Skip to main content

காந்தி எங்கே?

அழகியசிங்கர்


    காந்தி ஜெயந்தி அன்று நாம் எல்லோரும் சுலபமாக காந்தியை     மறந்துவிட்டு அவருடைய பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறோம்.  அவருடைய படத்துக்கு அரசியல் பிரமுகர்கள் மாலை அணிவித்து டிவியில், செய்தித் தாள்களில் முகம் காட்டுகிறார்கள். 

    டிவிக்கள் காந்தி ஜெயந்திக்காக விதம் விதமான காட்சிகளை ஒளிபரப்புகின்றன.  தெருக்களில் எப்போதும் உள்ள கூட்ட நெரிசல் இன்று இல்லை.  இன்று இன்னொரு ஞாயிற்றுக்கிழமை மாதிரி தோற்றம் தந்தது. 

    சரி காந்தி இன்று இருந்தால் என்ன ஆயிருக்கும்?  காந்தி இன்னொரு முறை அல்ல இன்னும் பலமுறை கோட்úஸ போன்றவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பார்.  அவர் எதிர்பார்த்த மாதிரியான சமூகத்தை அவரால் உருவாக்கி இருக்க முடியாது. 

    வெள்ளையர்களிடமிருந்து அவரால் சுதந்திரம் வாங்கித் தர முடிந்தது.  ஆனால் அவர் நினைத்த மாதிரி இந்தியாவை அவரால் கொண்டு போயிருக்க முடியாது.  ஊழலும் வன்முறையும் தலைவிரித்து ஆடும் இந்தியாவைப் பார்த்து அவர் ரத்தக் கண்ணீர் விட்டிருப்பார்.  இந்த சுதந்திர இந்தியாவில் அவர் இருந்திருந்தால் ஒன்று அவர் பேசாமல் மௌனமாகத்தான் இருந்தாக வேண்டும்.  இல்லாவிட்டால் பித்துப்பிடித்த நிலையில் இருந்திருக்க வேண்டும்.

    இந்தியா அவர்  நினைவைப் போற்றும்படி ரூபாய்த் தாள்களில் அவர் புகைப்படத்தை கொண்டு வந்துவிட்டது.  திரும்ப திரும்ப அவரை நாம் ஞாபகப்படுத்திக் கொள்கிறோம். 

    யாருக்கும் அவர் மீது எந்த அக்கறை இல்லை.


மஹ்ஹான் காந்தீ மஹ்ஹான்

ஞானக்கூத்தன்

எழுந்ததும் கனைத்தார்; மெல்ல
சொற்பொழிவாற்றலானார்-

வழுக்கையைச் சொறிந்தவாறு
'வாழ்கநீ எம்மான்' என்றார்;

மேசையின் விரிப்பைச் சுண்டி
'வையத்து நாட்டில்' என்றார்
வேட்டியை இறுக்கிக் கொண்டு
'விடுதலை தவறி' என்றார்

பெண்களை நோட்டம் விட்டு
'பாழ்பட்டு நின்ற' என்றார்

புறப்பட்டு நான் போகச்சே
'பாரத தேசம்' என்றார்;

'வாழ்விக்க வந்த' என்னும்
எஞ்சிய பாட்டை தூக்கி
ஜன்னலின் வழியாய்ப் போட்டார்
தெருவிலே பொறுக்கிக் கொள்ள,


Comments