Skip to main content

எதையாவது சொல்லட்டுமா 10



ராஜன் தோட்டம் என்ற இடத்தில்தான் காலையில் நடைபயிற்சி செய்வேன். ஏராளமானவர்கள் வருவார்கள். விளையாட்டில் பெயர் எடுக்க வேண்டுமென்கிற யுவதிகளும், யுவர்களும் அதிகமாகக் கலந்துகொள்வார்கள். என்னைப் போலுள்ளவர்கள் நடந்துகொண்டே இருப்பார்கள். மகாலிங்கம் என்பவரைப் பற்றி சொல்ல வேண்டும். அவர் அரசாங்கத்தில் பணிபுரிபவர். இரண்டு புதல்வர்கள். இரண்டு பேர்களையும் கடன் வாங்கிப் படிக்க வைத்துவிட்டார். பெரிய புதல்வன் ஐஐடியில் படித்திருக்கிறான். ஆனால் அவர் புதல்வர்களுக்கு உரிய வேலை கிடைக்கவில்லை. ஐஐடியில் படித்த பெரிய புதல்வனுக்கு சொற்ப சம்பளத்தில்தான் வேலை கிடைத்திருக்கிறது. அதை ஏற்றுக்கொள்வதில் அவனுக்கு தயக்கம். மகாலிங்கத்திற்கு என்னைப் போல் சர்க்கரை. அவர் கிரவுண்டில் நடக்கிறதைப் பார்த்தால் அசந்து போய்விடுவீர்கள். அப்படி நடப்பார். நான் ஒருமுறை சுற்றி வருவதற்குள் அவர் இன்னொரு முறையும் சுற்றியபடி என்னைப் பிடித்து விடுவார்.

அப்படி நடந்து கொண்டிருந்தவர்தான் மெதுவாக நடக்கத் தொடங்கினார் அன்று. காலில் ஏதோ அடிப்பட்டுவிட்டதாம். அன்று அவர் சுரத்தாக இல்லை. கடன்காரர்கள் தொந்தரவு செய்கிறார்களாம்.வங்கியில் கடன் வாங்காமல் தனியாரிடம் வாங்கிவிட்டார். பையன் தலை தூக்கினால் எல்லாம் பொடி பொடியாகிவிடும். அதுதான் தாமதம் ஆகிறது. மகாலிங்கம் என்னுடன் பேசிக்கொண்டே வரும்போது சோகமான பாட்டு ஒன்றை பாடிக்கொண்டே வந்தார்.

''என்னயாயிற்று?'' என்று கேட்டேன். அப்போதுதான் கடன்காரர்களின் நச்சரிப்பைப் பற்றி குறிப்பிட்டார். ''முதலில் இந்தச் சோகமான பாட்டுக்களையெல்லாம் பாடாதீர்கள்,'' என்றேன்.

இந்தச் சம்பவத்தை ஏன் சொல்கிறேனென்றால், சினிமா பாட்டுகள் மனிதன் மனதுள் புகுந்துகொண்டு பிறாண்டும் ரகளையைப் பற்றிதான். நான் அலுவலகம் கிளம்பும்போது பஸ் பாடாமல் இருக்காது.. எரிச்சலாக இருக்கும். சத்தமாகக் கேட்டுக்கொண்டே போக வேண்டும். எனக்கும் சினிமாப் பாடல்கள் பல நிகழ்ச்சிகளை ஞாபகப்படுத்தும். பொதுவாக சோகமான நிகழ்ச்சிகளை அதிகமாக ஞாபகப்படுத்தும். குர்பானி என்ற ஹிந்திப் படத்தின் பாடல்களைக் கேட்டால் அது என் திருமணத்தை ஞாபகப்படுத்தும். பாக்கியராஜ் முதன்முதலாக கதாநாயகனாக நடித்த பாரதிராஜா படத்தின் பாடல்களைக் கேட்கும்போது என் நண்பன் இறந்த ஞாபகம் வரும். ஒரு சினிமா பாடல் ஒளிமயமான எதிர்காலம் பற்றி குரலெழுப்பிக் கொண்டிருக்கும். உண்மையில் சினிமாப் பாடல்களுடன் நம்மை சம்பந்தப்படுத்திக் கொள்வதைப் போல் ஒரு முட்டாள்தனத்தை குறித்து என்ன சொல்வது?

நம் வாழ்க்கையில் நடப்பது எல்லாம் நடந்தே தீரும். அதற்கும் இந்தச் சினிமாப் பாடல்களுடன் முடிச்சுப் போடக்கூடாது. சினிமாப் பாடல்களைக் கேட்டு அதன் மூலம் தீர்வு காணக்கூடாது. சினிமாப் பாடல்களுடன் நம் வாழ்க்கையின் உணர்ச்சிகரமான கட்டத்துடன் முடிச்சுப் போடக் கூடாது.

நான் ஒவ்வொரு நாளும் வண்டியில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது சினிமாப் பாடல்களைக் கேட்காமல் இருப்பதில்லை. ஆனால் எதிர்காலம் என்னவென்று எனக்குத் தெரியாது.

Comments

மகாலிங்கம் - அரசாங்க வேலை - இரண்டு புதல்வர்கள் -பெரிய புதல்வன் ஐஐடியில்- பாடிக்கொண்டே வந்தார்- என்று கூறும்போது எனக்கு என்னுடன் பணியாற்றியவரே என்றுதான் தோன்றுகிறது. சொற்ப சம்பளமாக இருந்தாலும் முதல் வாய்ப்பினை ஏற்றுக்கொள்ளச்சொல்லுங்க வழி புரிபடும் :)

முன்பு உங்களுடன் பணியாற்றி இப்பொழுது கத்தாரிலிருக்கும் நண்பர் கூறினார் என்று கூறுங்கள் கண்டிப்பாக தெரியும்!
சினிமா பாடல்கள் குறித்த மிக்கியமான உளவியல் யதார்த்தத்தை முன் வைத்திருக்கிறீர்கள்