அழகியசிங்கர்
நான் பார்க்க வேண்டுமென்று நினைத்த எழுத்தாளர்களில் ஒருவர் சார்வாகன். இன்னொருவர் ராஜம் கிருஷ்ணன். இவர்கள் உயிரோடு இருக்கும்போது சந்தித்துப் பேச வேண்டுமென்று நினைத்தேன். ஆனால் அது சாத்தியம் இல்லாமல் போய்விட்டது. முதல் காரணம். நான் பார்க்க நினைத்த எழுத்தாளர்களை யாராவது ஒருவராவது அவர்களுக்குத் தெரிந்தவர்கள் எனக்கு அறிமுகப் படுத்தி இருக்க வேண்டும். புத்தகம் மூலம் இந்த எழுத்தாளர்களை எனக்குத் தெரிந்திருந்தாலும் முழுமையாக இவர்கள் எழுதிய புத்தகங்களை நான் படித்தவனில்லை. ஏன்எனில் புத்தகம் படிப்பது எனக்குப் போராட்டமாக இருக்கிறது. நான் விரும்பும் எழுத்தாளர்களின் புத்தகங்களைப் படிக்கும்போது பெரிய போருக்குத் தயாராவது போல் இருப்பேன். அதே சமயத்தில் புத்தகம் படிப்பது போல் அற்புதமான விஷயம் வேறு எதுவுமில்லை என்றும் நினைப்பவன்.
ராஜம்கிருஷ்ணன் புத்தகங்களை நான் ஆரம்ப காலத்திலேயே படித்திருக்கிறேன். க்ரியா வெளியீட்டின் மூலம் வெளிவந்த சார்வாகனின் சிறுகதைத் தொகுதியான üஎதுக்குச் சொல்றேன்னா,ý என்ற புத்தகத்தை அது வந்த சமயத்திலேயே வாங்கி வைத்திருக்கிறேன். ஆனால் வழக்கம்போல் சில கதைகளைப் படித்துவிட்டு வைத்துவிட்டேன். ஒரு புத்தகத்தை எடுத்து நான் பிறகு படிக்கலாம் என்று வைத்து விட்டால், அதைத் திரும்பவும் கண்டு பிடித்து படிப்பது எனக்கு சிரமமாகிவிடும். இந்த விதத்தில் சார்வாகன் எழுத்தை முழுதும் படிப்பதை விட்டுவிட்டேன். இதே போல் பல எழுத்தாளர்களை நான் படிப்பதை விட்டிருக்கிறேன். ஆனால் என் மனதில் சார்வாகன் ஒரு முக்கியமான எழுத்தாளர் என்ற எண்ணம் எப்போதும் இருந்து கொண்டே இருந்தது.
அதன்பின் 40 சிறுகதைகளும் 3 குறுநாவல்களும் கொண்ட 500 பக்கங்கள் கொண்ட சார்வாகன் கதைகள் என்ற புத்தகம் நற்றிணை பதிப்பக வெளியீடாகக் கிடைத்தப் புத்தகமும் எனக்குக் கிடைத்தது. எப்போது முழுவதும் படிக்க ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் நான் அழகிரிசாமியின் கதைகளைப் படித்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு சமயமும் சார்வாகன் கதைகள் புத்தகம் பார்ப்பதற்குக் கிடைக்கும்போது, ஆரம்பிக்கவேண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்து வைத்துவிடுவேன்.
ஆனால் சமீபத்தில் வந்த வெள்ளம் என் அறையைச் சூறை ஆடியது. அதில் சார்வாகன் கதைகளும் மாட்டிக்கொண்டது. தண்ணீரில் நனைந்து நன்றாக ஊறிப் போய்விட்டது. ஆனால் அந்தப் புத்தகத்தை நான் தூக்கிப் போடவில்லை. நனைந்து விட்டது என்று கொஞ்சம் வருத்தப்பட்டேன். ஆனால் இப்போது அவர் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்து விட்டேன்.
சமீபத்தில் நான் வைதீஸ்வரன் என்ற கவிஞரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவர் சார்வாகன் நண்பர். üஒரு சோகமான விஷயம்,ý என்றார். 'என்ன?' என்று கேட்டேன். "சார்வாகன் உடம்பு முடியாமல் இருக்கிறார். தன் உடம்புக்கு மருத்துவரை அணுகாமல் மருந்து எதுவும் சாப்பிடாமல் இருக்கிறார்," என்றார்.
சார்வாகனைப் போய் பார்க்க வேண்டுமென்று நினைத்தேன். ஆனால் உடல்நிலை சரியில்லாத ஒருவரை போய்ப் பார்ப்பதை நான் சங்கடமாக நினைப்பவன். மேலும் சார்வாகனுக்கு என்னை யார் என்று தெரியாது. யோசனையில் இருந்தேன். ஆனால் 21ஆம் தேதி எனக்கு தளம் ஆசிரியர் பாரவியிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. "மோசமான நிலையில் சார்வாகன் இருக்கிறார். வந்து பார்க்கவும்," என்று. அச் செய்தியைப் பார்த்தவுடன், அசோகமித்திரனுக்கு போன் செய்தேன். "சார்வாகன் மோசமான நிலையில் இருக்கிறாராம். நாளை போய்ப் பார்க்கலாமா?" என்று கேட்டேன். அவரும் போய்ப் பார்க்கலாம் என்றார்.
