Skip to main content

புத்தக விமர்சனம் 11



அழகியசிங்கர்
 

    துளசிங்கப் பெருமாள் கோயில் வழியாக நான் டூ வீலரில் போய்க் கொண்டிருந்தேன்.  அப்போது ஒரு வீட்டின் முன் வாசலில் மின்சார விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன.  கொஞ்சம் நின்று பார்த்தேன். அது பாரதியார் நினைவு இல்லம்.  எனக்கு உடனே புரிந்தது.  செப்டம்பர் 11 ஆம் தேதி பாரதியார் நினைவு தினம்.  அதைக் கொண்டாட விளக்கு வெளிச்சம் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

    நான் அன்று ஞானக்கூத்தன் வீட்டிற்குத்தான் போய்க் கொண்டிருந்தேன்.  அவர் சொன்ன ஒரு தகவல் எனக்கு சற்று திகைப்பாக இருந்தது.  கோவில் யானை என்ற தலைப்பில் அவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.  அவர் என்னிடம் என்ன சொன்னார் என்றால் பார்த்தசாரதி கோயில் யானை பாரதியாரை ஒன்றும் செய்யவிலலை என்று.  பாரதியார் கோவில் யானை என்ற பெயரில் ஒரு நாடகம் எழுதியிருக்கிறார்,  அந்த நாடகத்தில் வஜ்ரி என்ற அரசக் குமாரனைத்தான் காளி கோயிலில் உள்ள யானை துதிக்கையால் தள்ளி விட்டது.  அதைத்தான் பாரதியாருக்கு ஏற்பட்டதாக எல்லோரும் கதை விட்டிருக்கிறார்கள் என்கிற மாதிரி சொன்னார்.  

    இது குறித்து அவர் ஒரு கட்டுரையும் எழுதி இருக்கிறார்.  என்னால் இதை நம்ப முடியவில்லை.  உண்மையில் பாரதியாருக்கு நடந்த ஒரு சம்பவத்தை அவர் நாடகத்தில் ஒரு கதா பாத்திரத்திற்கு ஏற்பட்டதாக எழுதியிருக்க வேண்டுமென்று தோன்றியது.

    வீட்டிற்கு வந்தவுடன் என்னிடம் உள்ள பாரதியார் புத்தகங்களை எல்லாம் அடுக்கி வைத்துக்கொண்டேன்.  நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது தூரன் அவர்கள் எழுதிய பாரதியார் கட்டுரைகள், அவருடைய வாழ்க்கை வரலாறை எல்லாம் படித்திருக்கிறேன்.  என் கல்லூரி நூல்நிலையத்திலிருந்து நான் எடுத்துக் கொண்டு படிப்பேன்.  மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் போகும்வரை மின்சார வண்டியில் படித்துக்கொண்டு வருவேன்.

    பாரதியார் வரலாறை பெ தூரன் அவர்கள் எழுதியதைப் படிக்கும்போது பாரதியார் மரணம்அடைந்த விதத்தைப் படிக்கும்போது, என் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு ஏதோ ஆகிவிட்டதுபோல் வருத்தம் ஏற்பட்டது உண்மை. 

    சமீபத்தில் நான் டிஸ்கவரி புக் பேலஸ் சென்றபோது, பாரதியாரின் ஒரு புத்தகம் என்னைக் கவர்ந்தது.  அப் புத்தகம் üபாரதியாரின் இறுதிக் காலம்ý என்ற பெயரில் ஆய்வும் பதிப்பும் ய மணிகண்டன் என்பவர் எழுதியிருக்கும் புத்தகம்.  அப் புத்தகத்தை வாங்கி விட்டேன்.  வீட்டிற்கு வந்தவுடன் அதை முதலில் எடுத்துப் படித்தேன்.  கிட்டத்தட்ட 64 பக்கம் கொண்ட அப் புத்தகத்தை உடனே படித்து முடித்து விட்டேன். என் வாழ்க்கையில் ஒரு புத்தகத்தை வாங்கிய அன்றே படித்து முடித்தப் புத்தகம் இதுவாகத்தான் இருக்கும் என்று தோன்றியது.

