அமெரிக்க கவிஞர் ஜெர்ட்ருட் ஸ்டைன் ஒரு கவிதையில் A Rose is a rose is a rose is a rose என்று ஒரு வரி எழுதியிருந்தார்.அது மிகவும் புகழ் பெற்ற வரி கிவிட்டது. பல சமயங்களில் அந்த தொடர் ஆறு அல்லது ஏழு முறைகள் Rose என்கிற சொல்லுடன் உபயோகிக்கப்படுவதுமுண்டு. ஆனால் ஸ்டைன் நான்கு முறைகள்தான் Rose என்கிற சொல்லை எழுதியிருந்தார். எத்தனை முறை வந்தாலும் அர்த்தம் ஒன்றுதான். ரோஜா ரோஜாதான். ரோஜாவை ரோஜாவால்தான் முழுதாக அர்த்தப் படுத்திக் கொள்ளமுடியும். ரோஜா என்கிற சொல்லை மட்டுமல்ல எந்த சொல்லை எடுத்துக் கொண்டாலும் அதைப் பிறிதொரு சொல்லால் பெயர்த்துவிட முடியாது. அகராதியில் நாம் ஒரு சொல்லுக்கு காண்கிற அர்த்தங்கள் யாவும் அதை நெருக்கமாக அணுகத்தான் பயன்படுகின்றன. அகராதி இல்லாவிடில் அதன் அர்த்தத்தை பிரபஞ்சம் முழுவதும் தேட வேண்டி வரும். எந்த ஒரு சொல்லின் பொருளும் அதிலேயே உள்ளது.
இதே போன்று நுண்மான் நுழைபுலத்துடன் இன்னொரு வரியையும் ஸ்டைன் எழுதியுள்ளார்.அது `There is no there there`. வசீகரமும் திறமையும் வாய்ந்த ஸ்டைன் தன் வாழ்நாளை பாரிஸிலேயே கழித்தார். அவர் பிகாஸோ, மாடீஸ், ஹெமிங்வே போன்ற பல பிரபலங்களின் சிநேகிதி. முப்பது வருடங்கள் கழித்து பாரிஸிலிருந்து அவர் தான் சிறு வயதில் வாழ்ந்த கலிபோர்னியாவிலுள்ள ஓக்லாண்டிற்கு சென்றார்.அந்த இடைப்பட்ட காலத்தில் அங்கு எல்லாமே மாறிவிட்டிருந்தது. தான் படித்த பள்ளி, பார்த்த பார்க், சென்ற கோயில் மற்றும் விளையாட்டு மைதானம் போன்ற அனைத்தும் மாறிவிட்டிருந்ததைப் பற்றித்தான் அவர் `அங்கிருந்த அங்கு அங்கில்லை` என்று எழுதினார். அவ்வாறு அவர் நடந்து கொண்டது உள்ளூர்வாசிகளுக்கு மன வருத்தம்தான். என்ன செய்வது? பாரிஸ்வாசியான ஸ்டைன் வாழ்வில் ஓக்லாண்ட் அத்தியாயம் அத்தோடு முடிவுற்றது.
ஆனால் சென்னைக்கு குடியேறுகிற பலர் தங்கள் சொந்த ஊரையே நினைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். தங்களுடைய பொற்காலம் அங்குதான் இருந்ததாக நினைக்கிறார்கள். அதிகப்படியாக அவர்களில் பலர் பதினெட்டு வருடங்கள் வரைதான் சொந்த ஊரில் வாழ்ந்திருப்பார்கள். ஆனால் வயது எழுபது ஆனாலும் அதைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்பார்கள். பல அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள், எழுத்தாளர்கள்,அலுவலர்கள் இதில் அடக்கம். இவ்வளவிற்கும் இவர்களுக்கு சென்னை வந்த பிறகுதான் புகழ், பணம், சொத்து, பதவி ஆகியனவெல்லாம் கிடைத்திருக்கும். இருந்தும் இவர்கள் சென்னையை விரும்பாததுபோல் காட்டிக்கொள்வார்கள். தங்களுடைய வேர்கள் அங்குதான் இருப்பதாக சொல்லிக்கொண்டிருப்பார்கள். சென்னையிலேயே வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு இல்லாத ஒரு கவர்ச்சி அம்சத்தையும் இதன் மூலம் இவர்கள் தங்கள் மேல் தோற்றுவித்து விடுவார்கள்.
