(நன்றி : தினமணி)
நான் சாதாரணத்திலும் சாதாரண வாக்காளன். ஓட்டுப் போட உரிமை எனக்கு வந்தபிறகு, ஓட்டுப் போடும் தருணத்தை வேண்டுமென்றே தவற விட்டிருக்கிறேன். ஏனோ இந்த அரசியல் கட்சிகளின் மீது அளவுகடந்த அலட்சியம். இந்தியா மாதிரியான ஒரு பெரிய தேசத்தை ஆள்வது சாதாரணமான விஷயமல்ல. எல்லோரையும் திருப்தி செய்யும்படியான ஒரு ஆட்சியை யாராலும் கொடுக்க முடியாது. பாரதிய ஜனதாவும், காங்கிரசும் குட்டி குட்டி மாநிலக் கட்சிகளின் தயவால் 5 ஆண்டுகள் ஒரு திருப்புமுனையும் இல்லாமல் ஆட்சியை முடித்துக்கொண்டது பெரிய சாதனையாகவே எனக்குத் தோன்றுகிறது. முதலில் இதைச் சாதித்தவர் முன்னாள் பிரதம மந்திரி நரசிம்மராவ்தான்.
இப்போதோ எந்த அளவிற்கு உடைய முடியுமோ அந்த அளவிற்கு தேசிய கட்சிகளான காங்கிரசும், பாரதிய ஜனதாவும் உடைந்து போயிருக்கின்றன. தேர்தல் நடப்பதற்கு முன்பே இந்தத் துண்டு துண்டான நிலையை உணர முடிகிறது. தேர்தலுக்குப் பிறகு என்ன நிலை என்பது தெரியவில்லை.
தேர்தல் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. ஏராளமான பணம் செலவாகும். தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிக்க தேர்தல் அதிகாரிகள், காவல் துறையினர், ராணுவத்தினர், அரசாங்கத்தில் உத்தியோகம் பார்ப்பவர்கள் என்று பலர் பலவிதமாக முடுக்கப்பட்டு சிரமத்திற்கு உட்படுவார்கள்.
எப்படியாக இருந்தாலும் எதாவது ஒரு கட்சி ஆட்சி செய்ய வரவேண்டும். இப்போது நடக்கப்போகும் தேர்தலில் அப்படி நடக்க வாய்ப்புள்ளதா என்பது சந்தேகமாக உள்ளது.
ஒவ்வொரு முறையும் வாக்குப் போடும்போது அதிருப்தி நிலை அதிகரித்துக்கொண்டே போகும். ஒரு சமயத்தில் நான் பலருக்கும் ஓட்டுப் போடுவேன். அல்லது எனக்குத் தெரியாத தனியாக நிற்கும் தனிநபருக்கு ஓட்டுப் போடுவேன். ஒரு முறை திமுகாவிற்கும், இன்னொரு முறை அதிமுகாவிற்கும் ஓட்டுப் போடுவேன். நான் யாருக்கு ஓட்டுப் போட்டாலும், போடாவிட்டாலும் ஆட்சியை ஏற்படுத்தும் சக்தி என் ஓட்டிற்கு இல்லை. பல லட்சக்கணக்கான மனிதர்களில் நானும் ஒருவன் அவ்வளவுதான்.
தேர்தலை ஒடடி நடக்கும் வன்முறை எல்லோரையும் போல என்னையும் கவலைப்படுத்தும். ஒவ்வொரு முறை தேர்தலின் போதும் என் வீட்டுச் சுவரில் பல கட்சிகளின் விளம்பரம் அலங்கரிக்கும். உற்சாகமுள்ள கட்சிக்காரர்கள் சுவர்களை நாசம் செய்துவிடுவார்கள். தேர்தல் முடிந்தபின்னும் சுவரொட்டிகளைத் தாங்கி நிற்கும் சுவர்கள் இருந்துகொண்டே இருக்கும்.
தேர்தலைச் சந்திப்பவர்கள் ஏகப்பட்ட பணத்தைத் தண்ணீராக செலவு செய்துகொண்டே இருப்பார்கள். கருப்புப் பணத்தையெல்லாம் தாராளமாகச் செலவிடுவார்கள். ஒரு வங்கியிலோ, அரசாங்கத்திலோ ஒருவர் பணியில் சேர்வதற்கு, குறைந்தபட்சம் கல்வித் தகுதி, தேர்வு எழுதி அதில் வெற்றி பெறும் தகுதி என்றெல்லாம் தேவை. ஆனால் ஒரு அரசியல் பிரமுகருக்கு எதுமாதிரியான தகுதி வேண்டும்?
Comments