Skip to main content

60+இன் புலம்பல்





2010ல்

ம். என்ன இது! கத்திரிக்காய் கிலோ ரூ.50; அரிசி 35/-; தங்கம் பவுண் 13000. இப்படி விலைவாசி இருந்தால் எப்படி? மாதம் 10000 வருமானம் வந்தால்கூட குடும்பம் நடத்துவது சிரமமாக இருக்கிறது. இந்த லட்சணத்தில் பிள்ளைகளோ பெற்றோரை மதிப்பது கூட இல்லை. வீட்டிலே உக்காந்து ‘நாக்கு முக்க’, என்று கூப்பாடு போடுகிறான். என்னடா என்றால், சினிமாப் பாட்டு என்கிறான். இப்படி ஒரு பாட்டு! இப்போ வருகிற பாடல்கள் எல்லாம்... ம்.. என்ன சொல்ல! 2 பேர் கள்ளக்கடத்தல் செய்கிறான். தாதாவாக இருக்கிறான். அதில் ஒருவன் கதாநாயகன்; மற்றவன் வில்லன் என்கிறான். என்னடா படம் இது, இரண்டு பேரும் அயோக்கியன்தானே என்று சொன்னால், அதெப்படி?! நடிப்பதில் ஒருவன் ஹீரோ, அதனால் அவன் நல்லவன் என்கிறான். மொத்தத்தில் எல்லாமே சுத்த மோசம்! எங்கள் காலத்தில் எல்லாம் இப்படியா? பாரதிராஜா, பாக்கியராஜ், இளையராஜா, எவ்வளவு அற்புதமானவர்கள்!! ம்.. அது ஒரு பொற்காலம் சார்!!!

X---X---X

1985ல்

மாதம் ரூ.1000 வருமானம் வந்தும் குடும்ப பட்ஜெட் உதைக்கிறது. கத்தரிக்காய் கிலோ 5ரூபாய்; அரிசி கிலோ 10/- தங்கம் பவுண் Rs.800. இந்த விலை விற்றால் எப்படி குடும்பம் நடத்துவது? பயல்களை கண்டிக்க முடிவதில்லை. ‘ஓரம்போ!!’ என்று கத்துகிறான். என்னடா என்றால், அருமையான சினிமாப் பாட்டு என்கிறான். தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் இருக்கிறது. இப்போல்லாம் சினிமாவா எடுக்கிறான்? படம் பார்ப்பவர்கள் காதில் பூ சுற்றுகிறான். ஒரே டைரக்டர் 2 படம் எடுக்கிறான். ஒரு படத்தில் கதாநாயகியை தாலியை கழற்றிவிட்டு காதலனுடன் போகும்படி செய்கிறான். இன்னொரு படத்தில், தாலியைக் கழற்றும் தைரியம் உனக்கு இருக்கிறதா? கணவன்தான் முக்கியம்; காதலன் அல்ல, என்று அட்வைஸ் செய்கிறான். ஒரே கூத்து! எங்கள் காலத்தில் இப்படியா? ஒரு பாசமலர் போதுமே. காலகாலத்துக்கு பதில் சொல்லுமே! எவ்வளவு அருமையான சினிமா! எவ்வளவு அருமையான பாட்டு. ம்.. அது ஒரு பொற்காலம் சார்!!!

X---X---X


1965ல்

முதலாளி எவ்வளவோ நல்லவர். மாதம் 150 சுளையாகத் தருகிறார். இருந்தும் என்ன பிரயோஜனம். மனைவிக்கும் சிக்கனத்துக்கும் சம்பந்தமே இல்லை. இந்தப் பணம் போதவில்லையாம். அரிசி படி 2 ரூபாய் ஆகிவிட்டதாம். கிலோ 10 பைசா விற்ற காய்கறி எல்லாம் 60 பைசா, 70 பைசாவாக விற்கிறதாம். தங்கம் பவுண் ரூ.100 ஆகிவிட்டதாம். எப்படி கட்டுபடியாகும் என்கிறாள். பிள்ளைகளோ, MGR, சிவாஜி படம் என்று வாரம் தவறாமல் படம் பார்க்கிறார்கள். தலைக்கு 40 பைசா சினிமா செலவு எவ்வளவு ஆகிறது? கேட்டால் ‘இலந்தப் பழம்’ என்கிறார்கள். சீசன் இல்லாத நேரத்தில் இலந்தப் பழம் ஏது என்று கேட்டால், அப்பா, அது சினிமாப் பாட்டு என்கிறான். எல்லாமே இரவல் பாட்டு. ஒருவன் வாயசைக்கிறான். ஒருவன் பாடுகிறான். கேட்டால் பின்னனிப் பாடல் என்கிறான். இந்தப் பயல் சொல்கிறான் என்று சமீபத்தில் வந்த ஒரு படம் பார்த்தேன். சகிக்கவில்லை. அண்ணன், தங்கை பாசமாம். தங்கைக்கு திருமணம் ஆனபின்னும் கணவன் வீட்டுக்கு அனுப்ப மாட்டானாம். வீட்டோடு மாப்பிள்ளையாம். சரி, அப்படி மாப்பிள்ளை மட்டும் இருந்தாலும் பரவாயில்லை. மாப்பிள்ளை வீட்டார் ஒரு கும்பலே வருகிறது. பகை வருகிறது. கதாநாயகன் தங்கையை அவர்கள் வீட்டுக்கு அனுப்பினால், தன்னுடைய மானம் போய்விடும் என்று கூப்பாடு போடுகிறான். அவர்களோ, அப்படியானால் நீ வெளியே போ என்று சொல்கிறார்கள். சரி என்று உடனே வெளியே போய் விடுகிறான். இப்போது மட்டும் மானம் போகவில்லையா? கேட்டால் அவன் கதாநாயகன், தியாகி என்கிறார்கள். எங்கள் காலத்திலெல்லாம் இப்படியா? அந்த காலத்தில் கேட்ட பாகவதர் குரல் எவ்வளவு இனிமையாக இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது! அப்போதெல்லாம் நாட்டில் பாலும் தேனும் ஓடியது. ம்.. அது ஒரு பொற்காலம் சார்!!!

