Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 17

அழகியசிங்கர் 


முனியமரம்

பாலா



அந்த புளியமரத்தைக் கடந்துதான்
எல்லோரும் செல்லவேண்டும் ஊருக்குள்

உருண்டு திரண்டு நிற்கும் அந்தப் புளியமரம்
ஒட்டுமொத்த ஊருக்கான
பயத்தையும் உள்வைத்திருந்தது

ஒத்தையாய் ஒருவரும் கடப்பதில்லை
முனி இருப்பதாய் சொல்லும்
அந்தப் புளியமரத்தை

வாந்தி பேதி முதல்
நல்லது கெட்டது வரை
முனியோட வேலைதான் என நம்பிய ஊர்
இரவு எட்டுமணிக்கும்
சாமியாடியின் பேச்சுக்கும்
அடங்கிபோகும்

முனி விரட்டுதலும்
மூலிகை வைத்தயமும்
மூன்று தலைமுறையாய் வளர்க்கிறது
சாமியாடியின் சந்ததியை

வாக்கு கேட்டு வருவோரின்
வசதியை பொருத்து வசூலிக்கப்படும்
வகை வகையாய் சுருட்டு, சாராயம், கோழி என
எல்லாவகை வஸ்த்துக்களும்

ஒரு நாள்
அடித்த அசுரக் காற்றில்
அடியோடு சாய்ந்த முனியமரம்
பெருந்திரள் கூட்ட பூசையோடு
அகற்றப்பட்டது

பிழைப்புப்போன விசனத்தில்
ஒடுங்கிப்போன சாமியாடிக்கு
பாடம் போட்டாள் சாமியாடி சம்சாரம்

"அட கூறுகெட்ட மனுசா
ஒத்தையா குத்தவைச்சு ஒக்காராம
ஊருக்குள்ள போயி சொல்லு!
புளியமரத்துல இருந்த முனி
நேத்து வைச்ச புங்க செடியில்
குடியேறிச்சுனு"

அடுத்த பூசை ஆரம்பமானது.......


நன்றி : முனியமரம் - கவிதைகள் - பாலா - விலை : ரூ.80 - பதிப்பாண்டு 2015 - பக்கம் : 80 - புதிய தரிசனம் பதிப்பகம்,
10/11 அப்துல்ரசாக் 2வது தெரு, சைதாப்பேட்டை, சென்னை 600 015
தொலை பேசி எண் : 044 - 42147828

Comments