சென்னையிலிருந்து ஒரு வழியாக 2ஆம் தேதி நவம்பர் கும்பகோணம் வந்துவிட்டேன். வழக்கம்போல் மயிலாடுதுறையில் தங்கி கும்பகோணம் சென்று கொண்டிருந்தேன். ஆனால் ஒவ்வொரு சனிக்கிழமையும் சென்னைக்குச் சென்றுவிடுவேன். பின் ஞாயிறு கிளம்பி வந்துவிடுவேன். மயிலாடுதுறையில் முன்பு தங்கியிருந்த வீட்டிலேயே தங்கி தினமும் கும்பகோணம். எனக்கு எந்த இடம் என்று தெரிய சில நாட்கள் ஓடிவிட்டன. பட்டுக்கோட்டையா? புதுப்பித்தன் கதையின் தலைப்பான அதிராமப்பட்டிணமா? அல்லது மன்னார்குடியா என்று திகைத்துக் கொண்டிருந்தேன். வேலையை விட்டுவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். எனக்குத் தெரிந்த உறவினர் வீட்டு விழாவிற்குச் சென்றேன். ஒருவரிடம் வேலையை விடலாமா என்று யோசிக்கிறேன் என்றேன். பின் இன்னொன்றும் சொன்னேன். வேலையை விட்டால் மாதம் ஆயிரம் கூட சம்பாதிக்க முடியாது என்று. அதைக் கேட்டு அவர் விழுந்து விழுந்து சிரித்தார். ஆனால் இனிமேல் சம்பாதிக்க வேண்டாம் என்று சும்மா இருந்தால், சும்மா இருக்க விட மாட்டார்கள் வீட்டில். என் அப்பா தொண தொண என்பார். மாமியார் தொண தொண என்பார். மனைவி ஏளனமாய்ப் பார்ப்பாள். விற்காத புத்தகங்கள் எல்லா இடங்களிலும் என்னைப் பார்த்து கண் சிமிட்டும்.
உத்யோகமின்றி பல நண்பர்கள் படும் கஷ்டம் எனக்குத் தெரியும். புத்தகம் போடுவதையும், பத்திரிகை நடத்துவதையும் நிறுத்தும்படி ஆகிவிடும். ஏதோ உத்தியோகத்தில் இருப்பதால் இந்த மட்டும் ஆண்டொன்றில் வாங்கும் Festival Advance ம், Medical Bill ம் விற்காதப் புத்தகங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. சி சு செல்லப்பாவின் ராமையாவின் சிறுகதைப்பாணி புத்தகம் கடையில் போட்டால் கிலோ என்ன விலைக்கு எடுத்துக்கொள்வான் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
நல்லவேளை அலுவலகம் என்னை தற்காலிகமாக காப்பாற்றி விட்டது. நானே எதிர்பார்க்காத சீர்காழி என்ற ஊருக்கு என்னை அனுப்பி விட்டது. முன்பு பந்தநல்லூர் மாதிரி இப்போது மயிலாடுதுறையிலிருந்து சீர்காழி வந்தும் போயும் கொண்டிருக்கிறேன். சனிக்க்ழமைகளில் சென்னையை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறேன்.
2 வாரங்களாக டூவீலரைக் கொண்டுவர படாதபாடு பட்டேன். விடுமுறை அதிகமாக எடுத்துவிட்டதால், லீவு என்றால் மூச்...மடி கணனி வந்துவிட்டதால் எல்லோருடனும் தினமும் தொடர்பு கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். என்னை விட படு மோசமான நிலையிலும் உத்தியோகத்தைப் பிடித்துக்கொண்டு தலை விதியே என்று இருக்கும் பல நண்பர்களின் சோகக் கதை இன்னும் மோசமாகத்தான் இருக்கும். அவர்களும் என்னுடன் அவர்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். என்ன சரியா?
(இன்னும் வரும்)
Comments