Skip to main content

துளி : 44 - யாரும் படிப்பதில்லையா?



அழகியசிங்கர்





எழுத்தாளர் பிரபஞ்சன் ராயப்பேட்டையில் கோபாலபுரத்தில் குடியிருந்தார்.  புதுமைப்பித்தன் கதைகள் முழுவதும் படித்துவிட்டு அது குறித்து வாரம் ஒருமுறை அவருடைய வாசகர்களுடன் உரையாட நினைத்தார்.  கூடவே ஒரு சிறுகதையை எப்படி எழுதுவது எப்படி என்பதையும் சொல்லிக்கொடுக்கவும் விரும்பினார்.  ஆனால் சில வாரங்களுக்குப் பிறகு இது தொடர்ந்து நடக்கவில்லை.  இதெல்லாம் ரொம்ப ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை.  முக்கியமான ஒன்றாக இதைக் கருதுகிறேன்.  கதைகளை வாசிக்கவும் கதைகளை எழுதவும் ஒரு தளத்தை அவர் உருவாக்க முயன்றார். முடியவில்லை.
பிரபஞ்சனின் சிறுகதைகள் 3 பாகங்களாக வெளிவந்துள்ளன.  அவருடைய எல்லாக் கதைகளையும் வாசிக்கும்போது பிரபஞ்சனின் உலகம் என்னவென்று தெரியும். பிரபஞ்சனாவது கொஞ்சமாவது அங்கீகாரம் பெற்ற எழுத்தாளர். ஆனால் அவரைப்போல் திறமையாக எழுதக்கூடிய வேறு பல எழுத்தாளர்களை யாரும் கண்டுகொள்ளக் கூட இல்லை.
எழுத்தாளர் மா அரங்கநாதன் பெயரில் உருவாக்கப்பட்ட அறக்கட்டளை மூலம் கடந்த இரண்டாண்டுகளாகப் பல படைப்பாளிகளுக்கு உரிய அங்கீகாரமும், பாராட்டும் கிடைக்கிறது. மா அரங்கநாதனின் குடும்பத்தினர் மூலம் இது தொடர்ந்து நடந்து வருகிறது.  இந்த ஆண்டு வெளி ரங்கராஜனுக்கும், யூமா வாஸ÷கிக்கும். அவர்களுக்கு என் வாழ்த்துகள்.. நூற்றுக்கணக்கான கிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதி உள்ள எழுத்தாளர் மா அரங்கநாதன்.  அவர் எழுதிக்கொண்டிருந்த காலத்தில் யாரும் சரியாக அவரை வாசிக்கவில்லை. பெயரைக்கூட யாரும் குறிப்பிடமாட்டார்கள். இப்போது கூட வாசிக்கிறார்களா என்பது தெரியாது.   சாகித்திய அக்காதெமி பரிசு கூட அவருக்குக் கிடைக்கவில்லை.  அவர் கதைகளைப்போல் மற்ற மொழிகளில் யாராவது கதைகள் எழுதியிருக்க வாய்ப்புண்டா என்பதும் தெரியவில்லை.  அவர் காலத்தில் அவருடைய படைப்புகளை உணர்ந்து அதற்கான அங்கீகாரம் அளித்தார்களா என்பது தெரியவில்லை.  அவர் சாதித்தாலும் அவர் எழுத்தைக் குறித்து யாரும் உரத்துப் பேசவில்லை.  அவரும் அதைக் குறித்தெல்லாம் கவலைப்பட்டதில்லை.    அவருடைய எழுத்தின் முக்கிய அம்சம். மனிதாபிமானம்.  அவர் காலத்தில் அவர் படைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றாலும், மற்றவர்கள் படைப்புக்கு அங்கீகாரம் அல்லது கௌரவம் கிடைக்க வேண்டுமென்று நினைக்கக் கூடியவர் மா அரங்கநாதன்.  இன்று அவர் பெயரில் ஒவ்வொரு ஆண்டும் எழுத்தாளர்களைக் கௌரவம் செய்கிறார்கள்.  
எழுத்தாளர்களைத் தாங்கிப் பிடிக்கக் கூடியவர்கள் வாசிப்பவர்கள்.  இந்த வாசிப்பவர்கள் எங்கே இருக்கிறார்கள்.  அவர்கள் மௌனமாக வாசித்தபடி பேசாமல் இருக்கிறார்களா?  அல்லது இல்லவே இல்லையா என்ற கேள்வியெல்லாம் என்னுள் எழாமல் இல்லை. 
எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் பெயரைக் கூட இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.  அவரைப்போல ஒரு எழுத்தாளர் தமிழில் கிடைப்பது அரிது. யாரும் அவரைப்போல ஒரு எழுத்தை எழுதியிருக்கவே முடியாது.  மனப்பிறழ்வை எழுத்தில் வடித்து வெற்றி கண்டவர். 
இவர்களையெல்லாம் இப்போதைய வாசகர்கள் அறிவார்களாக மாட்டார்களா என்பது தெரியவில்லை. புதிதாக உருவாகும் ஒவ்வொரு வாசகனும் அறிந்துகொள்வது அவசியமில்லையா?  இன்னும் எத்தனையோ எழுத்தாளர்கள் இப்படி விடுபட்டுப் போன பட்டியலில் இல்லாமல் இல்லை.

Comments