Skip to main content

எதையாவது சொல்லட்டுமா / 11

இங்கு எழுதுவதில் எதாவது தலைப்பு இட்டு எழுதலாமா என்று யோசிக்கிறேன். அப்படி எழுதுவதென்றால் காலடியில் கவிதைகள் என்ற பெயர் இடலாம். 22 ஆண்டுகளுக்கு முன்னால் நவீன விருட்சம் பத்திரிகை ஆரம்பித்தபோது அது கவிதைக்கான பத்திரிகையாகத்தான் திகழ்ந்தது. ஒரே கவிதை மயமாக இருக்கும். முதன் முதலாக ரா ஸ்ரீனிவாஸன் கவிதைப் புத்தகம்தான் விருட்சம் வெளியீடாக வந்தது.


சமீபத்தில் நேசமுடன் என்று வெங்கடேஷ் எழுதிய கட்டுரையைப் படித்தேன். புத்தகம் விற்பது என்பதைப் பற்றி எழுதியிருந்தார். அப்படியென்றால் என்னவென்று தெரியாது. ஒரு கவிதைப் புத்தகத்தை ஒரு 100 பிரதிகளாவது எப்படி விற்பது..எனக்கு அந்த ரகசியத்தை யாராவது சொன்னால் நன்றாக இருக்கும். நான் சொல்வது பிரபலமாகாத யாருக்கும் தெரியாத புதியவரின் கவிதைத் தொகுதி. கடந்த 22 ஆண்டுகளாக புத்தகம் கொண்டுவரும் நான் அதை எப்படி விற்பது எனபதைக் கற்றுக்கொள்ளவே இல்லை. முழுக்க முழுக்க லைப்ரரியை நம்ப வேண்டியுள்ளது. கவிதைக்கு லைப்ரரியின் கருணை கிடையாது. இதைத் தெரிவிக்க முதல்வருக்கு ஒரு விண்ணப்பம் என்ற பெயரில் ஒரு கடிதம் எழுதினேன். விண்ணப்பம் எழுதி என்ன பிரயோசனம். கவிதைப் புத்தகங்கள் என்னை விட்டு நகரவே இல்லை.


இன்னும்கூட புத்தகம் கொண்டுவருவதில் ஒருவித சந்தோஷம் என்னை விட்டு அகலவில்லை. ஆனால் புத்தகம் எப்படி விற்பது? அதுதான் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. என் குடும்பத்தினர் என்னைப் பற்றி கவலைப் படுகிறார்கள். என் தந்தை என்னிடம் புத்தகம் கொண்டு வருகிறாயே, எவ்வளவு செலவு செய்கிறாய் என்று கேட்காமல் இருப்பதில்லை. ரொம்பவும் குறைவான எண்ணிக்கையில் புத்தகம் கொண்டு வந்தாலும் என்னைவிட கவலை அவருக்கு அதிகமாகவே உள்ளது. ஏன்? அவர் இன்னொரு கேள்வி கேட்கிறார்..நீ செலவு செய்கிறாயே? எவ்வளவு பணம் உனக்குத் திரும்பவும் கிடைக்கிறது? இதற்கு பதிலே சொல்ல வரவில்லை. நான் ஒரு இடத்தில் புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறேன். என் மனைவி அந்த இடத்திற்கு வருவதற்கே பயப்படுகிறாள். நியாயம்தான் அவள் பயப்படுவது. கொஞ்சம் யோசித்தால் நானும் பயப்படத்தான் செய்வேன்.


முன்பெல்லாம் நான் புத்தகங்களை சில இடங்களுக்கெல்லாம் அனுப்புவேன். கொஞ்சமாவது பணம் வரும். இப்போதெல்லாம் பணமும் வருவதில்லை..புத்தகமும் கேட்பதில்லை..


வெங்கடேஷ் சொல்வதுபோல் யாராவது புத்தகம் விற்றுக்கொடுத்தால் நன்றாகத்தான் இருக்கும். 50% கொடுத்து விடுகிறேன். இதை யாரும் செய்வதில்லை. பல ஆண்டுகளாக நான் பார்க்கும் வேலையை விட்டுவிட்டு புத்தகம் போடுவதை முழு நேரத் தொழிலாக மாற்றிக்கொண்டு விடலாமா என்று யோசிப்பதுண்டு. ஆனால் அப்படி இறங்குவதில் எனக்கு முழுக்க நம்பிக்கை இல்லை. உண்மையில் என்னுடைய வேலைதான் புத்தகம் போடுவதற்கு எனக்கு உறுதுணையாக இருக்கிறது. நான் நண்பர்களிடம் வேடிக்கையாகச் சொல்வேன். நான் போடும் புத்தகங்கள் எல்லாம் Non Performing Asset என்று.


குறைந்த எண்ணிக்கையில் போடும் புத்தகமே ஆயிரக்கணக்கில் என்னிடம் குவிந்து கிடக்கிறது. வைக்க இடம் இல்லாமல் காலடியில் கவிதைப் புத்தகங்கள் இடறிக் கிடக்கின்றன. இதோ கடலின் மீது ஒரு கையெழுத்து என்ற பெயரில் லாவண்யாவின் கவிதைத் தொகுதி கொண்டு வந்துள்ளேன். காலடியில் இன்னொரு கவிதைத் தொகுதி.


Comments