Skip to main content

நான், பிரமிள், விசிறிசாமியார்......11

ஞாயிற்றுக்கிழமை (29.11.2009) நான் சென்னையில் இருந்தபோது வாசலில் ஒரு கார் நின்றிருந்தது. கார் பின்னால் ஒரு வாசகம் யோகி ராம்சுரத் குமார் என்று. எனக்கு நான் எழுதிக்கொண்டிருந்த கட்டுரை ஞாபகம் வந்தது.

ரொம்ப நாள் தொடராமல் போனதற்கு பிரமிளின் மறைவைப்பற்றி சொல்லும் சங்கடம்தான். ஒரு மரணம் ஒவ்வொரு மனதிலும் எப்படி நிழலாடுகிறது என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. பிரமிள் துணிச்சல்காரர். அவர் மரணத்தைப்பற்றி பேசி நான் கேட்டதில்லை. அவர் அவ்வளவு சீக்கிரம் மரணம் அடைந்துவிடுவார் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை.

சென்னையில் நானும் அவரும் இருந்தாலும், அவர் அடிக்கடி கார்டில் தகவல் கொடுத்தபடி இருப்பார். அவருக்கு மஞ்சள்காமாலை நோய் திரும்பவும் தாக்கியிருப்பதை அவர் குறிப்பிட்டிருந்தார். முன்பே திருவான்மியூரில் அவர் தங்கியிருந்தபோது ஒருமுறை அவருக்கு அந்த நோய் தாக்கியிருந்தது. அப்போது சரியான நோய் திரும்பவும் பிடித்துக்கொண்டது. அத்துடன் இல்லாமல் நிமோனியா வேற அவரைத் தாக்கியிருந்தது.அவர் நோயைப் பற்றி எதுவும் சொல்லாவிட்டாலும் பலவீனமாக இருந்தார். அவர் இருந்த இடம் மோசமாக இருந்தது. சாந்தோமில் ஒரு குப்பத்தில் அவர் வசித்து வந்தார். பொது கழிவறை பக்கத்தில் அவர் அறை இருந்தது. தமிழில் முக்கியமான படைப்பாளியான பிரமிள், யார் கவனமும் இன்றி தனிமைவாசியாக இருந்தார்.

எனக்கு அவர் நிலையைப் பார்த்து வருத்தமாக இருந்தது. ஆனால் அதையெல்லாம் பெரிது படுத்தாமல் இருந்தார். பொதுவாக எழுதுபவர்களெல்லோரும் ஒரு மாதிரியான நிலையில்தான் இருப்பார்கள். ஏன் எழுதுபவர்கள் இல்லாமலே சாதாரண மனிதர்களே அப்படித்தான் இருப்பார்கள். எதாவது ஒன்றில் தீவிரமாக இருப்பவர்கள் அமைதியில்லாமல்தான் இருப்பார்கள். எதாவது ஆசை மனதில் பிடித்துக்கொண்டால் அந்த ஆசையை விட்டு வர முடியாது. இயல்பான நிலைக்குத் திரும்ப முடியாது.

'என்னிடம் அதிகமாக பணம் தங்கக் கூடாது. நான் எப்போதும் பிச்சை எடுப்பவனாகத்ததான் இருக்க முடியும்,' என்பார் பிரமிள். எனக்குக் கேட்க வருத்தமாக இருக்கும். அலுவலகத்தில் என்னைப் பார்க்க வரும்போது, அலுவலகப் பெண்மணி ஒருவரைப் பார்த்து சித்திரம் மாதிரி இருக்கிறாள் என்றார் ஒருநாள். எனக்குத் திகைப்பாக இருந்தது. அந்தப் பெண்மணியின் பெயர் சித்திரா. எப்படி அவருக்கு அப்படி செல்லவந்தது என்று யோசிப்பேன்.

