Skip to main content

சி சு செல்லப்பாவும் சுதந்திரதாகம் நாவலும்...

சி சு செல்லப்பாவும் சுதந்திரதாகம் நாவலும்...

அழகியசிங்கர்



சுதந்திரதாகம் என்ற மூன்று பாகங்கள் கொண்ட நாவலை கொண்டு வருவதற்காக பங்களூரிலிருந்து சி சு செல்லப்பா சென்னைக்கு மனைவியை அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்.  அவர் முன்பு இருந்த பிள்ளையார் கோயில் தெருவிலேயே அவர் குடி வந்து விட்டார்.  அவருடைய உறவினர் சங்கர சுப்பிரமணியன் அவர் வீட்டின் பக்கத்தில் குடியிருந்தார்.  சி சு செல்லப்பாவின் மனைவியின் மூத்த சகோதரியும் - சங்கர சுப்பிரமணியனின் தாயாரும் அங்கு இருந்தார்கள்.
சி சு செல்லப்பா தன் புத்தகம் கொண்டு வரும் ஆவலை கட்டுப்படுத்த முடியாமல் ஒரு இலக்கியச் சிந்தனை ஆண்டு விழாக் கூட்டத்தில் ஒவ்வொரு பதிப்பாளரையும் அணுகி தன்னுடைய மூன்று பாகங்கள் கொண்ட சுதந்திரதாகம் என்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகத்தைக் கொண்டு வர முடியுமா என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
அந்த ஆண்டு 1995ஆம் ஆண்டாக இருக்குமென்று நினைக்கிறேன்.  எந்தப் பதிப்பாளரும் சுதந்திர தாகம் புத்தகத்தைக் கொண்டு வரத் தயாராயில்லை.  காரணம் சி சு செல்லப்பாவின் எழுத்து. அவருக்கு விளக்கு பரிசு கொடுக்க முயற்சி செய்தபோது, அதன் மூலம் கிடைக்கும் தொகையை üஎன் சிறுகதைப் பாணிý என்ற கட்டுரைத் தொகுதியைக் கொண்டு வர சி சு செல்லப்பா ஒப்புக்கொண்டார்.  ஆனால் அதைப் பணமாகப் பெற அவர் விரும்பவில்லை. மயிலாப்பூரில் ஒரு கூட்டம் ஏற்பாடாகியது.  அதில் பல படைப்பாளிகள் கலந்து கொண்டார்கள்.  அக் கூட்டம் சிறுபத்திரிகைகள் கலந்து கொள்ளும் கூட்டமாக அமைந்தது. 
சி சு செல்லப்பா சுதந்திர தாகம் புத்தகத்தை தானே கொண்டு வரத் திட்டம் போட்டார்.  அவர் துணிச்சலை நினைத்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  ஒவ்வொரு பாகமும் (மொத்தம் மூன்று பாகங்கள்) ஆயிரம் பிரதிகள் கொண்டு வர கிட்டத்தட்ட ரூ50000 வரையாவது செலவாகும்.  அதாவது ஒருலட்சமாகவாவது செலவாகும்.  அன்றைய தினம் அது பெரிய தொகை. 
முதலில் சி சு செல்லப்பா வெளி ரங்கராஜன் முயற்சியில் பார்க்கர் என்ற அமைப்பின் மூலம் சு தாவின் மூன்று பாகங்களையும் டிடிபி செய்து வைத்துக்கொண்டார். மணி ஆப்செட் காரரை நான் சி சு செல்லப்பாவிற்கு அறிமுகம் செய்தேன்.  சி சு செயின் வயது காரணமாக நேரிடையாக அவரைப் பார்த்து அச்சடித்துத் தரும்படி கேட்டுக் கொண்டேன்.  
