Skip to main content

வேறொரு கோணத்தில்.......

     


அழகியசிங்கர்


    செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி உலக இதய நாள்.  பல மருத்துவர்கள், பல மருத்துவ மனைகள் பலவித அறிவுரைகள்.  ஒருவர் மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று படித்தால் சற்று பயம்தான் வரும்.

    ஆனாலும் இதயத்தைக் காப்பது அவசியமான ஒன்றாகத்தான் இருக்கிறது.  நோய் என்று வந்துவிட்டால் அதை எதிர்த்துப் போராட முடியுமா?  அல்லது பணிந்துதான் போய் விட வேண்டுமா? தெரியவில்லை.  

    ஆரம்பத்தில் நான் வங்கியில் சேர்ந்தபோது எல்லாம் நன்றாகத்தான் இருந்தது.  துள்ளும் உடலுடன் கூடிய துள்ளும் மனது.  பரபரவென்று  இருந்தேன். வங்கியிலும் சாதாரண வேலை.  பெரிய பொறுப்பெல்லாம் கிடையாது.  வங்கியும் ஆரம்பத்தில் என்னை பயமுறுத்தவில்லை.  வீடு பக்கத்தில் அலுவலகம்.  காலை பத்துமணிக்குச் சென்றால் மாலை ஓடி வந்து விடலாம்.  பத்து மணி அலுவலகத்திற்கு 9 மணிக்குக் கிளம்பினால் போதும்.  அலுவலகம் போவது ஒரு பிக்னிக் போவதுபோல் ஜாலியாக இருந்தது.

    ஆனால் போக போக ஒரே மாதிரியான வேலை போர் அடித்தது.  இன்னும் கொஞ்சம் மேலே போக வேண்டுமென்று தோன்றியது.  வங்கியில் சட்ட திட்டங்கள் மாறின.  கிளார்க் இருந்தாலும் தொடர்ந்து ஒரே இடத்தில் இருக்கக் கூடாது என்று சட்டம் கொண்டு வந்தார்கள்.  அந்தச் சட்டத்திற்குப் பயந்து ஒருசிலர் வங்கியை விட்டு ஓடிவிட்டார்கள்.

    நான் சுருக்கெழுத்தாளனாக இருந்ததால் எனக்கு அந்தச் சட்டம் பலிக்கவில்லை.  ஆனால் போரடிக்கும்படி தலைமை அலுவலகத்தில் வலம் வந்து கொண்டிருந்தேன்.  சரி என்று முடிவு பண்ணினேன்.  பதவி உயர்வு பெறுவது என்று.  என்ன முட்டாள்தனமான முடிவு.  

    நான் வீட்டைவிட்டு ஓட வேண்டியதாயிற்று.  என்னுடன் யாரும் வரவில்லை.  என்னை ஒரு கிராமத்தில் பணி செய்ய கட்டளை இட்டார்கள்.  பதறி விட்டேன்.  சென்னையைத் தவிர எங்கும் போகத் தெரியாதவன் நான்.  கிராமத்தில் போய் எப்படி இருப்பது?  இது ஒரு மன அழுத்தம்.  நான் தைரியமாக அங்கு போனேன்.  என் வங்கி இருந்த கிராமம் கும்பகோணத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தூரத்திலும், மையிலாடுதுறையிலிருந்து 28 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது.  மயிலாடுதுறை எனக்குப் பிடித்த ஊர்.  என் உறவினர்கள் இருக்கும் ஊர்.  அங்கிருந்து ஒரு டூ வீலரைப் பிடித்துக்கொண்டு கிராமத்திற்குச் சென்றேன்.  

    காலையில் குறிப்பிட்ட நேரத்திற்குப் போவதற்கும், மாலையில் (உண்மையில் இரவு) திரும்பி வீடு வருவதற்கும் போதும் போதுமென்று ஆகிவிடும்.  நான் தலைமை ஆபிஸில் சுருக்கெழுத்தாளனாக இருந்தபோது ராஜா மாதிரி இருந்தேன்.  பெரிய அதிகாரியிலிருந்து சின்ன அதிகாரி வரை மரியாதையாக இருந்தார்கள்.  கீழ்நிலை ஊழியர்கள் சொன்ன பேச்சைக் கேட்டுக்கொண்டு இருந்தார்கள்.  

    ஆனால் கிராமத்து பிராஞ்ச் அலுவலகத்தில் எல்லாம் தலைகீழ்.  யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள்.  கீழ் மட்ட வேலையிலிருந்து எல்லா வேலைகளையும் என் தலையில்தான் வந்து விடியும்.  வாடிக்கையாளர்களும் மிரட்டல் தொனியுடன் பேசுவார்கள்.  நான் சேர்ந்த அடுத்த நாளே என் வட்டார அலுவலகத்திற்குப் போன் செய்தேன்.  'என்னை மாற்றும்படி,' வந்தது பதில் கோபமாய்.  'இன்னும் தள்ளி போடட்டுமா?' என்று.  மன அழுத்தம் தாங்க முடியாமல் இருந்தது.  லீவு கேட்டால் லீவு கிடைக்காது.  சரியான ஓட்டல் இருக்காது.  சாப்பாடு இருக்காது.  அலுவலகத்தில் வேலை கசக்கிப் பிழியும்படி இருக்கும்.  

    திரும்பவும் சுருக்கெழுத்தாளனாகப் போய்விடுகிறேன் என்றால் 'அதெல்லாம் முடியாது.  உன்னை தூக்கி திருவண்ணாமலக்கு அடிப்போம் என்றார்கள்.'  நான் என்ன ரமண மகரிஷியா திருவண்ணாமலைக்குப் போவதற்கு.  மன அழுத்தம்.  அந்தச் சமயத்தில் ரத்தக் கொதிப்பு நோயுக்கும் சர்க்கரை நோயுக்கும் மருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.  டென்ஷன் இருந்தாலும் அமைதியாக இருக்கக் கற்றுக்கொண்டேன்.  எனக்கு அப்போதெல்லாம் உதவியது புத்தகங்கள்.  