    பாரதியார் எப்படி தன் இறுதிக் காலத்தில் இருந்தார் என்பதை இந்தப் புத்தகம் தெளிவாக விவரித்துக் கொண்டுபோகிறது.  பல உப நூல்களை வைத்துக் கொண்டு மணிகண்டன் ஒரு ஆராய்ச்சி நூலை எழுதியிருக்கிறார்.  மேலும் இப் புத்தகத்தில் கோவில் யானை என்ற நாடகத்தையும் சேர்த்திருக்கிறார்.  பாரதியார் எழுதிய இந்த நாடகத்தை யாரும் இதுவரை கொண்டு வரவில்லை.  1951ல் ஜனவரி மாதத்தில் கலைமகள் இதழில் வெளிவந்த இந்த நாடகத்தை திரும்பவும் இந்தப் புத்தகத்தில் கொண்டு வருகிறார்.

    பல பக்கங்களில் பாரதியாரைப் பற்றிய பிம்பத்தை எழுத்து மூலம் கொண்டு வருகிறார்.  உண்மையில் பாரதியார் என்பவர் யார்? அவர் எப்படி வாழ்ந்தார் என்றெல்லாம் பலர் அவரைப் பற்றி எழுதியதைக் கொண்டு படிக்க படு சுவாரசியமாய் மணிகண்டன் கொண்டு வருகிறார்.  

    புதுவையிலிருந்து பாரதியார் சென்னைக்கு திரும்புகிறார்.  அதாவது அவருடைய வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தை கடப்பதற்காக அவர் சென்னை வருகிறார்.  சென்னையில் பாரதியாரை சந்தித்த சுதேசமித்திரனின் ஸி ஆர் ஸ்ரீநிவாஸன் இறுதிக்காலப் பாரதியாரை இப்படி சித்தரிக்கிறார் .

    'அன்று கண்ட பாரதி இன்றளவும் என் அகக் கண் முன் நின்று கொண்டே இருக்கிறார். நடத்தர உயரம், ஒற்றை நாடி மாநிறம் படைத்த மேனி.  பிரிபிரியாய்ச் சுற்றிய வால்விட்ட தலைப்பாகை.  அகன்ற நெற்றி.அதன் மத்தியில் காலணா அளவு குங்குமப் பொட்டு....'

    அமிர்தகுண போதினியின் ஆசிரியர் எஸ் ஜி இராமாநுஜலு நாயுடு பாரதியாரைப் பற்றி இப்படி விவரிக்கிறார் :

    'ஸ்ரீ பாரதியார் புதுச்சேரியினின்றும் வந்த பின்பு பழைய பாரதியின் உருவமே இல்லை.  ஒரு வங்காளி போன்ற உருவுடனும் காணப்பட்டார்.  அதற்கானபடி தலைப்பாகையும் பிளவும் பொருந்தியிரந்தது.  அவரது நடையும் கோலமும் யாவுமே மாறின.  எல்லாமே புதுவிதமாக இருந்தது.  ஒரு பிரம்ம ஞானி போன்றும் காணப்பட்டார்.'

    இறுதிக் காலத்தின் முதற் கட்டத்தில் கானாடுகாத்தானுக்கும் காரைக்குடிக்கும் பாரதி சென்று வந்தபோது அவரைச் சந்தித்த ராய.சொக்கலிங்கம் இப்படிப் பதிவு செய்திருக்கிறார்.

    இருபத்தெட்டு ஆண்டுகட்குமுன் திடீரென ஓர்நாள், சிவந்த உடம்பு - மொட்டைத் தலை,  முறுக்கிய எதிர் மீசை - குறுகுறுத்த கண்கள் இவற்றோடு கையில் தடியுடன் ஒரு கம்பீர உருவம் காரைக்குடியில் தோன்றியது - பாரதி, கூட ஒருவரை அழைத்து வந்திருந்தார். அவரும் ஒரு அரைப் பயித்தியம் மாதிரியே காணப்பட்டார்.  பாரதியாரோ ஒரு ஞானக் கிறுக்கர்.

