அழகியசிங்கர்
ஒரு சினிமாத் தலைப்பை இப்படி மாற்றி எழுதினால் என்ன என்று தோன்றியது. கூட்டம் நடத்துவது எப்படி என்பது தெரியாமல்தான் நான் இதுவரை கூட்டம் நடத்தி இருக்கிறேன். எத்தனைக் கூட்டங்கள் என்று நினைக்கிறீர்கள்? கிட்டத்தட்ட 100 கூட்டங்களுக்கு மேல் இருக்கும். பல நோட்டுப் புத்தகங்களில் யார் யார் வருகைப் புரிந்துள்ளார்கள் என்றெல்லாம் குறித்து வைத்திருக்கிறேன். நவீன விருட்சம் என்ற பத்திரிகையை 28 ஆண்டுகளாக நடத்திக்கொண்டு வரும்போது கூட்டத்தையும் நடத்திக்கொண்டு வந்தேன். பத்திரிகைக்கு ஆகும் செலவை விட கூட்டத்திற்கு ஆகும் செலவு மிக மிக குறைவாகவே ஆகும்.
கூட்டம் நடத்த என்னைப் புகுத்தியவர் என் நண்பர் ஒருவர். அவர் தயாரித்த ஒரு பொருளுக்கு விளம்பரம் தரும் நோக்கத்தில் என்னை இலக்கியக் கூட்டம் நடத்தத் தூண்டியவர். இரண்டு மூன்று கூட்டங்களுக்குப் பிறகு அவர் ஆதரவு எனக்குப் போய்விட்டது. பின் நான் மட்டும் கூட்டம் நடத்தினேன். என் கூட்டம் தபால் கார்டு கூட்டம். தபால் கார்டில் எல்லோருக்கும் தகவல் அனுப்புவேன். அதைப் பார்த்து பலர் கூட்டத்திற்கு வருவார்கள். ஆனால் கூட்டத்தில் பேசுவதற்கு அவ்வளவு சாமர்த்தியம் எனக்குப் போதாது.மேலும் கூட்டத்தில் பேசுகிற பேச்சை என்னால் மனப்பாடமாக சொல்லவும் வராது. இதை எதிலாவது எழுதி வைத்துக் கொள்ளவும் தெரியாது. இதனால் கூட்டத்தில் பேசுவதை எல்லாம் காசெட்டில் பதிவு செய்து வைப்பேன்.
முன்பு நான் கூட்டம் நடத்தினால் எவ்வளவு செலவு ஆகுமென்று நினைக்கிறீர்கள்? வெறும் ரூ.100 தான். தபால் கார்டு 100 வாங்குவேன். அதற்கு செலவு ரூ25. திருவல்லிககேணியில் கூட்டம் நடத்தும் ஹால் வாடகை ரூ50. டீ செலவு ரூ25. பேச வருபவர்களுக்கு நான் பயணப்படியாக சிறிய தொகையைக் கூட கொடுத்ததில்லை. பேச வருபவர்களும் அதையெல்லாம் எதிர்பார்க்க மாட்டார்கள். உண்மையில் எழுதுபவர்கள் எல்லோரும் கூடும் இடம்தான் அது.
கூட்டத்திற்கு எத்தனைப் பேர்கள் வருவார்கள் என்று நினைக்கிறீர்கள்? 20 பேர்களுக்கு மேல் வந்தால் பெரிய விஷயம். ஒரு முறை ஒரு கவிஞரைப் பேசக் கூப்பிட்டேன். அவர் வந்திருந்தார். நானும் உரிய நேரத்திற்கு வந்தேன். ஆனால் கூட்டம் கேட்க யாரும் வரவில்லை. கவிஞருக்கு வருத்தமாகப் போய்விட்டது. "யாரும் வர மாட்டார்களோ?" என்று முணுமுணுக்க ஆரம்பித்து விட்டார்.
நான் அவரை சமாதானப்படுத்தி அந்தத் தெரு கோடியில் உள்ள ஓட்டலில் காப்பி வாங்கிக் கொடுத்தேன். அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக சிலர் வந்தார்கள்.
இதுவும் இன்னொரு கவிஞரைப் பற்றிய கதை. அவரால் குடிக்காமல் இருக்க முடியாது. என் கூட்டத்தில் வந்திருந்து பேசுவதாக இருந்தால் நீங்கள் குடிக்கக் கூடாது என்று எச்சரித்தேன். சரி என்று தலை ஆட்டிவிட்டு, குடித்து விட்டுப் பேச ஆரம்பித்து விட்டார். பேசுவதோடல்லாமல், பெரிய ரகளையே செய்ய ஆரம்பித்து விட்டார். அவரை விட வயதில் பெரியவரான காசியபனை (அசடு என்ற நாவல் எழுதியவர்) கூப்பிட்டு, "யே காசியபா... இங்கே வந்து என் பக்கத்தில் உட்கார்," என்று பேச ஆரம்பித்து விட்டார். காசியபனோ பவ்யமாக அவர் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டார். எனக்கோ திகைப்பு. கூட்டம் நல்லபடியாக முடியவேண்டும் என்ற கவலை.
