Skip to main content

எதையாவது சொல்லட்டுமா ......102

        

அழகியசிங்கர்






நேற்று நான் மயிலாடுதுறையில் இருந்தேன்.  நான் தங்கியிருக்கும் லால் பகதூர் வீதிக்குச் செல்லும் வழியில் ஏகப்பட்ட நாய்கள்.  ஒவ்வொன்றும் கத்திக்கொண்டிருந்தது.  எனக்கு நாய் என்றால் பிடிக்காது.  கடித்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் கூட உண்டு.  என்னை பைக்கில் அழைத்துக்கொண்டு வந்தவர், மயிலாடுதுறையில் இருக்கும் என் நண்பர் பிரபு.  அவரிடம் கேட்டேன்:

"இந்த நாய்களை ஒன்றும் செய்ய முடியாதா?"  'முடியாது,' என்பதுபோல் தலை ஆட்டினார்.  இரவு நேரத்தில் தனியாக அந்தத் தெருவில் நடந்து வர முடியுமா என்பது சந்தேகம்.

சில மாதங்களுக்கு முன்பு என் உறவினர் ஒருவருக்கு அந்தப் பகுதியில்தான் ஒரு நாய் கடித்துவிட்டது.  பிரபுடன் வண்டியில் போனதால்தான் இப்படி ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது.   அந்த உறவினர் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மயிலாடுதுறைக்கே வரவில்லை என்று பிரபுவிடம் சொல்லி ஜோக் அடித்தேன்.  

"மேனகா காந்தியால் பிராணிகள் வதை செய்யக்கூடாது என்று சட்டம் போட்டதால், நாய்களை யாரும் பிடித்துக்கொண்டு போக மாட்டார்,"
 என்றார்  பிரபு பெருமிதத்தோடு.

"ஆனால் ஒன்று செய்யலாம்.  எல்லா நாய்களுக்கும் கருத்தடை செய்து விடலாம்," என்றேன் நான். பின் நாய்களைப் பற்றிப் பேசுவதை விட்டுவிட்டோம்.  பின் அசிக்காடு என்ற ஊரில் உள்ள வீரன் கோயிலுக்கு நாங்கள் இருவரும் ஒன்றாகச் சென்றோம்.  வழியில் மயூர விலாஸ் என்ற ஓட்டலுக்குச் சென்று இட்லி வடையுடன் தோசையும் சாப்பிட்டோம்.  ஆனால் தோசையைப் பாதிக்கு மேல் சாப்பிட முடியவில்லை.  வேண்டாமென்று ஒதுக்கி விட்டோம்.  அசிக்காடு என்ற ஊரல் ஒரே ஒரு குருக்கள்தான் அவர் பல கோயிலுக்கும் குருக்களாக இருக்கிறார்.  கோயிலில் சாமி மாத்திரம்.  அவர்தான் பூஜை செய்து கொண்டிருக்கிறார்.  எங்களுடன் வீரன் கோயிலுக்கு வந்து அங்கு அர்ச்சனை செய்தார்.  வீரன் என்பது கோயில் பக்கத்திலுள்ள பனை மரங்கள்தான் என்று பனை மரம் இருக்கும் திசையைக் காட்டினேன் பிரபுவிடன்.

பிரபு என்னை மயிலாடுதுறையில் விட்டுவிட்டு சிதம்பரம் சென்று விட்டார்.  எப்படி? பைக்கில். அவருக்கு சின்ன வயது என்றாலும் துணிச்சல் அதிகம்.  நேற்று ஒரே வெயில்.  மயிலாடுதுறையில் உள்ள எங்கள் வங்கியில் பணிபுரியும் என் நண்பர் ஒருவரைப் பார்க்கப் போயிருந்தேன்.   அவரைப் பார்க்கும்போது என்னால் நம்ப முடியவில்லை.  வயதானவராகக் காட்சி அளித்தார்.  அதற்கான காரணம் என்ன என்று புரியும்.  ஒருவர் வங்கியில் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து பின் பதவி உயர்வு பெற்றால், அவருக்கு பதவி உயர்வு பலனாக சர்கரை, இரத்த அழுத்தம் எல்லாம் வந்துவிடும்.  நண்பர் இரவு 8.30க்குத்தான் வீட்டிற்கு அலுவலகத்திலிருந்து போவதாக வருத்தத்துடன் சொன்னார்.  "வவுச்சர்களை பாஸ் செய்யும்போது, ஜாக்கிரதை," என்றேன்.  "கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்," என்றார்.  

