Skip to main content

உலக கடித தினமாம்

 

துளிகள் 146



அழகியசிங்கர்
 
 

 

நவம்பர் மாதம் 2017ஆம் ஆண்டு நான் திடீரென்று அஞ்சல் அட்டைகளைத் தபால் நிலையத்தில் வாங்கிக்கொண்டு வந்து எல்லோருக்கும் கடிதங்கள் எழுத ஆரம்பித்தேன்.

எழுதிய கடிதங்களை என்ன எழுதினேன் என்பதைக் கணினியில் அடித்து வைத்திருந்தேன்.

பலருக்கு எழுதியதால் அவர்களும் பதில் எழுதினார்கள். அதற்கெல்லாம் நான் பதில் கடிதங்கள் எழுதி அதைத் திரும்பவும் கணினியில் பதிவு செய்து, ஒருநாள் முழுவதும் இப்படிப் பொழுது போயிற்று.

என்னால் சமாளிக்க முடியவில்லை. பேசாமல் கடிதம் அனுப்புவதை நிறுத்தி விட்டேன். சிலர் என் அஞ்ச லட்டைக் கடிதங்களைப் பார்க்கிறார்களா என்பதே தெரியவில்லை. அவர்கள் யாரிடமிருந்தும் எந்தவிதப் பதிலும் வரவில்லை.

சிலர் தபால் அலுவலகத்தில் போய் அஞ்சலட்டை வாங்க முடியவில்லை என்பார்கள். அவர்களுக்கு நான் அஞ்சலட்டைகளைக் கொடுப்பேன். உடனே பதில் எழுதட்டுமென்று. ஆனால் அப்படியும் அவர்களிடமிருந்து பதில் வராது.

நான் எழுதும் இந்தக் கடிதங்களைத் தொகுத்துப் புத்தகமாகப் போடுமளவிற்குச் சேர்ந்து விட்டன.

சில கடிதங்களை இங்கே குறிப்பிடலாமென்று நினைக்கிறேன்.

8.11.2017

கடிதம் 1

வியாழன்

சி லிங்குசாமி,

வணக்கம்.

28.02.2017 அன்று நீங்கள் அனுப்பியக் கடிதப்படி நாளை 'சில கவிதைகள், சில கதைகள், சில கட்டுரைகள்' புத்தகம் அனுப்பட்டுமா? நீங்கள் விபிபியில் வாங்கிக் கொள்வீர்களா?

கடிதம் : 2

,

அன்புள்ள சச்சிதானந்தம் அவர்களுக்கு,

வணக்கம்.

தயவுசெய்து தேனுகா புத்தகத்தைத் திருப்பித் தரவும். நான் தெரியாமல் உங்களிடம் புத்தகம் கொடுத்துவிட்டேன். மன்னிக்கவும். இது விஷயமாக நானும் நடராஜனும் உங்கள் வீட்டிற்கு வருகிறோம்.

கடிதம் : 8

அன்புள்ள நட்ராஜிற்கு, (சந்தியா பதிப்பகம்)

என்றும் 24

என் முப்பது ஆண்டு பதிப்பக அனுபவத்தில் நான் தெரிந்துகொண்டது, என்றும் 24. அதற்கும் கீழே அச்சடித்தால், அச்சு அடித்துக் கொடுப்பவருக்கு என்ன கிடைத்து விடப் போகிறது.

அதனால் என்றும் 24. புத்தகங்களை அச்சடித்து வீட்டில் பத்திரமாக வைத்துக்கொள்ளத் தீர்மானித்துவிட்டேன். விற்பனையாளர்களுக்குப் புத்தகங்களை விற்கக் கொடுக்க விரும்பவில்லை. ஏற்கனவே கொடுத்த புத்தகங்களைத் திரும்பவும் பெற்றுக்கொள்ள யோசித்துக் கொண்டிருக்கிறேன். தினமும் கார்டில் கடிதம் எýழுதி என் கையெழுத்தைச் சரிசெய்ய விரும்புகிறேன். நீங்கள் எதுவும் எழுதவேண்டாம். ஆனால் கார்டு கிடைத்தது என்று தகவல் கொடுத்தால் போதும். கடற்கரையிடம் மட்டும் இதுமாதிரி நான் எழுதும் கார்டைக் காட்டாதீர்கள். யாராவது நான் எழுதும் இக் கடிதத்தைப் படித்துச் சிரித்தால் மொபெல் தொலைப்பேசியில் படம் பிடித்து அனுப்புங்கள்.

29.01.2018

கடிதம் எண் : 32

அன்புள்ள டாக்டர் பாஸ்கரன் அவர்களுக்கு,

வணக்கம். என் கதைகளைப் படித்துப் பாராட்டியதற்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். முதலில் ஒருவர் புத்தகம் வாங்குவதே கடினம். பின் அதை எடுத்துப் படிப்பது இன்னும் கடினம். படிப்பது மட்டுமல்லாமல் அப் புத்தகம் எழுதியவரை தொலைப்பேசியில் கூப்பிட்டுப் பாராட்டுவது இன்னும் இன்னும் கடினம். இதையெல்லாம் மீறிச் செயல்பட்ட உங்களுக்கு என் நன்றி.

மேலும் என் புத்தகத்தைப் பற்றி எனக்குத் தெரிந்த நண்பர்களிடம் தெரிவித்தால் அவர்கள் வேறு கதைகளைச் சொல்லி என் கதைகளைப் பற்றிய உங்கள் உயர்வான அபிப்பிராயத்தைக் கெடுத்து விடுவார்கள். ஜாக்கிரதையாக இருங்கள்.

நான் கதைகளை எப்படி எழுதினேனோ நீங்கள் அதன் தன்மையைப் புரிந்துகொண்டு பாராட்டியது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. நான் கூட்டம் நடத்துவதாக உள்ளேன். கட்டாயம் நீங்கள் கலந்துகொண்டு பேச வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

இதுமாதிரி 112 பக்கங்கள் வரை கடிதங்கள் சேகரித்து வைத்திருக்கிறேன். அதெல்லாம் ஒரு புத்தகமாகக் கொண்டு வர யோசனை செய்கிறேன்.
ஆனால் இப்போதெல்லாம் கடிதங்கள் யாருக்கும் அனுப்புவதில்லை. ஏன் என்று தெரியவில்லை?
 

 

Comments