அழகியசிங்கர்
நேற்று மருத்துவர் பாஸ்கரனின் 'கடைசி பக்கம்' என்ற புத்தக வெளியீட்டு விழா. எனக்குத் தெரிந்து நான் பல கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். புத்தக வெளியீட்டுக் கூட்டங்களிலும் கலந்து கொண்டிருக்கிறேன். இது மாதிரி கூட்டத்தை நான் பார்த்ததில்லை. எழுத்தாளரை மட்டுமல்ல பார்வையாளர்களையும் பரவசமடையச் செய்யும் நிகழ்ச்சி. இந்தக் கூட்டத்தில் மாலன், கல்கி ஆசிரியர் ரமணன். சுந்தர்ராஜன், ரகுராமன் என்று எல்லோரும் கலந்து கொண்ட கூட்டம்.
எல்லோரும் அவர் புத்தகத்திலுள்ள கட்டுரைகளைப் பாராட்டிப் பேசினார்கள். கிரிஜா ராகவன் கூட்டத்தை நடத்திச் சென்ற விதம் நன்றாக இருந்தது. கடைசி பக்கத்திற்கு உதாரணமாக எழுத்தாளர் சுஜாதாவின் பெயரைக் குறிப்பிட்டாலும், மருத்துவர் புத்தகத்திற்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. யார் கடைசி பக்க கட்டுரைகளை எழுதினாலும் சுஜாதாவிற்கும் அதற்கும் சம்பந்தமிருக்கப் போவதில்லை.
தான் எழுதுகிற புத்தகத்தை வெளியீட்டு கொண்டாடுகிற வழக்கம் மருத்துவர் பாஸ்கரிடம்தான் உண்டு. அவர் மகிழ்ச்சியை அவர்கள் நண்பர்களிடம் வெளிப்படுத்துகிற அழகே தனி. ஒவ்வொரு நிமிடத்தையும் கொண்டாட வேண்டுமென்று குறிப்பிடுவார் ஓஷோ. அது மருத்துவர் பாஸ்கரன் விஷயத்தில் உண்மை. இது எனக்கு எதிரான நிலை. புத்தகத்தை வெளியிட்டு விட்டு கவலைப் படுகிற மனிதன் நான். இந்த முறை என்னுடைய ஐந்து புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறேன். பாஸ்கரன் மாதிரி கூட்டம் நடத்திக் கொண்டாடுகிற இன்னொருவர் நல்லி செட்டியார். அவர் பிறந்த தினம் போது உட்லேன்ட்ஸ் ஓட்டலில் நடத்தி அசத்துவார்.
ஒவ்வொரு புத்தகம் கொண்டு வரும்போது மருத்துவர் பாஸ்கரன் அதை அவர் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடுகிறார். வழக்கம்போல் இந்த முறையும். எல்லோரையும் விருந்து உண்ண உபசரிப்பிலும் அவருக்கு இணை யாரும் கிடையாது.
குவிகம் என்ற மின்னிதழில் வெளிவந்த கடைசி பக்கக் கட்டுரைகளைத் தொகுத்து அளித்திருக்கிறார். கடைசி பக்கத்தில் எழுதுகிற கட்டுரைகளை முகநூலிலும் வெளியிடுவார். சில சமயம் படிக்கும்போது கதைகளாக மாற்ற வேண்டியதைக் கட்டுரைகள் வடிவத்தில் கொடுத்திருக்கிறாரே என்று தோன்றும்.
பெரும்பாலும் அவர் கட்டுரைகளைப் பரவச நிலையில் எழுதுவார். மிகை உணர்ச்சி சற்று தூக்கலாகப் படும். அவர் அறியாமலேயே இதெல்லாம் வெளிப்பட்டு விடும். அப்படி வெளிப்பட்டால் குற்றமல்ல. எழுத்தாளருக்கே உள்ள குணம் அது. ஆனால் அபாரமான ஞாபக சக்தியுடன் விபரங்களைக் கொண்டு வருவார்.
விடா முயற்சியுடன் அவர் தொடர்ந்து எழுதி நெகிழ்ச்சியுடன் புத்தகத்தை வெளியிடுவதைப் பாராட்ட வேண்டும். இன்னும் அடுத்த புத்தகத்தை எப்போது வெளியிடப் போகிறாரென்று ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்.
Comments