    இவருடைய விபரத்தைப் படிக்கும்போது பாரதியாரை மொட்டைஅடித்து விடுகிறார்.  பாரதியாருடன் வந்தவரை அரைக் கிறுக்கும் என்றும், பாரதியாரை ஞானக்கிறுக்கு என்று கூறிப்பிடுகிறார்.

    பாரதியாரின் நெருங்கிய நண்பர் வ.உ.சி வருந்தும்படி ஒரு நிகழ்வு நேர்ந்தது.  பாரதியாரும், குள்ளச்சாமியாரும் பிரம்பூரிலிருநத வ உ சி வீடு சென்றனர்.  குள்ளச்சாமி அங்கயே எண்ணெய் தேய்த்துக் குளிக்க, இருவரும் பின்னர் அபின் தின்று களி கொண்டனர்.  பாரதியாரைச் சிதைத்த இந்தப் பழக்கத்தையும் அதற்குத் துணை நின்ற குள்ளச்சாமியையும் வ உ சி வருத்தத்தோடு எண்ணிப் பதிவு செய்திருக்கிறார்.  

    பாரதியார் சொற்பொழிவு ஆற்றும்போது பல இடங்களில் மேள தாளங்களோடு பெரிய ஜனக் கூட்டம் கூடிப் பாரதியை வரவேற்றுக் கொண்டாடியதாக பதிவு செயதிருக்கிறார் மணிகண்டன்.

    பாரதியார் அவருடைய இறுதிக் காலத்தில் பலவித தொந்தரவுகளுக்கு அளாகியிருக்கிறார்.  அவர் கருத்துக்கு மாறாக மனைவி நடந்துகொண்டதால் ஏற்பட்ட கசப்பும், வெறுப்பும் போதை வஸ்துப் பழக்கம், கடலூரில் கைது செய்யப்பட்டுச் சிறையில் இருந்த நாள்களில் மனநலம் குன்றியமை, எழுதிக்கொடுத்துவிட்டு  விடுதலை பெற்றமைக்காக அவருடைய மைத்துனரின் கோபத்திற்கு ஆளானதால்பலவித குழப்பங்களுக்கும் பாரதியார் உள்ளாகி இருந்தார். 

    இதுமாதிரியான குழப்பங்கள் பாரதி வாழ்வில் இருந்தாலும் பல சுவையான நிகழ்ச்சிகளும் அவர் வாழ்வில் நடக்காமல் இல்லை.
கழுதைக் குட்டியைக் கட்டித் தழுவிக்கொண்ட நிகழ்ச்சி கடைய வாழ்வில் நிகழ்ந்தது.  சிங்கத்தோடு உறவாடி உரையாடிய  நிகழ்வு திருவனந்தபுரத்தில் நிகழ்ந்தது.  யானையோடு உறவாடிய நிகழ்ச்சி திருவல்லிக்கேணியில் நிகழ்ந்தது. பாரதியார் புதுவையில் இருந்தபோது கொலை செய்யப்படுவதற்காக இழுத்துச் செல்லப்பட்ட ஆடு ஒன்றினை விலை கொடுத்து வாங்கிக் காத்த நிகழ்வும் நேர்ந்தது.

    இதில் உருக்கமான ஒரு நிகழ்ச்சியாக பாரதிதாசனைப் பற்றி குறிப்பிடுகிறார்.  பாரதிதாசன் ஒரு கதை உரையாடலில் பாரதியின் இறுதிக் காட்சியில் யானை தாக்கி கீழே தள்ளி விடுவதாகவும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் எழுதி உள்ளார்.  யானையால் தாக்குண்ட பாரதியை மருத்துவமனைக்கு சுமந்து செல்கிறது வண்டி என்று எழுதி முடித்த பாரதிதாசனும் உடன் ஒரு வண்டியிலேற்றிச் சென்னைப் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.  பின்னர்ப் பாரதிதாசன் உயிரோடு திரும்பவில்லை என்று மணிகண்டன் ஒரு தகவலைக் குறிபபிடுகிறார். இதைப் படிக்க சற்று வருத்தமாகவே இருக்கிறது.

