Skip to main content

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்

அழகியசிங்கர்




உமாபதியின் வெளியில இருந்து வந்தவன் என்ற கவிதைத் தொகுதி விருட்சம் வெளியீடின் நான்காவது தொகுதி.  வெளிவந்த ஆண்டு நவம்பர் 1991. கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஓடி விட்டன.  அவரும் என்னைப் போல் வங்கியில் பணிபுரிந்தவர்.  இப்போது எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை.  அவருக்கு வயது எழுபதாவது இருக்கும்.

இந்தத் தொகுதிக்கு சுந்தர ராமசாமி முன்னுரை எழுதியிருக்கிறார். அவருடைய கவிதைகள் குழப்பமில்லாமல் ஆழ்ந்து யோசனை செய்ய வைக்கும். இந்தத் தொகுதி வரும்போது ஒரு முறை என்னைப் பார்க்க வீட்டிற்கு வந்திருக்கிறார்.  அன்று ஒரு பண்டிகை தினம்.   நான் வீட்டில் அவருக்கு விருந்தளித்தேன்.  இப்போது அவர் முகமே எனக்கு மறந்து விட்டது.  
ஓசைகள் என்ற இக் கவிதைக்கு ஓவியர் பாஸ்கரன் ஒரு பூனை படம் வரைந்திருக்கிறார்.  பூனை படங்களை வரைவதில் பாஸ்கரன் திறமையானவர் என்று கேள்விப்ப்ட்டிருக்கிறேன்.

இத் தொகுப்பை திரும்பவும் கொண்டு வர உத்தேசித்துளளேன்.


உமாபதி

ஓசைகள்

ஓசைகளின் உபத்திரவம் 
தாங்க முடியாமல் போச்சு
இன்ன இடமென்றில்லாமல்
வீட்டில்
வெளியில்
விவஸ்தை கெட்டுப் போச்சு
எப்போது என்று ஞாபகமில்லை
மனிதர்கள் பேச்சை மறுத்து
ஒதுங்கிய நாளாய் இருக்கலாம்
கதிகளின் ஓசைக்குக் காதை
அடைத்த அன்றாய் இருக்கலாம்
காற்று பேசத் துவங்கியது
தன் இச்சைப்படி
மெலிதாய் உரத்தும்
விஷயங்களுக்குத் தக்கபடி
எல்லாம் கை மீறினதாய் உணர்ந்து
வழியில்லாமல்
குருடாக்கிக் கொண்டேன்
விளைந்தது ஆபத்து
முதல் நாள்
எதரில் கண்ட சில விரல்களில்
இன்னும் சில முகங்களில்
என் செவிகள்
பின்னர் ஒரு பூனையின் முகத்தில்
புல்லின் நீர் கோந்த முகத்திலும் கூட
நாளாக நாளாக என் உடம்பே
எனக்கொரு செவியாச்சு
உலகெங்கும் என் செவிகள்
வெளியெங்கும் என் செவிகள்

எல்லாம் ஆரவாரம்.

Comments