பின் நண்பர்கள், உறவினர்கள் என்று பலர் இந்த மூன்று பாகங்கள் வர உதவி செய்தார்கள். குறிப்பாக லலிதா ஜ÷øவல்லரி சுகுமாரனை ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும்.   சில மாதங்களில்  மூன்று பாகங்கள் சுதந்திர தாகம் அச்சடித்து வந்ததைப் பார்த்து சி சு செவிற்கு  ஒரே சந்தோஷம்.   அவர் வீடு முழுவதும் கட்டுக்கட்டாக சுதந்திரதாகம் நிரம்பி வழிந்தது.  தானே ப்ரவுன் அட்டை வாங்கி வந்து ஒட்டி புத்தகங்களை எல்லா இடத்திற்கும் அனுப்பினார்.
அன்று இந்திய டுடே (தமிழில்) மூலம் சுதந்திர தாகம் புத்தகத்திற்கு பெரிய விளம்பரம் கிடைத்தது.  அதோடு மட்டுமல்லாமல் பல பத்திரிகைகள் பக்கப்பலமாக அந்தப் புத்தகத்திற்கு ஆதரவு தந்தன. அதன் மூலம் சி சு செல்லப்பா ஒரு 200 பிரதிகளாவது விற்றிருக்கக் கூடும்.  ஆனால் பெரும்பாலான புத்தகங்களை அவர் நினைத்தபடி  விற்க முடியவில்லை.
அப் புத்தகத்தை நூல் நிலையத்தில் வாங்குவதற்கு அதற்கான படிவத்தை நிரப்பிக் கொடுத்தும், அதிகப் பக்கங்கள் உள்ள புத்தகம் என்பதால் நூல்நிலைய ஆதரவு கிட்டவில்லை.  இந் நிலையிலும் சி சு செல்லப்பாவின் புத்தகம் கொண்டு வரும் ஆர்வம் சிறிதும் தணியவில்லை.  80 வயதுக்கும் மேற்பட்ட இளைஞராக அவர் செயல்பட்டார்.  இரண்டு மூன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நோய் குணமாகி வீடு வந்து சேர்ந்தார்.  ஒரு முறை மருத்துவமனையில் அவரைப் பார்க்கும்போது, üமாமிக்கு டாடா சொல்லிட்டேன்..ஆனால் திரும்பி வந்து விட்டேன்,ý என்று சிரித்தபடி என்னிடம் கூறியிருக்கிறார்.
அவருடைய அடுத்தப் புத்தகமாக ராமையாவின் சிறுகதைப் பாணி என்ற புத்தகத்தைக் கொண்டு வந்தார்.  கிட்டத்தட்ட 300 பக்கம் வரை உள்ள புத்தகம் அது.   ராமையாவின் பக்தர் சி சு செல்லப்பா.  300 க்கும் மேற்பட்ட கதைகள் எழுதிய ராமையாவின் கதைகள் எந்த ஆண்டு எந்தப் பத்திரிகையில் வெளிவந்தன என்ற குறிப்புடன் அப் புத்தகம் வெளிவந்தது.  அப் புத்தகம் முழுவதும் ராமையாவின் ஒவ்வொரு கதையாக எடுத்து விமர்சனம் எழுதி இருந்தார்.  "ராமையாவின் கதைகளே புத்தகமாக இல்லாதபோது, ஏன் இப்படி ஒரு விமர்சனப் புத்தகத்தை அச்சடித்தீர்கள்?" என்று கேட்டேன்.  ஆனால் யார் சொல்வதையும் சி சு செல்லப்பா கேட்க மாட்டார்.  இன்னும் கூட ராமையாவின் முழுக் கதைத் தொகுதி வெளிவரவில்லை. சி சு செல்லப்பாவின் அந்தப் புத்தகம் வேறு 500 பிரதிகள் வீட்டின் இடத்தைப் பிடித்துக் கொண்டன.  
வயது மூப்பின் காரணமாக சுதந்திர தாகம் புத்தகத்திற்கு நூலக ஆதரவு கிடைக்காமலே மரணம் அடைந்து விட்டார்.  பின் அந்தப் புத்தகக் கட்டுகள் எல்லாம் விற்கப் பட முடியாமல், சி சு செல்லப்பாவின் உறவினரான சங்கர சுப்பிரமணியன் வீட்டில் ஒரு அறையில் இருந்தன.  பல புத்தகங்கள் கரையானால் பாதிக்கப்பட்டு வீணாய்ப் போயின.