ஆப்ரிக்க-அமெரிக்க எழுத்தாளர் அலெக்ஸ் ஹேலி இத்தகைய கவர்ச்சியை மிகுந்த சாமர்த்தியத்துடன் பயன்படுத்தி Roots என்கிற சுயசரிதையை எழுதினார். தன்னுடைய முன்னோர்களை காம்பியாவிலுள்ள ஒரு இனத்துடன் முடிச்சு போட்டார். பதினெட்டாம் நூற்றாண்டில் அங்கிருந்து அடிமையாக வந்த குந்தா கிந்தே என்பவரின் வாரிசு என்று தன்னை அறிவித்தார். புத்தகம் பல லட்சம் பிரதிகள் விற்று புலிட்சர் பரிசையும் வென்றது. அந்த அமளி எல்லாம் முடிந்த பிறகு வேர்கள் புத்தகத்தில் காணப்பட்டவை வேறு பல புத்தகங்களில் ஏற்கனவே வேர் கொண்டிருப்பதை விமர்சகர்கள் அடையாளம் காட்டினர். திருட்டு குற்றத்தை ஹேலியே ஒப்புக் கொண்டார். ஒரு எழுத்தாளருக்கு பெரும் நஷ்ட ஈடும் கொடுத்தார். இது ஒரு அதீத உதாரணம். வேர்களைத் தேடிச் செல்பவர்கள் எல்லாம் பொய்யர்கள் இல்லை.
கடந்தகால வாழ்வின் ஒரு கால கட்டம் ஜீவனுடையதாக இருக்கும் பட்சத்தில் அதன் பாதிப்புகளை பாராட்டுவதுதான் நியாயமானது. ஆனால் வேர்கள் என்ற ஒன்றை வலுக்கட்டாயமாகத் தேடிச் செல்ல வேண்டுமா என்பது தான் கேள்வி. எனது நண்பரான ஒரு வங்காளப் பெண்மனி பலகாலம் சென்னையிலேயே வாழ்ந்துவிட்டு பின் வரும் காலத்தை கொல்கத்தாவில் கழிக்க முடிவு செய்து சென்னையிலிருந்த சொந்த வீட்டையும் விற்றுவிட்டு தன் கணவருடன் கிளம்பினார்.என்ன இருந்தாலும் தன்னுடைய இடம் அதுதான் என்று அவர் நினைத்தார். ஒரு வருடம் கழித்து ஒரு நாள் அவரிடமிருந்து போன் வந்தது. கொல்கத்தாவிலிருந்து பேசுகிறார் என்று நினைத்தேன். தானும் தன் கணவரும் சென்னைக்கே திரும்பிவிட்டதாக அவர் கூறினார். கொல்கத்தாவுடன் அவரால் தன்னை இணத்துக் கொள்ள இயலவில்லை. சென்னையில் கிடைத்த நண்பர் குழாத்தை அவரால் அங்கே ஏற்படுத்திக் கொள்ள இயலவில்லை.பூர்விகம்தான் நமது வேர் என்றில்லாது ஆக்கபூர்வமாக எது நம்மை செயலுக்குட்படுத்துகிறதோ அதை நாடிச் செல்வதுதான் பொருள் பொதிந்த செயலாகும். ஐரீஷ் கவிஞர் டபிள்யு.பி.யேட்ஸ் தன் முன் வந்து நின்ற ஜே.எம்.சிங் என்னும் நாடக சிரியரிடம் `ஏரன் தீவுகளுக்குச் செல்.அங்குள்ள மனிதர்களின் வாழ்வைப் பகிர்ந்துகொள். எவரும் வெளிப்படுத்தாத அந்த வாழ்க்கையை நீ வெளிப்படுத்து.` என்றார். சிங் அதை வேத வாக்கியமாக பாவித்து ஏரன் தீவுகளுக்கு உடனே சென்று அந்த வாழ்க்கையை தனது நாடகங்களில் உலகே வியக்கும் வண்ணம்வெளிப்படுத்தினார்.
மகாகவி பாரதி எட்டையபுரத்தில் பிறந்து வளர்ந்து பின்னர் காசி, சென்னை, புதுவை என்று புலம் பெயர்ந்து கொண்டே இருந்தார். தனது படைப்புகளில் எட்டயபுரத்து வாழ்க்கையைல் தேவைக்கு மேல் லயித்ததில்லை. அகில இந்தியாவையும் தனது பரப்பாக பாவித்தவர் அவர். தேசியக் கவி மட்டுமல்ல, தேசிய எழுத்தாளரும் பாரதிதான். பதின்மூன்று வயதிலேயே கடலூரை விட்டு சென்னைக்கு குடிபெயர்ந்த ஜெயகாந்தன் மிகுதியாக எழுதியதெல்லாம் சென்னை வாழ்க்கையைப் பற்றித்தான். யாரும் அதுவரை பார்த்திராத சென்னையையும் அவர் தன் எழுத்துகளில் வெளிக்கொணர்ந்தார்.
