்குகிறேன்.  சிலசமயம் எதிர்பாராமல்  நல்ல புத்தகங்களும் கிடைத்து விடுகின்றன.   அதுமாதிரி புத்தகங்களை புதையல் மாதிரி எடுத்து வைத்துக்கொள்கிறேன்.  ஆனால் ஒரு உண்மையைச் சொல்கிறேன்.  என்னால் எல்லாவற்றையும் படிக்க முடிவதில்லை.  

அது என் குற்றம்தான்.  புத்தகங்கள் மீது உள்ள குற்றமல்ல.  என்னுடைய இந்தப் பலவீனத்தை வீட்டுள்ளவர்கள் நன்றாகப் புரிந்து கொண்டு விட்டார்கள். அதனால் மண்டிப் போட்டுக்கொண்டு பஞ்சமுக ஆஞ்சிநேயர் முன் அமர்ந்திருந்து கண்மூடி வேண்டிக்கொண்டேன்.

"பேப்பர் கடைகள், பிளாட்பாரங்களில் காணும் புத்தகங்களை வாங்காமல் இருக்க அருள் புரியுங்கள்," என்று வேண்டிக்கொண்டேன்.

ஆஞ்சிநேயர் என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை.

"என்ன நான் வேண்டிக்கொண்டிருக்கிறேன்..பதிலே காணோமே?" என்றேன் ஆஞ்சிநேயரைப் பார்த்து.

அவர் பதில் பேசாமல் புன்னகைப் புரிவதுபோல் தோன்றியது.

பக்கத்தில் என் மனைவி உட்கார்ந்திருந்தாள்.  அவள் ஆஞ்சிநேயரிடம், "இவர் புத்தகங்களே வாங்கவும் கூடாது, படிக்கவும் கூடாது," என்று வேண்டிக்கொண்டாள்.

நான் உடனே, "இவள் டிவியில் அழுகிற சீரியல்களைப் பார்க்கக் கூடாது," என்று வேண்டிக்கொண்டேன்.

ஆஞ்சிநேயர் ஒன்றும் சொல்லவில்லை.  ஆனால் லேசாக சிரிப்பதுபோல் தோன்றியது.

"ஆஞ்சிநேயரே நீங்கள் பேச மாட்டீரா?"

கொஞ்ச நேரம் கழித்து ஆஞ்சிநேயர் குரல் கொடுத்தார்.  

"நீ புத்தகம் வாங்கு,"

என்னால் நம்ப முடியாமல், "எங்கே வாங்குவது?" என்று ஆச்சரியத்துடன் கேட்டேன். 

"எந்த இடத்தில் புத்தகம் உன் கண்ணில் படுகிறதோ அங்கேல்லாம் வாங்கு.."
"நிஜமாகவா சொல்கிறீர்..என் மனைவி காதில் விழப்போகிறது.."

"இன்று புத்தகம் வாங்குபவரும் இல்லை, படிப்பவரும் இல்லை.  ஆனால் நீ புத்தகம் வாங்குவதற்கு துடியாய்த் துடிக்கிறாய்.  அதனால் என் அருள் எப்போதும் உனக்கு உண்டு,  நீ புத்தகம் வாங்கு."

"ஆனால் வாங்குகிற புத்தகத்தைப் படிக்க முடியவில்லையே?"

"நீ படிக்காமல் இல்லை.  அதை இன்னும் கொஞ்சம் வேகப்படுத்த வேண்டும்.  நேற்று பேப்பர் கடையில் 'தம்மபதம்; என்ற புத்தகம் வாங்கினேயே அது அற்புதமான புத்தகம்.  

"நீங்கள் வேற..அந்தப் புத்தகக் கடையில் மூன்றரை கிலோ புத்தகங்கள் வாங்கினேன்.  அப் புத்தகங்களின் ஒன்றுதான் தம்மபதம்.  ஆனால் மற்றப் புத்தகங்கள் திருட்டுப் புத்தகங்கள்,"

"எப்படி சொல்கிறாய்?"

"எல்லாப் புத்தகங்களிலும் நூல் நிலைய முத்திரை இருக்கிறது. யாரோ நூல் நிலையத்திலிருந்து திருடிய புத்தகங்களை கடையில் போட்டுள்ளார்கள்."

"உருப்படுவார்களா அவர்கள்.  படிப்பதற்காக நூல் நிலையத்தில் உள்ள புத்தகங்களையா திருடுவார்கள்..  ஒரு புத்தகம் எத்தனைப் பேர்களிடம் போய் என்னன்ன மாற்றங்களை உண்டாக்கும்..அந்த அறிவு செல்வத்தை பேப்பர் கடையில் போட்டு கேவலாமாக மாறி உள்ளார்களே.."

"அந்த அரசாங்க லேபிள்களைப் பார்க்கும்போது நான்தான் புத்தகங்களைத் திருடி விட்டதுபோல் குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது.."

"நீ அதுமாதிரியான புத்தகங்களை வாங்காதே..அப்படியே வாங்கினாலும் திரும்பவும் நூல்நிலையத்தில் சேர்ப்பித்து விடு.."

"என்னை திருடனென்று நினைத்து விடுவார்கள்.."

"அப்படி நினைக்க மாட்டார்கள். "

"சரி, நான் புத்தகங்கள் அதிகம் படிக்க உங்கள் அருள் வேண்டும்.  இன்னொன்றும் சொல்கிறேன்.  நான் படிக்கிற புத்தகங்கள் ஞாபகத்தில் கொஞ்ச காலமாவது இருக்க வேண்டும,"

"புத்தகம் படித்தவுடன் அதைப் பற்றி குறிப்பெடுத்து விட்டு எழுதாமல் இருக்காதே...புத்தகம் படிக்கும் முன் உன் குருநாதரை நினைக்காமல் இருக்காதே,"

"குரு நாதரா..யாரது?"

"க நா சு தான் உன் குருநாதர்.  அவரை நினைத்துப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பி...வேகமாக எல்லாப் புத்தகங்களையும் படித்து முடித்து விடுவாய்.."
கையில் தம்மபதம் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு நான் ஆஞ்சநேயரைப் பார்த்துச் சிரித்தேன்.  

Comments