Skip to main content

சில குறிப்புகள் 15




கோவில்பட்டியைச் சேர்ந்த கவிஞர் அப்பாஸ் 49வது வயதில் வெள்ளிக்கிழமை காலை (20.03.2009) இறந்த செய்தியை என் நண்பரும் கவிஞருமான சிபிச்செல்வன் மூலம் அன்றே அறிந்தேன். நான் கவிஞர் அப்பாஸ் அவர்களைப் பார்த்ததாக ஞாபகமில்லை. ஆனால் அவர் கவிதைகளை அறிவேன். 'வரைபடம் மீறி' என்ற அவர் கவிதைத் தொகுதிக்கு விருட்சத்தில் விமர்சனம் எழுதியதாகக் கூட ஞாபகமிருக்கிறது. அவருடைய மரணத்தைப் பற்றிய செய்தி தினமணி நாளிதழில் ஒரு மூலையில் வெளியிட்டிருந்தார்கள். மற்ற பத்திரிகைகள் அதைக்கூட கண்டுகொள்ளவில்லை. அவ்வளவுதான் அப்பாஸ் வாழ்க்கை முடிந்துவிட்டது. பல எழுத்தாளர்களுடைய மரணம்கூட இப்படித்தான் யார் கவனத்தையும் கவராமல் போய்விடுகிறது. மிகச் சிறிய வட்டத்தில்தான் அப்பாஸ் மரணமடைந்துவிட்டார் என்பது தெரியும். சமீபத்தில் இப்படி மறைந்த இன்னொரு கவிஞர் சுகந்தி சுப்பிரமணியன். அப்பாஸ் நினைவாக அவருடைய கவிதைகளைச் சமர்ப்பிக்கிறேன்.


உன் முகம்


உன்னைப் பற்றிய என் பிரக்ஞை


கடிகார முட்களை தாண்டிய


பூமியின் இருப்பு.


நடக்கும் கால்களில் தெரியும்


உன் முகம், ஒரு பாதி.


இருப்பை அறியாது உள்வளரும் மரம்


நானும், நீயும் காணாத காற்று


அறிந்ததில் தெரிந்தது


அறிந்ததை தாண்டி


எப்போதும் விரியும் பூ.



இடைவெளி


வெளியில் இருந்து அறை திரும்பிய நான்


லுங்கி மாற்றி,


ஃபேனை தட்டிவிட்டு


மல்லாந்து சாய்ந்தேன்காற்று பரவ


தன் இடைவெளிகளில் விடுதலை கண்டது


மின் விசிறி.



மலையும் வீடும்


வீட்டிலிருந்து மலைகளை


சுதந்திரமாய் பார்த்தேன்


பின்


பாதை பற்றி மலை ஏறி


இறங்கும் நீர்வீழ்ச்சி என


வீடுகளை சுதந்திரமாய் பார்த்தேன்


பார்த்தது விழித்துக்கொள்ள


இப்பொழுது


என் குழந்தையோடு விளையாடிக்


கொண்டிருக்கிறேன்.




ரோஜா


சொல்லிக்கொள்ளாமலே போ


கேட்டு வருவதில்லை காற்று


சொல்வதில் நீள்கிறது


யாருமற்ற ஒற்றையடிப் பாதை


யாருக்கும் தெரிவதில்லை


நீரற்ற கண்ணாடி தம்ளர்


எப்போதும் காலிய்க்கிவிடு


வார்த்தைகளை கவனமாய்


இருப்பது ஆபத்து


முடிந்தால் ஒரு ரோஜா பதியம்


நட்டு வை


எப்படி, எதுவென்று


யாரிடமும் சொல்லாதே


நீ சொல்லிய எதையும்


கொண்டதில்லை ரோஜா


Comments

மனம் கனக்கிறது, இந்த நேரத்தில் தான் ஆத்மாநாம், கோபிக்கிருஷ்ணன், நகுலன், ப சிங்காரம், ஆதவன், ஜி நாகராஜன், ஸ்டெல்லா புரூஸ், சுஜாதா எல்லோரும் நினைவில் வந்தார்கள், அந்த தாங்கொணாத் தருணத்தில் தான் என் வலைப்பூவிலும் பதிவிட்டிருக்கிறேன்.
அவருக்கு என் அஞ்சலி
அருமையான கவிதைகள்.
பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி !