Skip to main content

துளி : 47 - ஜெயகாந்தனின் யுகசந்தி



அழகியசிங்கர்



தமிழ் எழுத்தாளர்களில் மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்த எழுத்தாளர் ஜெயகாந்தன்.  அந்தக் காலத்தில் ஆனந்தவிகடன் அலுவலகத்திற்குள் நுழையுமுன் பான்ட் ஷர்ட் அணிந்துகொண்டு மிடுக்குடன் நுழைவார்.  மற்ற எழுத்தாளர்கள் வேஷ்டி, சட்டை அணிந்திருப்பார்களாம். இதெல்லாம் ஜெயகாந்தன் பற்றி மற்றவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஒருமுறை என் கல்லூரியில் ஜெயகாந்தன் பேசும்போது மாணவர்களைப் பார்த்து தைரியமாகப் படிப்பதை விட மாடு மேய்க்கலாம் என்று சொன்னது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. என்ன இவ்வளவு தைரியமாக மாணவர்கள் முன் பேசுகிறாரே என்று நினைத்ததுண்டு.
ஜெயகாந்தனுக்கு பாரதி மேல் பற்று அதிகம்.  உண்மையில் அவர் தன்னை பாரதி மாதிரியே நினைத்துக்கொண்டார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.  ஆலந்தூரில் ஒரு பள்ளிக்கூடத்தில் ஜெயகாந்தன் பேசப்போகிறார் என்பதை அறிந்து நான் அந்தப் பள்ளிக்கு முன்னதாகவே ஜெயகாந்தன் பேசுவதைக் கேட்கப் போயிருந்தேன்.  ஜெயகாந்தன் தெருமுனையில் பள்ளியை நோக்கி நடந்து வருவதைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.  தலையில் தான் வைத்திருந்த துண்டை எடுத்து முண்டாசு மாதிரி கட்டிக்கொண்டார்.  அப்போது பாரதியார் நினைப்பில் அவர் இருந்திருப்பார் என்று நினைக்கிறேன்.  
பள்ளியில் அவர் பேசத் துவங்கியபோது, கூட்டத்தை ஏற்பாடு செய்த தலைமை ஆசிரியரையும், மற்ற ஆசிரியர்களையும் கம்பீரமான குரலில் திட்ட ஆரம்பித்தார்.  எனக்கு ஜெயகாந்தனின் அந்தப் பேச்சைக் கேட்டு ஜிவ்வென்றிருந்தது.  
அப்போதெல்லாம் ஜெயகாந்தனைப் பார்த்துப் பேச நான் துணியவில்லை.  ஆனால் அவர் பேசுவதுபோல் மேடையில் பேச வேண்டுமென்று நினைத்துக்கொள்வேன்.  அதனால் மாம்பலத்தில் ஒரு டைப்ரைட்டிங் நடத்தும் வகுப்பில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தேன்.  நான் பேசும்போது ஜெயகாந்தனை நினைத்துக்கொண்டு கத்திப் பேசினேன்.  பேசி முடித்தபிறகு, மொத்தமே 10 பேர்கள் வந்த கூட்டத்தில்  (பெரும்பாலோர்    நண்பர்கள், உறவினர்கள்) ஏன் இப்படி குரலை உயர்த்திப் பேசினேன் என்று வெட்கப்பட்டேன்.
நான் மற்ற எழுத்தாளர்களுடன் (அசோகமித்திரன், வைதீஸ்வரன், ஞானக்கூத்தன், பிரமிள், வெங்கட்சாமிநாதன், ஸ்டெல்லாபுரூஸ்) நெருக்கமாகப் பழக ஆரம்பித்த பிறகு ஜெயகாந்தனை மறந்து விட்டேன்.  ஜெயகாந்தன் அவர் காலத்திலேயே அவர் எல்லாம் எழுதிவிட்டு பிறகு எழுதுவதையே நிறுத்தி விட்டார்.  அவர் எழுதாமல் இருந்தாலும் கூட்டங்களில் பேசுவதை விடவில்லை. பாரதியாரைப் பற்றி அவர் பேசியதைப் போல் யாரும் பேசியிருக்க முடியாது.  
