அழகியசிங்கர்
டிசம்பர் முதல் தேதி என் பிறந்தநாள். இரண்டாம் தேதி நான் எதிர்பாராத நிலை ஏற்பட்டது. மழை ஏற்பட்டதால் நான் வெளியே போகவில்லை. இந்த நிலை அப்படியே நீடித்திக் கொண்டிருந்தது. எங்கள் தெருவில் போன மழையில் தண்ணீர் வரவில்லை. நான் ஹாய்யாக டிவி பார்த்துக்கொண்டிருந்தேன். முடிச்சூரில் தண்ணீர் சூழ்ந்து எல்லோரும் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அதை டிவியில் காட்டியபோது நம்ப முடியாமல் இருந்தது. நம் சென்னையில் ஒரு பகுதியிலா இப்படி என்று பட்டது.
நம்ம இடம் பரவாயில்லை என்று நினைத்தது எவ்வளவு தப்பு. எனக்குத் தோன்றியது கரண்ட் கட் ஆகிவிட்டால் என்ன செய்வது. உடனே மோட்டார் போட்டு மேலே தொட்டியை நிரப்பினேன். அப்போது மழைப் பெய்து கொண்டிருந்தது. ஒரு அரை மணி நேரம் போட்டிருப்பேன். பின் அணைத்து விட்டேன். ஆனால் 9 மணிக்கு கரண்ட் நின்றுவிட்டது.
மழை வலுத்துக் கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து தெருவைப் பார்த்தபோது தெருவெல்லாம் தண்ணீர். நான் திகைத்துவிட்டேன். நம்ம தெருவிற்கே தண்ணீர் வராதே? எப்படி?
இன்னும் கொஞ்ச நேரம் பார்த்தேன். மழை வலுத்துக் கொண்டிருந்தது. முன்பே விட தண்ணீர் அதிகமாக இருந்தது. என்னால் நம்ப முடியவில்லை. முன்பு நாங்கள் இருந்த போஸ்டல் காலனி தெருவில்தான் சாதாரண மழைக்கே தண்ணீர் வந்துவிடும். ஆனால் ராகவன் காலனி என்கிற இந்தத் தெருவில் அப்படி இல்லை. ஏன் இப்படி?
இந்தத் தெருவில் எங்கள் வீடுதான் புதிதாக கட்டியிருக்கும் இடம். சற்று மேடாக இருக்கும். கீழ் தளத்தில் கார்கள் டூ வீலர்கள் வைத்துக் கொள்ள முடியும்.
தெருவில் வண்டிகள் வைத்துக் கொண்டவர்கள் எங்கள் வீட்டில் பைக் கார் வைத்துக்கொள்ள அனுமதி கேட்டார்கள். சரி என்றேன்.
தெருவில் வைத்திருந்த பெரும்பாலான வண்டிகள் எங்கள் வீட்டில் நுழைந்து விட்டன.
எனக்கே பெருமை நம்ம வீடு இந்தத் தெருவிலுள்ள வண்டிகளைத் தாங்குகின்றன என்று. கீழே உள்ள ஒரு இடத்தில் என் புத்தகங்களை வைத்திருந்தேன். தரையில் வைத்திருந்தேன். என் பிறந்த தினத்தை ஒட்டி நேர் பக்கம் என் கட்டுரைத் தொகுதியை அடுக்கடுக்காக வைத்திருந்தேன். டிசம்பர் ஒன்றாம் தேதி சிலரைப் பார்த்து என் புத்தகப் பிரதியைக் கொடுக்க நினைத்தேன். எனக்கு சிறிது சந்தேகம். புத்தகங்களை மேடையில் ஏற்றி வைத்து விடலாம் என்று. தரையில் தண்ணீர் வந்தால் என்ன செய்வது. உண்மையில் நான் வராது என்றுதான் நம்பிக் கொண்டிருந்தேன். ஆனாலும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வைக்கத் தொடங்கினேன். என் வீட்டில் குடியுள்ள மற்றவர்கள் எனக்கு உதவி செய்தார்கள்.
