Skip to main content

தீவிரவாதக் கவிதை















ஒற்றைத் தோட்டாவை மட்டும் மிச்சம் வைத்து

கண்ணுக்குப் பட்டதையெல்லாம்

இலக்காக்கிக் குறிவைக்கிறேன்

கருந்துளை நீண்ட எனது துப்பாக்கி முனையில்.

பொருட்களையெல்லாம் குறி வைக்கிறேன்-

உயிர்களைக் குறிவைக்கிறேன்-

தாவரங்களைக் குறிவைக்கிறேன்-

விலங்குகளைக் குறிவைக்கிறேன்-

பறவைகளைக் குறிவைக்கிறேன்-

மனிதர்களைக் குறிவைக்கிறேன்-

உறவுகளைக் குறிவைக்கிறேன்-

நண்பர்களைக் குறிவைக்கிறேன்-

எதிரிகளைக் குறிவைக்கிறேன்-

துரோகிகளைக் குறிவைக்கிறேன்-

உங்கள் ஒவ்வொருவரையும்

தனித்தனியே குறிவைக்கிறேன்-

காலூன்றி பூமிக்குக் குறிவைக்கிறேன்-

நிமிர்ந்து நின்று வானத்தைக் குறிவைக்கிறேன்-

பரிதியையும் நிலவையும் குறிவைக்கிறேன்-

கோள்களைக் குறிவைக்கிறேன்-

விண்மீன்களைக் குறிவைக்கிறேன்-

என் சுட்டுவரல் நுனியில்

இந்தப் பேரண்டத்தையே

இலக்காக்கிக் குறிவைக்கிறேன்-

இவை யாதொன்றையும்

சுட்டுவிடாமல் விட்டுவிடுகிறேன்.

அவை இருந்துவிட்டுப் போகட்டும்...

இலக்காக

எனக்கு அவற்றின் பெயர்கள் மட்டும் போதுமானதால்

பெயர்களையெல்லாம் எடுத்துக் கொள்கிறேன்-

பெயர்களின் ஒலிக்குறிப்புகளை எடுத்துக்கொள்கிறேன்-

பெயர்களின் பிம்பத்தை எடுத்துக்கொள்கிறேன்-

பிம்பங்களின் பிரதிகளை எடுத்துக் கொள்கிறேன்-

பிரதிகளின் உருவங்களை எடுத்துக் கொள்கிறேன்-

உருவத்தை, வடிவத்தை, வண்ணங்களையெல்லாம்

ஒலிச் சரங்களால் சொற்களாக மீட்டெடுத்து

இலக்காக்கிச் சுட்டுத் தள்ளுகிறேன்.

சிதறிய ஒலித்துணுக்குகளைச் சுடுகிறேன்.

சுட்டுக் கொண்டேயிருக்கிறேன்.

தூரச் சொற்களைத் தொலைநோக்கியில் கண்டு சுடுகிறேன்.

தப்பிய சொற்களைத் தேடிப்பிடித்துச் சுடுகிறேன்.

இடமும் வலமும் மேலும் கீழும் முன்னும் பின்னும் சுடுகிறேன்.

சுற்றிச் சுழன்று எனது காட்சிகளை சுட்டுத் தள்ளுகிறேன்.

என் கனவை சுட்டுக் கொல்கிறேன்.

சுட்டுத் தள்ள ஏதுமில்லாதபோது

மீதமுள்ள தோட்டாகொண்டு

எனது பெயரையே இலக்காக்கி

சுட்டுக் கொல்கிறேன்.

Comments