1. இன்று
இன்று
சமையல் கியாஸ் தீர்ந்து விட்டது.
இன்று
மார்கழி மாதக் குளிர்
சில்லிட்டு இருந்தது
இன்று
சாலையில் பார்த்த
ஒருவன் இடதுகண் மூடிக்
கட்டுப் போட்டிருந்தது
இன்று
(இதுவரை சிரிக்காத)
நண்பன் ஒருவனின்
இடைவிடாத சிரிப்பைக்
காண நேர்ந்தது
இன்று
வந்த கடிதமொன்றில்
நண்பன் தன்
முதல் மனைவியின்
நினைவு நாள்
நாளை என்று
எழுதியிருந்தான்.
இன்று
எழுத முயன்ற
கவிதையில்
பெரிதும் சோகம்
கவிழ்ந்தது
இன்று
இந்தக் கவிதை
தானே தன்னை
எழுதிக்கொண்டது
2. இன்ன பிறவும்.....
அநேகமாய்
முடிவதில்லை
அழகைப் பற்றிய
அவதானிப்பை
அப்படியே
கைமாற்றி விட.
அதிகபட்சம்
முடிவதெல்லாம்
அதைப்போல
இது என்பதாய்
இன்னொன்றை
இணையாய்ச் சொல்லி
இப்படித்தான்
இருக்கிறது.
இன்னபிறவும்
இவ்வாழ்வில்.
3. பேச்சுத்துணை
கடிமணம் வாழ்வில்
கட்டாயத் தேவையா
யென்றெல்லாம்
கடிவாளமிட்ட மனதோடு
ஒத்தையில் இருந்தவனை
ஒருவாறு பேசிச் சரிகட்ட
நான் உட்பட
நண்பர்கள் பலரும்
எடுத்துச்சொன்ன பலவற்றில்
எகோபித்த ஒன்று
பின்பகுதி வாழ்க்கையில்
பேச்சுத் துணைக்கென்றாவது
பெண்ணொருத்தி
வேண்டுமென்பது.
மணமாகிச் சில
மாதங்கள் கழித்து
எதேச்சையாய்
எதிர்ப்பட்டவனிடம்
எப்படிப்
பேச்சுத்துணை என்றேன்
எரிக்கும் பார்வையொன்றை
வீசி
எதுகை மோனையாய்
சொல்லிப்போனான்:
எப்போதும் பேசிக்கொண்டே
அவள்
எதிர்ப்பேச்சின்றி துணையாய்
நான்.
Comments
இந்தக் கவிதை
தானே தன்னை
எழுதிக்கொண்டது//
கவிதை தன்னை தானே எழுதிக் கொண்டால் தான் அது கவிதை. செய்யப்பட்டவை கவிதை அல்ல. நல்ல கவிதைகள். வாழ்த்துகள்