"பாருங்கள்...சுதந்திர தாகம் புத்தகங்கள் எல்லாம் திருவல்லிக்கேணி பிளாட்பாரத்திற்கு வரப் போகின்றன," என்று ஒரு கோட்பாடு ரீதியில் விமர்சனம் செய்யும் விமர்சகர் சொன்னது என் காதில் இன்னும் ஒலிக்கிறது.  மூன்று பாகங்கள் கொண்ட சு தா புத்தகத்தின் விலை ரூ.500 தான்.  கிட்டத்தட்ட ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகம்.  1997ஆம் ஆண்டில் அது பெரிய தொகை.  யாரும் அவ்வளவு எளிதில் பணம் கொடுத்து வாங்கி விட மாட்டார்கள்.
மேலும் சி சு செல்லப்பாவின் தமிழ் நடை.  அதைப் படித்துப் பழக வேண்டும்.  அவ்வளவு இணக்கமான நடை அல்ல அது.  உதாரணமாக சு தா வின் முதல் பாகத்தில் பக்கம் 300ல் உள்ள ஒரு பாராவில் சி சு செல்லப்பா இப்படி எழுதியிருப்பார் :
"தாங்கள் மதிப்பு வைத்துள்ள தங்கள் ஊர் பிரமுகரை இப்படி அல்ப போலீஸ் நடத்தினால் அங்கேயுள்ள ஜனங்கள் மனம் எப்படி கொதித்திருக்கும் கற்பனை செய்து பார்,"
இப்படி புத்தகம் முழுவதும் அவர் நடையைப் படிக்க பழகியிருக்க வேண்டும்.  ஆனால் நிதானமாக வாசித்தால் அவர் நடையை ரசிக்க முடியும். 
சி சு செல்லப்பாவிடம் எனக்குப் பிடித்தது.  அவருடைய எளிய வாழ்க்கை.  கடைசி வரை தன்னுடைய பிடிவாதத்தை அவர் விட்டுக் கொடுத்ததில்லை.  அவர் எழுத்து மீது அவருக்கு அபார நம்பிக்கை உண்டு.  
அவர் இறந்தபிறகு சுதந்திர தாகம் புத்தகத்திற்கு நூல்நிலைய ஆதரவு கிடைத்தது.  அவருக்கு அந்தப் புத்தகத்திற்காக சாகித்திய அக்காதெமி பரிசு கிடைத்தது.  அவர் உயிரோடு இருந்தால் அந்தப் பரிசை வாங்கியிருக்க மாட்டார்.  மேலும் சுதந்திர தாகம் புத்தகத்தை நான்  புத்தகக் காட்சியில் ரூ150 விதம் ஒரு செட் புத்தகத்தை எளிதாக பல பிரதிகளை விற்றுக் கொடுத்தேன்.  எல்லாப் புத்தகங்களும் விற்றுத் தீர்ந்து விட்டன.  
இப்போது சுதந்திர தாகம் மூன்று பாகங்களையும் புத்தகமாக மறுபடியும் கொண்டு வருவது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகத்தான் தோன்றுகிறது.  சி சு செல்லப்பாவின் பல புத்தகங்களைக் கொண்டு வந்த காலச்சுவடு பதிப்பகம் ஏன் சுதந்திர தாகத்தை விட்டு வைத்தார்கள் என்பது தெரியவில்லை.  ஆனால் முதன் முறையாக டிஸ்கவரி புக் பேலஸ் சுதந்திர தாகத்தைக் கொண்டு வர உள்ளது.  வேடியப்பனின் துணிச்சலுக்கு என் வாழ்த்துகள்.  ஆயிரம்பக்கங்களுக்கு மேல் உள்ள இப் புத்தகத்தின் சலுகை விலை ரூ.1000.  சி சு செல்லப்பாவின் புதல்வர் மணியைச் சந்தித்து உரிமைப் பெற்றுதான் இப் புத்தகத்தை வேடியப்பன் கொண்டு வருகிறார்.  அவர் உற்சாகத்திற்கு யாரும் தடை செய்ய முடியாது.  இத் தருணத்தில் 
    சி சு செல்லப்பா உயிரோடு இருந்தால் அவருடைய ஆசிர்வாதம் வேடியப்பனுக்கு நிச்சயம் கிடைத்திருக்கும். நானும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 


 

Comments