வரும் புத்தகக் கண்காட்சியை ஒட்டி அடியேனும் புத்தகங்கள் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். டிசம்பர் மாதம் முதற்கொண்டு ஒரே பிரச்கினை. எனக்கு ஒரு சில நண்பர்கள் உதவி செய்கிறார்கள். ஆனாலும் நான் எல்லாவற்றையும் முடிக்க வேண்டும். எப்படியாவது ஐந்தாறு புத்தகங்களாவது கொண்டு வந்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்தச் சமயத்தில்தான் அச்சடிப்பவர்களுக்கு போன் பேசினால் போனையே எடுக்க மாட்டார்கள். அதற்குமுன் நம் முன் கண்ணில் அநாவசியமாகத் தடடுப்படுபவர்கள் இப்போது இந்தத் தருணத்தில் ஏன் என்று கேட்காமல் ஓட்டமாய் ஓடிவிடுவார்கள். இது உலக நியதி.
நான் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாகப் புத்தகங்கள் தயாரிப்பதும் விருட்சம் என்ற பத்திரிகையும் நடத்துபவனாக இருக்கிறேன். 100 இதழ்களுக்கு மேல் சமாளித்துக்கொண்டு விருட்சம் கொண்டு வந்துவிட்டேன். அதேபோல் புத்தகங்கள் 70க்கும் மேல் கொண்டு வந்துவிட்டேன். 100 வரை கொண்டு வர வேண்டுமென்று விரும்புகிறேன்.
கடந்த சில ஆண்டுகளுக்குமுன் 300 பிரதிகளுக்குக் கீழ் புத்தகங்கள் அச்சடித்து, விற்க முடியாமல் வைத்துக்கொண்டிருக்கிறேன். இப்போதுதான் ஒரு தெளிவு என்னிடம் பிறந்திருக்கிறது. என்ன தெளிவு என்றால் மிகக் குறைந்த பிரதிகளே அச்சடி என்று. என் குருநாதர் நகுலன்தான் இதற்கெல்லாம் மூல காரணம்.
அவர் புத்தகம் எதாவது கொண்டு வந்தால் போதும் முப்பது என்பார். அவருடைய நண்பர்கள் எல்லோருக்கும் ஒவ்வொன்று கொடுத்துவிட்டுப் பேசாமல் இருக்கலாம் என்பார். நானும் 30 என்று இப்போது சொல்ல ஆரம்பித்து விட்டேன்.
பல ஆண்டுகளுக்கு முன்னால் நான் இரண்டு முக்கிய கவிதைத் தொகுதிகளைக் கொண்டு வந்தேன். ஒன்று நகுலனின் 'இரு நீண்ட கவிதைகள்' என்ற புத்தகம. இன்னொன்று உமாபதியின் 'வெளியிலிருந்து வந்தவன்,' என்ற கவிதைத் தொகுதி.
இந்த இரு தொகுதிகளையும் புத்தகக் கண்காட்சியில் உள்ள எல்லாக் கடைகளிலும் கொண்டு போய் விற்கக் கொடுத்தேன். அந்த ஆண்டு போல் சோதனையான ஆண்டு புத்தகக் கண்காட்சிக்கு ஏற்பட்டிருக்கக் கூடாது. மின் கசிவு ஏற்பட்டு சில ஸ்டால்கள் பற்றிக்கொண்டு எரியா ஆரம்பித்துவிட்டன. அதில் நான் புத்தகம் கொடுத்த ஸ்டால்களும் அடங்கும். என் புத்தகப் பிரதிகள் விற்காமலே எரிந்து விட்டன.
நான் இன்னும் சில ஸ்டால்களில் விற்பனைக்குக் கொடுத்தப் புத்தகங்களை இன்முகத்துடன் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். ஒரு பிரதி கூட விற்கவில்லை. எனக்கு இது பெரிய அதிர்ச்சி.
நாம் ஏதோ கற்பனை செய்கிறேன். நான் கொண்டுவரும் புத்தகங்கள் எல்லாம் விற்றுவிடும் என்றுதான். ஆனால் வாங்குபவர்கள் வேண்டுமே? ஒரு புத்தகம் அல்லது பத்திரிகைக் கொண்டு வர சரஸ்வதியின் கடாட்சம் வேண்டுமே? ஆனால் வாங்குபவர்கள் பலர் சரஸ்வதி வேண்டாம் வேண்டாம் என்று துரத்திவிடுகிறார்களே? லட்சுமிதான் வேண்டும் வேண்டும் என்கிறார்கள்.
அதேபோல் இன்னொரு காட்சி. க்ரோம்பேட்டை ரயில்வே நிலையம். அங்குள்ள புத்தக ஸ்டால். அவரிடம் நவீன விருட்சம் இதழ்கனின் பிரதிகள் ஐந்தை விற்பனைக்குக் கொடுத்துவிட்டுப் போகிறேன். அடுத்த இதழ் விருட்சம் கொண்டு வர பாடாய்படுகிறேன். ஏன் கடைக்காரருக்கே நான் அடுத்த இதழ் கொண்டு வரும்போது என் முகம் மறந்திருக்கும். அவர் கொடுக்க வேண்டியது ஐந்து பிரதிகள் விற்று பணம் தருவது. அதாவது ரூ.100ல் கமிஷன் போக ரூ.70 மட்டும்தான். அல்லது ரூ.60 மட்டும்தான். அதைக் கொடுக்க அந்த மனிதர் பாடாய்ப் படுத்தி விடுவார். 103வது இதழ் கொண்டு போய் அவர் முன்னால் நிற்கிறேன். அவர் பணம் கொடுக்காமல் துரத்தியே விட்டார். அதாவது சரஸ்தியை ஓட ஓட விரட்டுகிறார். அதாவது பத்திரிகையை - சரஸ்வதியை - விற்று லட்சுமி வேண்டும். ஆனால் சரஸ்வதியைக் கொடுத்த என்னை ஒன்றுமில்லாமல் துரத்தி விடுகிறார். இதே மாதிரி வீடு நிறைய சரஸ்வதியாகிய புத்தகங்களை வைத்துக்கொண்டிருக்கும் நான், லட்சுமி கிடைப்பாளா என்று பார்த்தால் கண்ணில் லட்சுமி படாமல் ஓடி ஓடி ஒளிந்து கொள்கிறாள்.
இந்தத் தருணத்தில் இரு நீண்ட கவிதைத் தொகுதியில் நகுலன் எழுதிய ஒரு கவிதை. புத்தகப் பின் அட்டையில் பிரசுரம் ஆகி உள்ளது. அக் கவிதை இதுதான்.
'மாமுனி பரமஹம்ஸன்
அவன் மாபெரும் சீடன்
சொன்னான்
üüமாயை என்பது
மன்பதையனுபவம்ýý
மாயை யென்னெழுத்து
மாமாயை
என் வாழ்வு
என்றாலுமென்ன
இது வென்னூல்
இதுவென் பெயர்
இது வென்னெழுத்துý
இக் கவிதையைப் படிக்கும்போது சரஸ்வதியே நம்மிடம் இருக்கட்டும். லட்சுமி வேண்டாமென்று சொல்லத் தோன்றுகிறது.
Comments