Skip to main content

அசோகமித்திரனின் அந்தரங்கமானதொரு தொகுப்பு


நான் இந்த மாதம் வரை 5 புத்தகங்கள் கொண்டு வந்துள்ளேன்.  ஐந்தாவது புத்தகம் அசோகமித்திரனின் அந்தரங்கமானதொரு தொகுப்பு.  232 பக்கங்கள் கொண்ட தொகுப்பு இது.  கதைகளும் கட்டுரைகளும் கலந்த தொகுப்பு.  இத் தொகுப்பைப் படிப்பவருக்கு  தெரியும்.  அசோகமித்திரன் எதை கதையாக எழுதியிருக்கிறார், கட்டுரையாக எழுதியிருக்கிறார் என்று.  

ஒரு கூட்டத்தில் ஒரு எழுத்தாளர் அசோகமித்திரன் கதை ஒன்றைப் படித்துவிட்டு அது கதை அல்ல கட்டுரை என்று உரத்து சத்தம் போட்டு வாதம் செய்தார்.  அசோகமித்திரன் என்ன பதில் சொல்கிறார் என்றும் எதிர்பார்த்தார்.  உங்கள் பார்வையில் அப்படி பட்டால் நான் இனிமேல் ஒன்றும் செய்வதற்கில்லை என்று குறிப்பிட்டார்.

அசோகமித்தரன் போன்ற படைப்பாளிக்கு எது கதையாக வருகிறது, எது கட்டுரைகயாக வருகிறது என்பது நன்றாகவே தெரியும்.  நான் பல ஆண்டுகளுக்கு முன்னால் கன்னிமேரா லைப்ரரியில் பழைய பத்திரிகைகளின் இதழ்களைப் பார்க்க நேரிட்டது.  அப்போது ஒரு பெண் எழுத்தாளரின் கதையைப் படித்தேன்.  என்னால் படிக்கவே முடியவில்லை.  ஆனால் அவர் பின்னால் புகழ்பெற்ற எழுத்தாளராக இருந்தார்.  அதே அசோகமித்திரனின் பல ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய கதையை இப்போது எடுத்துப் படிக்கும்போது, அதன் புதுத்தன்மை மெருகு குலையாமல் இருக்கும்.

கதையும் கட்டுரையும் கலந்த இந்தத் தொகுப்பு ஒரு அந்தர்கமானதொரு தொகுப்பு தான்.  இதில் முக்கியமாக இன்கிரிட் பெர்க்மன் சுயசரிதையைப் பற்றி எழுதியிருக்கிறார். கல்கியும் தேவனும் என்ற ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.  

கல்கியின் நிழலிலேயே தேவன் இருந்து வந்தார்.  üகல்கிக்கும் தேவன் மாதிரி ஒருவர் ஆனந்தவிகடனை விட்டு விலகுவதில் பெரிய வருத்தம் இருக்காது. தனக்குக் கீழே உள்ளவன் நிறைய ஆற்றல் படைத்தவனாக இருந்தால் எந்த நேரம் தன்னையே கவிழ்த்து விடுவானோ என்ற அச்சம் பத்திரிகைத் துறையில் தவிர்க்க முடியாதது.  பின்னொரு காலத்தில் தேவனுக்கும் இதே பெயர் கிடைத்ததுý என்று அசோகமித்திரன் இப் புத்தகத்தின் 55வது பக்கத்தில் குறிப்பிடுகிறார்.

இப்படி படிக்க தூண்டுகிற கட்டுரைகளும் கதைகளும் கொண்ட தொகுப்புதான் இது  

கணவன். மகள். மகன் என்ற கதை எனக்குப் பிடித்த கதை.  எப்படி மனைவியை கணவன் அலட்சியப்படுத்துகிறான் என்பதையும், மகள் அம்மாவை எப்படி அலட்சியப்படுத்துகிறாள் என்பதையும், மகன் தான் குடிப்பதை அம்மாவிடம் ஏன் மறைக்கிறான் என்பதையும் விவரித்துக் கொண்டு போகிறார்.

ஒரு புத்தகத்தை எப்போதும் எடுத்து வாசிக்க வேண்டுமா , அந்தரங்கமானதொரு தொகுப்பு அப்படிப்பட்ட ஒன்றுதான் என்பதில் சந்தேகமே இல்லை.  விருட்சம் வெளியீடாக ஐந்தாவது புத்தகமாக இதைக் கொண்டு வந்துள்ளேன்.

Comments