X---X---X

1945ல்

ம். என்ன செய்வது? இந்த பஞ்ச காலத்தில் இந்தப் பிள்ளைகள் பிறந்து இருக்கிறது. எங்கள் காலத்தில் 1ரூபாய்க்கு 16படி அரிசி விற்றது. ஆனால் இப்போது வெறும் இரண்டரைப் படி அரிசிதான். மாதத்தில் 10 நாள் பட்டினி கிடக்க வேண்டியிருக்கிறது. முன்பெல்லாம் மாதம் 5 ரூபாய் சம்பளத்தில் 25 பைசா மிச்சம் பிடிப்போம். இப்போது மாதம் 10 ரூபாய் கிடைத்தும் கஷ்டம்தான். தங்கம் வாங்க வேண்டுமென்றால் கூலி சும்மாவா கிடைக்கிறது; பவுண் 13 ரூபாய் சொல்கிறான். முன்பெல்லாம் 1 அணா கொடுத்து நாலு நாள் விடிய விடிய வள்ளி திருமணம் நாடகம் பார்ப்போம். சம்பூர்ண ராமாயணம் தெருக்கூத்து 4 நாள் விடிய விடிய நடக்கும். ராஜா வேடம் போடுபவர், ராஜ நடை போட்டு, வந்தேனேனன மகராஜன் வந்தேனேனன என்று எட்டுக் கட்டையில் பாடுவது எவ்வளவு கம்பீரம்! இப்போது 4 மணி நேரம் மட்டும் வெள்ளை வேட்டியில் நிழல் படம் காட்டி 2 அணா வசூல் செய்து ஊரை ஏமாத்துகிறார்கள். இதுவும் ஏமாறுதுகள்! என்ன கொடுமையப்பா?! ம்.. அந்தக் காலம் ஒரு பொற்காலம் சார்!!!

X---X---X

2045ல்

TV, கம்ப்யூட்டர், சினிமா புரஜக்டர் எல்லாம் வீட்டில் இருந்தாலும், பிள்ளைகள் தியேட்டரில் போய் படம் பார்க்க வேண்டும் என அடம்பிக்கிறதுகள். குடும்பத்தோட 1 படம் பார்த்து வர 20000 ரூபாய் செலவாகிறது. ஒரு பாக்கெட் பாப்கார்ன் ரூ.500, ஒரு டீ ரூ.500 என்கிறான். பணத்தோட அருமை பிள்ளைகளுக்கு எங்கே தெரிகிறது? சம்பளம் என்ன அள்ளியா கொடுக்கிறான்? பிச்சக்காசு அஞ்சு லட்சம் கொடுக்கிறான். இது எந்த மூலைக்குப் போதும்! அரிசி கிலோ 500, காய்கறி 800, தங்கம் 1 பவுண் ஒன்னரை லட்சமாக விற்கிறது. ஆசைக்கு ஒரு வீடு கட்டலாம் என்றால், ஒரு ப்ளாட் காலி இடம் 2 கோடி ரூபாய் சொல்றான். இது எல்லாம் பிள்ளைகளுக்கு எங்கே தெரிகிறது? கொஞ்சமும் பொறுப்பு இல்லாதவர்கள். 30 வருடத்துக்கு முன் என் அப்பா காலத்தில் விலைவாசியெல்லாம் கொள்ளை மலிவு. ம்.. அது எல்லாம் ஒரு பொற்காலம் சார்!!!

        பின்குறிப்பு 1 :- இந்தக் க(ட்டுரை)தைக்கு ஆதாரம் சுமார் 2000 வருடங்களுக்கு முன் தத்துவமேதை சாக்ரடிஸ் சொன்ன வார்த்தைகள்தான்.

        “இந்தக் காலத்துப் பிள்ளைகள் பொறுப்பில்லாதவர்கள்; பெரியவர்கள் பேச்சை மதிப்பதில்லை. மரியாதை தெரியாதவர்கள்.”

பிகு 2 :- 2045ம் ஆண்டு தவிர, மற்ற வருட விலைவாசிகள் முழு உண்மை. கற்பனை அல்ல.

பிகு 2a :- அது சரி. 2045ம் ஆண்டு விலைவாசி மட்டும் கற்பனை என்று யார் சொன்னது?


Comments

MeenuJai said…
Change doesnt change. Like that some dialouge like this also doesnt change at any period.
truly nice.
Chandran Rama said…
Truly a wonderful depiction of the rising costs.. . very
nicely written...congrats