    பாரதியாரை யானைத் தாக்கிய சம்பவம் பலவாறு பொய்யும் புனைவுமாக இந்திய அளவில் ஓர் இதழில் எழுதப் பட்டதை பாரதியாரின் தம்பி சி விசுவநாதன் எடுத்துரைத்திருக்கிறார்.  மாடர்ன் ரெவ்யூ என்ற பத்திரிகையில் பாரதியார், யானை முன் பயத்துடன் நின்று கொண்டிருந்த ஒரு சிறுமியைக் காப்பாற்ற தன் உயிரையே மாய்த்துக் கொண்டதாக எழுதியிருந்ததாம்.    இப்படி தப்பான தகவல்கள் பாரதியாரைப் பற்றி பரவப்பட்டுள்ளது.  

    பாரதியார் எந்தக் காலத்தில் யானையால் தாக்கப்பட்டார் என்ற தகவலை யாராலும் சரியாக கணிக்க முடியவில்லை.  உண்மையில் பாரதியார் யானையால் தாக்குண்ட பிறகு மூன்று மாதம் கழித்து இறந்தார் என்ற செய்தி தவறானதாக இப் புத்தகம் மூலம் தெரிகிறது. யானையால் தாக்குண்ட சம்பவம் 9 மாதங்களுக்கு முன்பே நடந்திருக்குமென்று தனக்கு நடந்த சம்பவத்தை வைத்துத்தான் கோவில் யானை என்ற நாடகத்தை எழுதினார் என்றும் சொல்லப்படுகிறது.  இந்த நாடகம் டிசம்பர் மாதம் 1920 ஆண்டோ ஜனவரி 1921ஆம் ஆண்டோ சுதேசமித்திரன் இதழில் பிரசுரமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
    மணிகண்டன் கோவில் யானை நாடகம் மூலம் பாரதியாரின் இறுதிக்கட்டத்தை இப்படிக் கூற முற்படுகிறார்.  கோவில் யானை என்ற நாடகம் சுதேசமித்திரன் இதழில் ஜனவரி மாதம் 1921ல் பிரசுரமாகி இருப்பதால், பாரதியார் இந்த நிகழ்ச்சி நடநது 9 மாதங்கள் கழித்துதான் இறந்திருக்கிறார் என்று குறிப்பிடுகிறார்.  சில வரலாற்று ஆசிரியர்கள் தவறாக யானைத் தாக்கிய பிறகு மூன்று மாதங்களில் பாரதியார் இறந்து விட்டதாகக் குறிப்பிடுகிறார்கள். அது தவறு என்றும் குறிப்பிடுகிறார். வயிற்றுக் கடுப்பு நோயாலதான் பாரதியார் இறந்திருக்கிறார்.

    ஆனால் என் நண்பர் ஞானக்கூத்தனோ கோவில்யானை என்ற நாடகத்தில் நடந்த கட்டுக் கதையை உண்மைச் சம்பவமாக மாற்றி விட்டதாக குறிப்பிடுகிறார். பாரதியாரை யானை தாக்கவிலலை என்கிறார்.

    உண்மையில் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது ஒரு வித்தியாசமான வரலாற்றுக் கதைப் புத்தகத்தைப் படித்த உணர்வு ஏற்பட்டது.  கோவில் யானை என்ற பெயரில பாரதியார் எழுதிய நாடகமும் பிரமாதம்.

பாரதியாரின் இறுதிக் காலம் - ஆய்வும் பதிப்பும் ய மணிகண்டன் - பக்கம் 64 - விலை : ரு,60 - வெளியீடு : காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் பி லிட், 669 கே பி சாலை, நாகர்கோவில் 629001 - தொலைபேசி எண் : 04652-278525
   
   

      
   

Comments

அழகியசிங்கர் ஸார்,

நான் அனுப்பி வைத்திருக்கும் என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பான துரத்தும் நிழல்கள் புத்தகத்திற்கும் ஒரு விமர்சனம் எழுதி வெளியிடுங்களேன்.

என்னுடைய புத்தகத்தைக் கூரியரில் அனுப்பி வைத்திருந்தேன் சில மாதங்களுக்கு முன்பு.
கிடைத்திருக்கும் என்ற நம்பிக்கையில்

சோ.சுப்புராஜ்