சிறிது நேரம் கழித்து நான் திரும்பவும் பார்த்தபோது தண்ணீர் உள்ளேயே நுழையவே ஆரம்பித்து விட்டது. என்னால் நம்ப முடியவில்லை. என் வீட்டு பின் பகுதியில் அடுத்தத் தெருவில் உள்ள வீடு மூழ்கி விட்டது. பின் பகுதி வீட்டுக் கிணறு ரொம்பி வழிந்தது. அதன்பின்தான் இந்தத் தண்ணீரின் விபரீதம் புரிந்தது. அவசரம் அவசரமாக கீழே உள்ள வீட்டில் தரையில் பரப்பியிருந்த புத்தகங்களை எடுத்து சமையல் அறை மேடைமீது அவசரம் அவசரமாக திணித்தேன். மெதுவாக தண்ணீர் வீட்டின் உள்ளே நுழைந்து என் காலை தொட்டு விட்டது. என் முயற்சயில் சோர்வே ஏற்பட்டது. சில புத்தகங்களை பெஞ்சில் வைத்தேன். பின் அவசரம் அவசரமாக அந்த இடத்தை விட்டுக் கிளம்பிúன்.
விலை மதிக்க முடியாத எத்தனையோ புத்தகங்கள் தரையில் இருந்தன. அவையெல்லாம் ஜல சமாதி ஆக வேண்டியதுதானா என்று தோன்றியது.
கொஞ்ச நேரத்தில் புத்தகம் எல்லாம் தண்ணீரில் சூழ்ந்து விட்டன. உள்ளே பார்க் பண்ணியிருந்த டூ வீலர்கள், கார்கள் எல்லாம் தண்ணீரில் மூழ்கி விட்டன. முதல் மாடியில் நாங்கள் குடியிருந்தோம். கிட்டத்தட்ட 20 படிகள் தாண்டி வர வேண்டும். 6 படிகளைத் தாண்டி வந்துவிட்டன தண்ணீர். மேலும் தெருவில் காலடி வைத்தால் என் கழுத்துக்கு மேல் தண்ணீர். ஒவ்வொரு வீட்டிலிருப்பவர்களும் மொட்டை மாடிக்கு வந்து விட்டார்கள். மொட்டை மாடியைப் பார்த்தபோதுதான் தெரிந்தது. எங்கள் தெருவில் அவ்வளவு பேர்கள் உள்ளனரா என்று.
என் மனம் திக் திக் என்று அடித்துக் கொண்டது. என் மனைவி எனக்கு மேல் பயந்தவளாக இருந்தாள். காலையில் தண்ணீர் வரும்போது என் டிஜிட்டல் காமரா மூலம் படம் பிடித்துச் சென்றேன். சிலரை தந்தி டிவி மாதிரி பேட்டி எடுத்துக் கொண்டிருந்தேன். நான் பார்த்துக் கொண்டிக்கும்போதே கோவிந்தன் ரோடில் வெள்ளம் போல் தண்ணீர் அடித்துக் கொண்டே சென்றது. எல்லாம் வேகம்வேகமாக அடித்துச் சென்று கொண்டிருந்தது.
எதிரில் குமரன் ஸ்டோரில் பணிபுரிந்தவர்கள் வீடு. தண்ணீர் அந்த வீட்டிற்குள் நுழைந்து அட்டகாசம் பண்ணியது. எல்லாவற்றையும புரட்டிப் போட்டது. அந்த வீட்டிற்குள் இருந்தவர்கள் மாடிக்கு ஓட்டமாய் ஓடிவிட்டார்கள்.
ராத்திரி எல்லாம் தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டேன். ஒரே இருட்டு. தண்ணீர். 93வயதாகிற அப்பாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அவர் பாட்டுக்கு இருந்தார். நான் எப்போதோ வாங்கிய பிலிப்ஸ் ரேடியோவைக் கேட்டுக் கொண்டிருந்தேன். யூபிஎஸ் ஜாக்கிரதையாகப் பயன் படுத்திக் கொண்டோம். யாரிடமும் தொடர்பு கொள்ள முடியவில்லை. மடிப்பாக்கம் ராம்நகர் 8வது மெயின் சாலையில் இருக்கும் என் பெண் தன் குடும்பத்துடன் முதல் மாடிக்கு ஏறிச் சென்றுவிட்டாள். எனக்கு அவள் குடும்பத்தைப் பற்றி கவலை.
முதல் மாடியில் 6வது படியை துவம்சம் பண்ணும் தண்ணீரை நினைத்து எனக்குக் கவலை. ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் ஒருமுறை வாசலில் வந்திருந்து இன்னும் தண்ணீர் எத்தனைப் படிக்கட்டுகள் ஏற வேண்டும் என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.
அடுத்த நாள் அடுத்தநாள் என்று தண்ணீர் வடிந்து விட்டது. இயல்பு நிலை வர சில நாட்கள் ஆயிற்று.
Comments
விரைவில் மீளும் சென்னை.... நம்பிக்கை வைப்போம்....