எழுத்தாளருக்குக் கர்வம் இருக்க வேண்டும்.  அது ஜெயகாந்தனிடம் இருந்தது.  ஜெயகாந்தன் கே கே நகரில்தான் வசித்து வந்தார்.  ஆனால் அவரைப் பார்த்துப் பேச வேண்டுமென்று நினைத்தாலும், அதற்கான முயற்சியை நான் செய்ததில்லை.  
1988ஆம் ஆண்டு விருட்சம் பத்திரிகையைக் கொண்டு வந்தாலும், ஒரு பிரதியைக் கூட நான் அவருக்கு அனுப்பவில்லை. காரணம் அவர் அதையெல்லாம் பொருட்படுத்த மாட்டாரென்றுதான்.  
ஜெயகாந்தனின் பல கதைகளைப் படித்திருக்கிறேன்.  சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற அவருடைய கதை திரைப்படமாக வந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
 கடைசியாக ஆனந்தவிகடனும், ஜெயகாந்தன் வாசகரும் சேர்ந்து ஆனந்தவிகடனில் வெளிவந்த மாதிரி அவருடைய சிறுகதைத் தொகுதியைக் கொண்டு வந்தார்கள். மயிலாப்பூரில் உள்ள சங்கீத அகடெமியில்தான் அக் கூட்டம் நடந்தது. சபா முழுவதும் கூட்டம்.  உடல்நிலை சரியில்லாமல் ஜெயகாந்தன் வந்திருந்தார்.  அக் கூட்டத்திற்கு வந்ததோடல்லாமல் அந்தப் புத்தகத்தை வாங்கியும் வைத்துக்கொண்டேன். 
ஒருமுறை நான் 3 படைப்பாளிகளுக்குக் கௌரவம் செய்யும் நிகழ்ச்சி ஒன்றை தேனாம்பேட்டையில் உள்ள காதி அரங்கத்தில் நடத்தினேன்.  ஜெயகாந்தனும் ஒரு பார்வையாளராக அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.  எழுத்தாளர் சா கந்தசாமிக்கு மரியாதைச் செய்ததை அறிந்து வந்திருப்பார் என்று நினைக்கிறேன். கூட்டத்திற்கு வந்ததற்காக என் நன்றியைத் தெரிவித்துக்கொண்டேன்.  தமிழில் ஜெயகாந்தனுக்கு உயர்ந்த பரிசான ஞானபீட பரிசு கிடைத்துள்ளது.  அதற்குத் தகுதியானவரும் அவர்தான்.
கூட்டத்தோடு ஜெயகாந்தனைப் பார்த்துப் பழகிய நான், கூட்டத்தோடு பார்த்து முடித்துக்கொண்டேன். 
இனி நாம் அவர் படைப்புகளுடன்தான் அவரை ஞாபகத்தில் கொண்டு வர முடியும்.
ஜெயகாந்தனின் üயுக சந்திý என்ற கதையைப் பற்றி சொல்ல விரும்புகிறேன்.  ஜெயகாந்தனின் கதைகளில் சிறப்பு வாய்ந்த கதைகளில் ஒன்றாக யுக சந்தி என்ற கதையைச்  சொல்லலாம்.
ஜெயகாந்தனிடம் இரண்டு விதமான படைப்பாற்றலை நான் பார்த்திருக்கிறேன்.  ஒன்று பிரமண வகுப்பில் நடக்கும் பாசாங்கை உடைக்கும் விதமான எழுத்து.  இரண்டாவது தலித்துகளை அடையாளப்படுத்தும் விதமாக எழுதியிருப்பது. 