'ஒரே விஷயத்தில் எப்போதும் கவனம் செலுத்துங்கள்,' என்பார் பிரமிள். என் இயல்பு நான் எதாவது ஒன்றை ரசித்தால் அதில் நுழைந்து விடவேண்டும் என்று நினைப்பவன். சின்ன வயதில் கிரிக்கெட் ஆடும்போது நானும் கிரிக்கெட் வீரனாக மாற வேண்டுமென்று நினைப்பேன். நான் பள்ளியில் படிக்கும்போது ஒரு மருத்துவனாக மாற வேண்டுமென்று நினைப்பேன். ஞாநி நடத்திய பரீக்ஷா நாடகத்தில் நான் நடித்தபோது ஒரு மெச்சத்தகுந்த நடிகனாக மாற வேண்டுமென்று கற்பனை செய்வேன். நான் எழுத ஆரம்பித்தபோது நான் எழுதுவதையெல்லாம் எல்லோரும் பிரசுரம் செய்ய வேண்டுமென்று நினைப்பேன். ஆனால் ஒன்றுமே நடக்காது.

பல ஆண்டுகளாக நான் விருட்சம் பத்திரிகையை நடத்துவதைப் பார்த்து, பிரமிள் 'நீங்கள் அதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்' என்றார். அவர் சொன்னதைக் கேட்டு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒருமுறை பிரமிள் அவர் அறை வாசலில் விட்டிருந்த செருப்பை யாரோ தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள். என்ன மோசமான நிலை இது. அவர் செருப்பே ரொம்ப சாதாரணமாக இருக்கும். அதை யாரோ தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள். அலுவலகம் போகும்போது அவரைப் பார்த்துவிட்டுப் போகலாமென்று அவர் அறைக்குச் சென்றேன். என்னைப் பார்த்தவுடன், என்னிடமிருந்த செருப்பைக் கழட்டிவிட்டுப் போகச் சொன்னார். அலுவலகம் போகும் சமயத்தில் செருப்பில்லாமல் போக முடியாது என்றேன். ஆனால் அன்று அலுவலகம் விட்டு வரும்போது, அவருக்கு செருப்பு வாங்கிக்கொடுத்தேன். அப்போதுதான் அவர் சோ ராமசாமியைப் பற்றி ஒரு கவிதை எழுதியிருந்தார். அதை ஒரு கார்டில் எழுதியிருந்தார். ராமசாமி என்ற பெயரில் இருப்பவர்கள் எப்படி புத்திசாலியாக இருக்கிறார்கள் என்பது மாதிரி இருந்தது அந்தக் கவிதை. சோ ராமசாமி, ஈ வே ராமசாமி என்றெல்லாம் தொடர்புப் படுத்தி எழுதியிருந்தார். அந்தக் கார்டை என்னிடம்தான் கொடுத்தார். நான் எங்கோ தொலைத்துவிட்டேன்.

(இன்னும் வரும்..)

Comments

இந்த ஸ்வாரஸ்யமான வாழ்வனுபவக் கட்டுரைத் தொடரை மீண்டும் எழுத ஆரம்பித்தது குறித்து மிக்க மகிழ்ச்சி
அருமை. மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி
SURI said…
பிரமிள் அவர்களைப் பற்றி படிக்கும் போதெல்லாம் மனதில் ஒருவிதமான வேதனை தோன்றும் எனக்கு. உங்கள் பதிவைப் படிக்கும்போதும் அது தோன்றியது. அவருக்கு அவரது வாழ்க்கை எப்படித் தோன்றியதோ எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு திறமைசாலி ஏன் இப்படித் துயரமான, கஷ்டமான வாழ்க்கை வாழ நேர்ந்தது? அவர் மேல் பெருமதிப்புக் கொண்டிருந்த பல பேர் இருந்தும் இந்த நிலை. எழுத்தை மட்டும் நம்பி ஒருவன் பிழைக்க முடியாது என்ற கருத்தை உறுதி செய்வதாக இருந்தது அவரது வாழ்க்கை. அதே நேரம் எவ்வளவு சோகத்திற்கு இடையிலும் அவரது வித்தியாசமான தனித்தன்மை ஆச்சரியப்பட வைத்தது என்னை. அவரைப் பற்றியும், அவரது எழுத்துக்களையும் படிக்கும் ஆவல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நன்றி!