ஆனால் சிறிது நேரத்தில் பாரவியிடமிருந்து இன்னொரு செய்தி வந்தது. சார்வாகன் இறந்து விட்டார் என்று. எனக்கு வருத்தமாகப் போய்விட்டது. நான் பார்த்துப் பேச வேண்டுமென்று நினைத்த எழுத்தாளர் ஒருவர், நான் பார்க்காமலேயே இறந்து விட்டாரே என்று.
சார்வாகன் விஷயத்தில் ஏற்கனவே 1988ஆம் ஆண்டு அவர் இறந்து விட்டதாக ஒரு சிறுபத்திரிகையில் செய்தியும், அவரைப் பற்றி வல்லிக்கண்ணன் ஒரு கட்டுரையும் எழுதியிருந்தார். சாலிவாஹனன் என்ற எழுத்தாளர் இறந்ததை தவறாக அப்படி சொல்லிவிட்டார்கள். பின் அந்தச் சிறு பத்திரிகை தன் தவறை உணர்ந்து மறுப்பு எழுதியிருந்தது. இப்போதும் அதுமாதிரி இருக்கக் கூடாது என்று நினைத்தேன். ஆனால் இப்போது இந்தச் செயதியைச் சொன்னது பாரவி. அவர் சொல்வதில் உண்மை தப்பாது. சார்வாகன் இறந்துதான் விட்டார்.
அடுத்தநாள் காலையில் நானும் அசோகமித்திரனும் சார்வாகன் வீட்டிற்குச் சென்றோம். குளிர்பதனப் பெட்டியில் சலனமில்லாமல் சார்வாகன் படுத்து இருந்தார். அவர் உயிரோடு இருந்தால் என்னுடன் என்ன பேசியிருப்பார் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
அவருடைய புத்தகத்தைப் படிக்கும்போது இயல்பாகவே அவருக்கு நகைச் சுவை உணர்வு எழுத வருகிறது என்று தோன்றியது.
சார்வாகன் கதைகள் என்ற புத்தகத்தில் உள்ள 'பிரியா விடை' என்ற கதையில், ஒரு இடத்தில் கீழ்க்கண்டவாறு அவர் எழுதியிருக்கிறார்.:
"யார் நீங்கள், தெரியவில்லையே?" என்றேன்.
"உங்களை அழைத்துவர மேலேயிருந்து அனுப்பியிருககிறாரகள். வாருங்கள் போகலாம்," என்றார் சட்டைக்கார மனுஷர்.
"நீங்கள்...எம தூதர்களா?" என்று ஆச்சரியத்துடன் கேட்டேன். எமதூதர்கள் என்றால் முறுக்கின மீசையுடன் கிங் காங் உடம்போடு கையில் பாசக் கயிறுடன் இருப்பார்கள் என்பதுதான் என் கற்பனை. அறுபது வயதுக் குடியானவன் போலவும், 'லட்சிய எழுத்தாளர்' போலவும் இருப்பார்கள் என்று நான் கனவிலும் கருதியதில்லை...
.
சார்வாகனின் கதையில் இப்படி நகைச்சுவையுடன் கூடிய சித்திரிப்பு பெரிதும் வெளிப்படுகிறது. பிரியா விடை என்ற இக் கதையை 60ல் எழுதிய சார்வாகன் எந்தப் பத்திரிகையிலும் பிரசுரம் செய்ய அனுப்பவில்லை.
மேலும் தன்னை விளம்பரப் படுத்திக் கொள்ளாத எழுத்தாளர் அவர். 500 பக்கங்கள் கொண்ட சார்வாகன் கதைகள் என்ற புத்தகம் அவர் எழுதி சாதித்ததைப் பறை சாற்றுகிறது.
ஹரி ஸ்ரீனிவாசன் என்ற பெயரில் அவர் கவிதைகளும் எழுதி உள்ளார்.
அவருடைய கவிதையில் உள்ள சில கவிதை வரிகள் :
மழை விட்ட வானம்
காலடியில் சேறு
குளம்படிக் குழி
தண்ணீர் தளும்புகிறது
சந்திரத் துண்டுகள்
சந்திரத்
துண்டுகள்
தூள்கள் காலடியில்
வானத்தில்
மதி
அவர் கதைகள் புத்தகமாக வந்ததுபோல் கவிதைகளும் தொகுத்து புத்தகமாக வரவேண்டும். வரும் என்று நம்புகிறேன்.
சார்வாகன் பற்றி நான் இன்னும் அறிந்து கொண்டது. அவர் எழுத்தாளர் மட்டுமல்ல. அவர் ஒரு மருத்துவர். குறிப்பாக தொழுநோயாளிகளின் உடல் ஊனங்களைச் சீராக்கும் அறுவை சிகிச்சைத் துறையில் பணிபுரிந்து உலக அளவில் பேர் பெற்றவர். தொழுநோய் மருத்துவத் துறையில் இவர் செய்த அளப்பரிய சேவையை மேன்மைப் படுத்தும் வகையில் 1984இல பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.
Comments