யுக சந்தியில் வரும் கௌரி பாட்டியைப் பற்றிப் படிக்கும்போது எனக்கு என் பாட்டி நினைவு வந்தது.  கௌரி பாட்டியைப் போல் தைரியமாக என் பாட்டியும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பஸ் ஏறி பெண்ணைப் பார்க்கப் போய்விடுவாள்.  
ஜெயகாந்தன் கதையில் வரும் கௌரி பாட்டிக்கு ஒரே ஒரு பையன்.  அந்தப் பையனைப் பெற்றெடுத்து பாட்டி விதவை ஆகிறாள். அந்தப் பையனின் மூத்தப் பெண் கீதாவும் பத்து மாதம் திருமணம் ஆகி விதவை ஆகி விடுகிறாள்.  
தனக்கு நேர்ந்தது மாதிரி தன் பேத்திக்கும் ஆகிவிட்டதை எண்ணி பாட்டி வருந்துகிறாள்.  அந்தப் பெண்ணைப் படிக்க வைத்து உபாத்திமை ஆக்கி விடுகிறாள்.  சிதம்பரத்தில மாற்றல் கிடைத்தவுடன், பேத்தியுடன் சிதம்பரத்திற்குப் போய்விடுகிறாள்.  30 வயது பேத்தியைப் பார்த்துக்கொள்வது அவளுடைய வேலையாகிவிடுகிறது.  விடுமுறை அதிகமாக வரும்போது பேத்தியும் பாட்டியும் ஊருக்கு வருவார்கள்.  அதைத் தவிர சனி ஞாயிறுகளில் பாட்டி தலை முடியை வெட்டிக்கொள்ள பையன் இருக்கிற ஊருக்கு வந்து விடுவாள்.  
கதையின் ட்விஸ்ட் இப்போதுதான் நடக்கிறது.  கீதா எதுவும் சொல்லாமல் பாட்டி கையில் ஒரு கடிதத்தைக் கொடுத்துவிட்டு அப்பா கடிதத்தைப் படிக்கும்போது என்ன செய்தி என்று கேட்டுக்கொள்ளச் சொல்கிறாள்.  பையனிடம் கீதா கொடுத்தக் கடிதத்தைக் கொடுக்கிறாள்.  அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு திகைப்படைகிறான் பாட்டியின் பையன்.  
அதில் கீதா அவளுடன் பணிபுரிந்துகொண்டிருந்த ஹிந்தி பன்டிட் ராமசந்திரனை திருமணம் செய்து கொண்டு விட்டதாக கடிதம் மூலம் குறிப்பிடுகிறாள்.  
பாட்டி அந்தக் காலத்து விதவை என்றாலும் பேத்தியின் செயலை கண்டிக்க விரும்பவில்லை.  ஏற்றுக்கொள்கிறாள்.  பெண் திருமணம் செய்துகொண்டு பத்து மாதத்தில் விதவை ஆனாலும், அவள் அப்பாவின் தாம்பத்திய உறவில் எந்தக் குறையும் இல்லை. கீதாவுக்குப் பிறகு இரண்டு மூன்று குழந்தைகள் பிறந்து விடுகின்றன.  இதைப் புரிந்துகொண்ட பாட்டி தன் பேத்தியின் செயலை கண்டிக்கவில்லை.  பேத்தியுடன் இருக்கத் திரும்பவும் சிதம்பரம் போய்விடுகிறாள்.  பேத்தியுடன் என்னையும் சேர்த்து இல்லை என்று மூழ்கி விடு என்று பையனிடம் கடுமையாகக் கூறியபடி போய்விடுகிறாள். 
இப்போது இந்தக் கதையை வாசிக்கும்போது இது சாதாரண விஷயமாகப்படும்.  ஆனால் இந்தக் கதை வெளிவந்த
ஆண்டில் இக் கதை புரட்சிகரமான கதையாக இருந்திருக்கும். 
ஜெயகாந்தனின் பிறந்த தினத்தின்போது இந்தக் கதையை ஞாபகப்படுத்தியபடி இக் கட்டுரையை முடிக்கிறேன். 

Comments