நான் பல இரங்கல் கூட்டங்களையும் நடத்தி இருக்கிறேன். எனக்கு இரங்கல் கூட்டம் நடத்துவதில் அவ்வளவாக விருப்பம் இருக்காது. ஆனால் இரங்கல் கூட்டம் அவசியம் என்று தோன்றும். ஷண்முக சுப்பையா என்ற கவிஞருக்கு இரங்கல் கூட்டம் நடத்தியிருக்கிறேன். யாருக்காவது தெரியுமா அவரை. கரிச்சான் குஞ்சு என்ற எழுத்தாளருக்குக் கூட்டம் நடத்தியிருக்கிறேன். அதன் பின் சி சு செல்லப்பாவிற்கு ஒரு கூட்டம் நடத்தியிருக்கிறேன். இதெல்லாம் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை. இதுமாதிரியான கூட்டம் நடத்தும்போது மனதுக்கு ஒப்புதலாகவே இருக்காது. ஆனால் இதையெல்லாம் செய்யமால் விடக்கூடாது என்று தோன்றும்.
நானும் பல இரங்கல் கூட்டங்களுக்குப் போயிருக்கிறேன். பிரமிள் மௌனி என்ற எழுத்தாளருக்கு நடத்திய இரங்கல் கூட்டத்திற்குப் போயிருக்கிறேன். சிலசமயம் இதுமாதிரியான இரங்கல கூட்டங்கள் மறைந்த எழுத்தாளரகளுககு அபவாதம் தருவதாக அமைந்து விடும்.
ஞானக்கூத்தன் நடத்திய ஆத்மாநாமிற்கு நடந்த கூட்டத்திற்குப் போயிருக்கிறேன். சி சு செல்லப்பா க நா சுவிற்கு ஒரு இரங்கல் கூட்டம் நடத்தினார். என் நண்பர் வெளி ரங்கராஜன் கோபி கிருஷ்ணன், பிரமிளுக்கெல்லாம் இரங்கல் கூட்டம் நடத்தியிருக்கிறார்.
இரங்கல் கூட்டம் நடத்துவது மனதிற்கு சங்கடமாக இருந்தாலும் அதை நடத்தாமல் இருக்கக் கூடாது. இன்றைய சூழ்நிலையில் ஒரு சில நண்பர்கள்தான் இதுமாதிரியான கூட்டத்திற்கெல்லாம் வருவார்கள்.
வருபவர்கள் மனந்திறந்து பேசுவார்கள். ஒரு முறை நடத்தும் இந்தக் கூட்டத்தை நாம் பதிவு செய்வது அவசியம். ஏன்எனில் அதன்பின் அவர்களை எல்லாம் மறந்துவிடுவோம். திரும்பவும் ஞாபகப்படுத்தி கூட்டம் எதுவும் நடத்த மாட்டோம்.
முதலில் தயக்கமாக இருந்தாலும் வெங்கட் சாமிநாதனுக்கும் அதுமாதிரியான கூட்டம் 23.10.2015 அன்று நடத்தி விட்டேன். அக்கூட்டத்தை ஆடியோ வீடியோவில் பதிவும் செய்து வைத்திருக்கிறேன்.
கூட்டம் நடத்துபவருக்கு சில அறிவுரைகள்:
1. அதிகம் செலவில்லாமல் கூட்டம் நடத்துங்கள்
2. கூட்டங்களுக்கு ஆட்கள் அதிகமாக வருமென்று எதிரபார்க்காதீர்கள்.
3. ஒரு கூட்டத்தை ஒருவர் மட்டும் நடத்தாமல் இரண்டு அல்லது மூனறு பேர்கள் இணைந்து நடத்துங்கள்
4. புத்தக வெளியீட்டுக் கூட்டம் நடத்தும்போது பெரிதாக புத்தகங்கள் விற்குமென்று எதிர்பார்க்காதீர்கள்.
5. கூட்டத்திற்குப் பேசும்படி உங்களுக்குத் தெரிந்த இலக்கியக் கர்த்தாக்களை ரொம்பவும் வற்புறுத்தாதீர்கள்.
6. பெரும்பாலும் உள்ளூரில் இருப்பவர்களையே பேசக் கூப்பிடுங்கள்.
7. நாம் நடத்துவது இலக்கியக் கூட்டம். அதனால் தனியாக மேடை அமைத்து பேசுபவர்களைப் பிரித்து விடாதீர்கள்.
8. கூட்டத்திற்கு வருபவர்கள் குறைந்த பட்சம் 20 பேர்களுக்கு மேல் இருந்தால் நல்லது. அப்படி இல்லாவிட்டால் பேசுபவர். கூட்டம் நடத்துபவர் என்று இருந்தால் போதும்.
9. கூட்டத்தைப் பதிவு செய்யுங்கள். ஆடியோ அல்லது வீடியோவில். வீடியோவிற்காக தனியாக ஏற்பாடு செய்யாதீர்கள். உங்களிம் டிஜிட்டல் காமெரா இருந்தால் அதுவே போதும்.
10. முகநூல, யூ ட்யூப்பில் பேசுவதை ஒலி-ஒளி பரப்புஙகள்
11. நீங்கள் என்னை மாதிரி ஓய்வு பெற்றவராக இருந்தால், வேறு யாராவது நடத்தும் கூட்டத்திற்குப் போய் வாருங்கள்.
Comments
என் போல் மாதம் இரண்டு கூட்டங்கள்
(இலக்கியக் கூட்டங்கள் இல்லை
இலக்கியமும் பேசும் கூட்டங்கள் )
நடத்துபவர்களுக்கு உதவும் அருமையான பதிவு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்