Skip to main content

ஒரு கதை ஒரு கருத்து....2

அழகியசிங்கர்




சுஜாதா



ஒரு கதையில் இரண்டு கதைகள்






இவ்வகையில் முதல் சைன்ஸ்ஃபிக்ஷன் கதை தமிழில் பாரதியின் காக்காய் பார்லி மெண்ட் என்று சொல்லத் தோன்றுகிறது.

அதன் ஒரு பகுதி இது:

'கா என்றால் சோறு வேண்டும் என்று அர்த்தம். கக்கா என்றால் என்னுடைய சோற்றில் நீ பங்குக்கு வராதே என்று அர்த்தம். காக்கா என்றால் எனக்கு ஒரு முத்தம் தாடி கண்ணே என்று அர்த்தம்....காஹகா என்றால் சண்டை போடுவேன் என்று அர்த்தம்..ஹாகா என்றால் உதைப்பேன் என்று அர்த்தம்..
சயின்ஸ் பிக்ஷன்
'ஆர்வெலின் 1984இல் உள்ள 'ந்யூஸ்பீக்'கை இது நினைவுபடுத்துகிறது. சயின்ஸ்ஃபிக்ஷனுக்கு முக்கியத் தேவை ஒரு புதிய உலகத்தை புதிய சூழலை அமைத்து அதன் விதிகளையும் தெளிவாக்குவதுதான்.

'புதுமைப்பித்தனின் 'கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்' கதையை நீங்கள் எல்லோரும் படித்திருப்பீர்கள் சைன்ஸ்ஃபிக்ஷனுக்கு உள்ள எல்லாத் தகுதிகளும் பெற்ற கதை இது.

அதுபோல் பிரம்மராக்ஷஸ்' 'கயிற்றரவு' போன்றவற்றையும் ஃபேண்டஸி என்னும் ஜானரில் வரும்.
கல்கியின் குறுநாவல்களான மோகினித்தீவு, 'சோலைமலை இளவரசி' இரண்டையும் சைன்ஸ்பிக்ஷனில் சேர்க்கலாம்.

'அதேபோல க.நா.சுவும் 'பொய்த்தேவு' போன்ற புதினங்களில் பரிசோதனைகள் செய்திருக்கிறார். புதுமைப்பித்தன், கல்கி தவிர இவர்கள் காலகட்டத்தில் வாழ்ந்த மற்ற சிறந்த எழுத்தாளர்கள் யாரும் இதை முயற்சிக்கவில்லை.

கலைமகளில் 'ஆனை சு.குஞ்சிதபாதம்' எழுதிய 'நல்ல பிசாசு' என்கிற கதை ஓர் அரிய விதிவிலக்கு. விந்தன் ஒரு கதையில் தீபாவளியில் பணமில்லாமல் தவிக்கும் ஏழைக் குடும்பத்தின் அவல நிலையை வருணித்துவிட்டு கடைசியில் இவர்கள் கஷ்டம் தீருவது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே கடவுள் அவன் முன் தோன்றினார். 'பக்தா உனக்கு என்ன வேண்டும் என்றார். அவன் தன் தீபாவளிக் கஷ்டங்களைச் சொல்ல எல்லாவற்றையும் தீர்த்து வைத்தார் என்று முடித்திருக்கிறார்.

இது துல்லியமான சைன்ஸ் ஃபிக்ஷன். சைன்ஸ்ஃபிக்ஷன் எழுதுவதற்கு சைன்ஸ், ராக்கெட் விண்வெளிப் பயணம் தேவையில்லை. எதிர்காலத்தைத்தான் எழுத வேண்டும் எனும் கட்டாயமில்லை.
'ஜெயமோகனின் 'பேய்ச்சிப் பாறை, விஷ்ணுபுரம்' போன்ற படைப்புகளில் விஞ்ஞானக்கதைக் கூறுகள் இருப்பதைப் பார்க்கிறேன். விஷ்ணுபுரம் என்பது ஒரு காத்திக் வகை நாவல்தான். கோணங்கியின் சில கதைகளை மாஜிக் ரியலிசக்காரர்கள் விட்டு வைத்தால் சைன்ஸ்ஃபிக்ஷனில் சேர்க்கலாம். உதாரணம் 'ஆதிவிருட்சம்.' கிருஷ்ணன் நம்பி ஒரு ஷøவுக்குள் ஒரு குடும்பமே வாழ்வதைப் பற்றி எழுதி உள்ளார்.

'மாலன் எழுதிய 'வித்வான் என்கிற கதை விஞ்ஞானப் புனைகதை.

லா.சா.ரா சில கதைகளில் அருகில் வருகிறார். (ஜனனி, யோகம்).

'புதுக்கவிதைகளில் சிலவற்றில் சைஃபி கூறுகளையும் பார்க்கிறேன். குறிப்பாக மீராவின் எனக்கும் உனக்கும் ஒரே ஊர் வாசுதேவநல்லுர் என்பது தமிழில் முதல் சைன்ஸ்ஃபிக்ஷன் கவிதை. ஞானக்கூத்தனின் மோசி கீரன் கவிதையும் அஃதே. விருட்சம், ழ கவிதைத் தொகுப்புகளில் ஒரு சில சைன்ஸ்பிக்ஷன் கவிதைகளைச் சிங்கப்பூர் தொலைக்காட்சியில் படித்துக் காட்டியிருக்கிறேன்.'

இதுவரை அறிவியல் புனைகதைகளின் கூறுகள் என்ற கட்டுரையில் சுஜாதா எழுதியதை சுருக்கமாகக் கூறி உள்ளேன்.

சுஜாதா எழுதியதைப் படிக்கும்போது எனக்குள்ளிருந்த சைன்ஸ்ஃபிக்ஷன் என்ற மாயை உடைந்து விட்டது. சைன்ஸ்ஃபிக்ஷன் கதை எழுத ஒரு விஞ்ஞானியாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்படி நினைத்ததால் அதைத் தொடக்கூட இல்லை. என் சந்தேகத்தைத் தீர்த்துவிட்டார் சுஜாதா. இனி அவர் கதையான ஒரு கதையில் இரண்டு கதைகளுக்குப் போகலாம்.
(இன்னும் வரும்)


Comments