    நான் ஒரு விஷயம் தெரிந்து கொண்டேன்.  என்னுடன் பணிபுரியும் பலர், இந்த மன அழுத்தம் தாங்காமல் மருத்துவமனைகில் போய் தஞ்சம் அடைந்தார்கள்.  ஒரு சிலர் உயிரையே விட்டுவிட்டார்கள்.

    ஆனால் இதற்கெல்லாம் இரக்கப்பட்டு அலுவலகம் ஒன்றும் செய்யவில்லை.  அது கருணையே இல்லாமல் இருந்தது.  50 வயதுக்கு மேற்பட்டவர்கள் வேலையை விட்டு ஓடிவிட்டார்கள்.  அல்லது பொட்டு பொட்டென்று உயிரை விட்டார்கள்.

    என்னைப்போல் பதவி உயர்வுப் பெற்று மாட்டிக்கொண்ட ஒரு அதிகாரிக்கு பைல்ஸ் பிரச்சினை.  இருக்கையில் அமரவே முடியாது.  யாராவது உதவி செய்ய வேண்டும்.  அவர் மருத்துவ சான்றிதழ்களுடன் அவர் எங்கேயிருந்து வந்தாரோ அங்கு மாற்றும்படி கெஞ்சிக் கேட்டு விண்ணப்பித்தார்.  யாரும் கண்டு கொள்ளவில்லை.  அவர் வேறு வழியில்லாமல், üநான் திரும்பவும் க்ளார்க்காகப் போகிறேன்ý என்று எழுதிக் கொடுத்தார்.  அவரை அவர் விரும்பிய இடத்திற்கு மாற்றாமல் இன்னும் தூக்கி அடித்தது இரக்கமற்ற நிர்வாகம்.

    நான் இருந்த கிளை அலுவலகத்தில்தான் கும்பகோணத்திலிருந்து ஒரு தலைமை காசாளர் வந்து கொண்டிருந்தார்.  50க்கும் மேல் வயது.  ஒருநாள் அவருக்கு உடம்பு சரியில்லை.  'என்னமோ செய்கிறது,' என்றார் எங்களிடம்.  'என்ன என்ன தெளிவாக சொல்லுங்கள்..' என்று கேட்டேன்.  'தலையைச் சுற்றுவது போல் இருக்கிறது... வாந்தி எடுக்கும்படி தோன்றுகிறது,' என்றார்.  'இது பித்தமாக இருக்கும்...' என்றேன்.  ஆனாலும் அந்தக் கிராமத்தில் உள்ள ஒரு மருத்துவரை அழைத்துக்கொண்டு வந்து காட்டினோம்.  அந்த மருத்துவர் அவரை கும்பகோணத்திற்கு அழைத்துக்கொண்டு போய் காட்டும்படி சொன்னார்.

    நான் அவரை அழைத்துக்கொண்டு இன்னும் இரண்டு தற்காலிக ஊழியர்களை அழைத்துக்கொண்டு காரில் கும்பகோணம் சென்றேன்.  போகும்போது அவரிடம் பேச்சுக்கொடுத்தபடி வந்தேன்.  'சில சமயம் நாம் சாப்பிடுவது ஒத்துக்காது..நீங்கள் காலையில் தக்காளி சாதம் சாப்பிட்டு வந்துள்ளீர்கள்..அதில் உள்ள எண்ணெய் கோளாறு செய்யும்..' என்றேன்.  அவரும் நான் சொன்னதைக் கேட்டுக்கொண்டே வந்தார். 

    30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கும்பகோணம் அடைய அரைமணிக்கு மேல் ஆகிவிட்டது.  கும்பகோணத்தில் உள்ள சுகம் என்ற மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு போனோம்.  அங்குள்ள மருத்துவர் அவரை தனியாக அழைத்துக்கொண்டு போய் பரிசோதனை செய்தார்.  பின் அவரை அங்கயே படுத்திருக்கும்படி சொல்லிவிட்டு எங்களிடம் வந்தார்.  

    ''அவர் வீட்டில் உள்ளவர்களுக்கு  உடனே சொல்லிவிடுங்கள்.  அவருக்கு வந்திருப்பது மாஸிவ் ஹார்ட் அட்டாக்...24 மணி நேரத்திற்கு ஒன்றும் சொல்ல முடியாது...''என்றார்.

    அதைக்கேட்டு நான் பதறி விட்டேன்.  என் உடம்பு வெடவெடவென்று நடுங்க ஆரம்பித்து விட்டது.  அவர் வீட்டில் போய் சொன்னோம்.  அவர் அந்த ஆபத்திலிருந்து தப்பித்து விட்டார்.  1 மாதத்திற்கு மேல் அவர் அலுவலகம் வரவில்லை.  

    ஆனால் திரும்பவும் அவர் 30 கிலோமீட்டர் உள்ள கிராம வங்கிக்கு வருவதற்கே பயப்பட்டார்.  மாற்றல் கேட்டு விண்ணப்பித்தார்.  இரக்கமற்ற நிர்வாகம் அவருக்கு மாற்றல் கொடுக்க வில்லை.  அவர் வேலை வேண்டாமென்று விடும்படி நேர்ந்தது.  இரக்கமற்ற நிர்வாகம் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

   
   
     
   

Comments

krish said…
வங்கி வேலையில் இவ்வளவு பிரச்னைகளா?
அவர்கள் ஆனந்தமாக அலைகிறார்கள் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன்.