செகந்திராபாத்தில் பிறந்து வளர்ந்து எப்போதோ சென்னைவாசியாகிவிட்ட அசோகமித்திரன் இப்பொழுதும் கூட தன் இளமைக் கால அனுபவங்கள் பற்றி எழுதுகிறார். ஆனால் அதற்கு இணையாக அவர் சென்னை வாழ்க்கைபற்றியும் எழுதுபவர். தனது அமெரிக்க அனுபவங்களை வைத்தும் அவர் குறிப்பிடத்தக்க கதைகளை எழுதியுள்ளார்.பதினெட்டாம் அட்சக்கோடு நாவல் எழுதி முடிக்கும்வரை ஒரு இருபத்தைந்து வருட காலம் அவர் செகந்திராபாத்-ஹைதராபாத் எல்லைக்குள் கால் வைக்கவில்லை என்பது இப்போது எல்லோருக்கும் தெரிந்த ருசிகரமான தகவல். ஞாபகத்திலுள்ள இரட்டை நகரத்தை நிகழ்காலத்தில் சென்று பார்ப்பது தனது படைப்புக்கு எவ்விதத்திலும் உதவாது என்று அவர் முடிவு செய்தார். அவர் அறிவார் `அங்கிருந்த அங்கு அங்கில்லை` என்பதை.
நான் 2002ல் எடுத்த `அசோகமித்திரன்` டாகுமெண்டரியின் போது அதற்கு தொடர்பான இன்னொரு சுவையான சம்பவம் நிகழ்ந்தது.அவரை நான் செகந்திராபாத்தில் அவர் வாழ்ந்த லான்சர் பாரக்ஸ் என்கிற ரயில்வே குடியிருப்புக்கு அழைத்துச் சென்றேன். பல வருடங்களுக்குப் பின் அவர் அங்கு செல்கிறார். அப்பொழுது அந்த வீட்டில் யாரோ ஒரு உயர் அதிகாரி தங்கியிருந்தார். அந்த வீட்டிற்குள் அசோகமித்திரனுடன் சென்று அவரது நினைவுகளைப் பற்றிய வெளிப்பாடுகளை படமெடுப்பதாக ஏற்பாடு. நாங்கள் சென்ற சமயம் அந்த வீடு பூட்டப்பட்டிருந்தது. பக்கத்து வீட்டுக்காரர் அதன் சாவியைக் கொண்டு வந்து திறந்து விடுவதாகக் கூறினார். ஆனால் அசோகமித்திரன் ஏனோ அதை விரும்பவில்லை. அவர் மன நிலை மாறிவிட்டிருந்தது. அவர் இல்லாமல் அந்த வீட்டினுள் சென்று அதைப் படம் பிடிக்க எனக்கும் விருப்பமில்லை. அந்த வீட்டின் கேட் முன்னால் நின்று கொண்டே தனது கடந்த கால நினைவுகளை அவர் அசோகத்துடன் பகிர்ந்து கொண்டார். தன் சிறுபிராயத்து தடயங்கள் அழிந்ததற்காக அவர் வருந்தவில்லை.அன்று தான் விளையாடியதற்கு கிடைத்த மைதானம் போல் இன்று உள்ள சிறுவர்களுக்கு விளையாட மைதான வசதி இல்லையே என்பது பற்றித்தான் அவர் நெகிழ்ச்சியுடன் பேசினார். எவ்வித முன்கூட்டிய திட்டமிடலும் இன்றி உருவான அக்கணங்கள் டாகுமெண்டரியில் பதிவாயின. டாகுமெண்டரியைப் பார்த்தவர்களுக்கும் அப்பகுதி மிகவும் பிடித்திருந்தது.
நான் சென்னைக்கு வந்து இருபத்தாறு வருடங்களாகிவிட்டன. பிறந்தது, ஆறாவதிலிருந்து கல்லூரி வரை படித்தது எல்லாம் திருச்சியில்தான். அன்றிலிருந்து இதுநாள் வரை இலக்கியம், நாடகம், சினிமா ஆகியவற்றில் தொடர்ந்து ஆர்வம் உள்ள சில நண்பர்களைக்காணத்தான் நான் திருச்சி செல்கிறேன். மற்றபடி பழைய ஞாபகங்களைக் கிளறவோ, பழைய இடங்களை மீண்டும் மீண்டும் பார்த்து பெருமூச்செறியவோ அங்கு செல்வதில்லை. எல்லா ஊர்களையும் போல அங்கும் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சில பகுதிகளுக்கு செல்லும்பொழுது நான் அங்கே அதுவரை சென்றதே இல்லை என்று கூட அவை எண்ண வைக்கின்றன. பாரபட்சமற்ற ஒரு பார்வையில் சென்னைதான் தமிழ் நாட்டின் சிறந்த இடமாக எனக்குப் படுகிறது. வந்தாரை மட்டுமல்ல நிந்தனை செய்வோரையும்கூட வாழ்விக்கும்நகரமும் சென்னைதான்.
Comments