Skip to main content

வெள்ளம் பற்றிய ஐந்து கவிதைகள்

          அழகியசிங்கர்

        கவிதை 1

        கண் முன்னே நடந்தது
        நீரின் ஓட்டம்
        வகை தெரியாமல் மாட்டிக்கொண்டோம்
        கீழ்த் தரை வளாகத்தில்   
        வைத்திருந்த புத்தகங்களின்
        பெருமையை யார் அறிவார்
        வந்த நீர் லபக்கென்று
        வாயில் இட்டுக்கொண்டது.
        திரும்பவும் நீர் அரக்கன்
        முதல் மாடி வளாகத்தில் வீற்றிருக்கும்
        எங்களை மிரட்டப் போகிறதோ
        என்று பயந்தவண்ணம் இருந்தோம்
        ஒவ்வொரு படிக்கட்டையும்
        தொட்டு தொட்டு
        வந்து கொண்டிருந்த கரும் நிற
        நீர் அரக்கனை
        ஒன்றும் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தோம்
        அன்று இரவு தூக்கம் சிறிதுமில்லை
        ஆனால் தர்மத்திற்குக் கட்டுப்பட்ட
        நீர் அரக்கன் எங்களை விட்டுவிட்டான்
        பயபபடாதே
        என்று ஆறுதல் படுத்தபடியே
        கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து
        பின்னோக்கிப் போய்விட்டான்
        ஆனால்
        எங்கள் மனதில் புகுந்த அச்சம்
        அவ்வளவு சுலபத்தில்
        எங்களை விட்டு அகலவில்லை
                                                                                                      09.12.2015
                                                                                                       புதன்
                                                                                                       8.20 காலை
       
       



Comments