மாலை 4 மணிக்கு பிரபு வந்திருந்தார்.  அவர் முகத்தில் களைப்பு தெரிந்தது. ஆனால் உற்சாகமான மனிதர்.  ஒரு கவிதை ஒரு கதை கூட்டத்தை மயிலாடுதுறையில் நடத்த நினைத்தேன்.  ஆனால் பிரபுவிற்கு மூட் இல்லை.  அதனால் அந்த முயற்சியைத் தொடர வில்லை.  அதனால் நான் ஒரு கவிதை ஒரு கதை ஒரே ஆள் கூட்டமாக மாற்றலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

இரவு 8 மணி சுமாருக்கு ஆரியாஸில் நானும் பிரபுவும் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.  அப்போது வெள்ளம் வந்தபோது திருப்பனந்தாள் காசி மடம் ஒரு கிராமத்தை தத்து எடுத்து உதவி செய்ததை பிரபு விவரித்துக் கொண்டிருந்தார்.  யாருக்காவது உதவி செய்ய வேண்டுமென்ற எண்ணம் பிரபுக்கு எப்போதும் உண்டு.  சிதம்பரம் சென்றது கூட யாருக்கோ படிப்புக்காக உதவி செய்யத்தான்.  நான் அவர் பெயரை இங்கு பயன்படுத்துவதைக் கூட அவர் விரும்ப மாட்டார்.  ஆனால் அவரைப் பற்றி தெரிய வேண்டு மென்பதற்காககத்தான் அவர் அனுமதி இல்லாமல் பெயரைப் பயன்படுத்துகிறேன்.

நானும் அவரும் பேசிக்கொண்டிருக்கும்போது சில நிகழ்ச்சிகள் நடக்கும்.  சிலசமயம்.  ஒருமுறை மயிலாடுதுறையில் இருந்தபோது எனக்கு சுரம்.  ஒரு மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு போனார்.  அங்கே ஒரே கூட்டம்.  நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் உட்கார்ந்து கொண்டிருந்தோம்.  அந்த சமயத்தில் எங்கள் முன்னால்  டாக்டரைப் பார்க்க வந்திருந்த ஒரு நடுத்தர வயதுக்காரர் இதயம் துடிக்க கீழே விழுந்து மரணம் அடைந்து விட்டார்.  எனக்கும் பிரபுவுக்கும் பெரிய திகைப்பு.  நான் அந்த இடத்தை விட்டு ஓடி வந்து விட்டேன்.

அந்த நிகழ்ச்சியைத்  தாங்க முடியாமல் ஆஸ்பத்ரி வாசலில் பிரபு வாந்தி எடுத்தார்.  

தன்னலமற்ற சேவை செய்வதில் காசிமடத்தின் பங்கைப் பற்றி பிரபு பேசிக்கொண்டு வந்தார்.  "உழவன் எக்ஸ்பிரஸ் பிடிக்க வேண்டும்," என்றேன் பிரபுவிடம்.  திரும்பவும் நாங்கள் வீட்டிற்கு வந்து, நான் சென்னைக்குச் செல்ல ஆயுத்தம் செய்து கொண்டேன்.  என்னை டூவீலரில் ரயில்வே ஸ்டேஷனலில் கொண்டு விட தயாராக இருந்தார்.

அப்போதுதான் பிரபுவிற்கு காசி மடத்திலிருந்து செய்தி வந்தது.  திருப்பணந்தாள் காசிமட இணை அதிபர் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் சித்தி அடைந்து விட்டார் என்ற செய்தி.  நாங்கள் ஆர்யாஸில் சாப்பிட்டுக்கொண்டிருந்த சமயத்தில் சுவாமிகளுக்கு எதிர்பாராத விதமாய் மாரடைப்பு வந்து சித்தி அடைந்து விட்டார்.  பிரபுவும் அவரும் சில தினங்கள் கழித்து பங்களூர் செல்வதாக இருந்தார்கள். உண்மையில் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் பற்றிதான் பிரபு என்னிடம் பேசிக்கொண்டிருந்தார்.  இதுமாதிரியான நிகழ்வு ஒரு தொடர்ச்சியா?

நான் உழவன் எக்ஸ்பிரஸ் பிடித்து செல்லும் இத் தருணத்தில் இந்தச் செய்தி வந்தது.  பிரபு பரபரப்பாகி விட்டார்.  பலருக்கு போன் செய்தார்.  உடனேயே என்னை ஸ்டேஷனலில் கொண்டு விட்டு திருப்பனந்தாள் செல்ல தீவிரமாக இருந்தார்.  அப்போது மணி இரவு பத்து மணி இருக்கும்.  "வேண்டாம். பிரபு.  காலையில் போய்ப் பாருங்கள்," என்றேன்.  பிரபு பதட்டத்தில் இருந்ததால் அதையெல்லாம் கேட்கவில்லை.  திருப்பனந்தாள் கிட்டத்தட்ட மாயவரத்திலிருந்து 40 கிலோமீட்டர் தூரம் இருக்கும்.  தெருவில் டூ வீலரில் போய்க் கொண்டிருக்கும்போது சிலர் தெருவில் பேசிக்கொண்டிருந்தார்கள்.  அவர்களைப் பார்த்து பிரபு வண்டியை நிறுத்திவிட்டு சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் சித்தி அடைந்த விஷயத்தைச் சொல்லிக் கொண்டு வந்தார்.  

உழவன் எக்ஸ்பிரஸில் தனியாக என்னை விடும்போது நானும் அமைதி இல்லாமல் இருந்தேன்.  மாரடைப்பு வந்தால் யாராலும் உடனடியாக காப்பாற்ற முடியாதா என்ற கேள்விக்கு முன்னால்,

நகுலனின் ஒரு கவிதை ஞாபகத்திற்கு வருகிறது.

இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்.

Comments