Skip to main content

விளம்பர காக்கைகள்..

 துளி - 190 


 அழகியசிங்கர்





          ஒரு காலத்தில் எனக்கு நண்பர்களாக இருந்தவர்கள்தான் இப்போது விரோதிகளாக மாறி விடுகிறார்களோ என்று தோன்றுகிறது.  இது இயல்பு.

நேற்று (25.04.2021) குவிகம் இலக்கியக் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.  திருப்பூர் கிருஷ்ணன் உரை.  தி. ஜானகிராமன் பற்றி அவர் பேசினார்.

ஜானகிராமனை நேரிடையாகவும், படைப்புகள் மூலமாகவும் அறிந்தவர்.  அக் கூட்டத்திற்கு ஜானகிராமன் பெண் உமா சங்கரி வந்திருந்தார்.

வழக்கம்போல் திருப்பூர் கிருஷ்ணன் சிறப்பாகவே பேசினார்.  ஆனால் ஒரு நல்ல கூட்டம் நடைபெறும்போது திருஷ்டியாக எதாவது நடந்து விடும்.

கல்யாணராமன் என்கிற கல்லூரி முதல்வருக்குக் கருத்துச் சொல்வதற்கு வாய்ப்பு கிடைத்தது.  அவர் மூன்று கருத்துக்களைக் கூறினார். ஒரு  பொதுவான இடத்தில் பேராசிரியருக்கு எப்படிப் பேச வேண்டுமென்று தெரியவில்லை.

 மாணவராக இருந்தபோது தன் கவிதை, கதைகயை விருட்சம் இதழில் பிரசுரம் செய்வதற்கு இவரும் இவர் நண்பர்களும் என் இருப்பிடத்திற்கு வருவார்கள். விருட்சத்தில் அவர் கவிதைகள், கதைகள் வந்திருக்கின்றன.  

இப்போது காட்சி மாறி விட்டது.  அவரும் மாறி விட்டார்.

அவர் உதிர்த்த தப்பான மூன்று முத்தான கருத்துக்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

திருப்பூர் கிருஷ்ணன் தி.ஜானகிராமனைப் பற்றிப் பேசும்போது  ஜானகிராமனுக்கு ஆன்மிகத்தில் நாட்டமுண்டு என்று குறிப்பிட்டார். 

பேராசிரியர் கல்யாணராமன் பேசும்போது ஜானகிராமன் எழுத்தில் ஆன்மிகம் இல்லை என்று பேசினார்.  திருப்பூர் கிருஷ்ணன் நாட்டமுண்டு என்றுதான் குறிப்பிட்டார்.  ஏன் என்றால் அவர் நேரிடையாகவே ஜானகிராமனை அறிவார்.

தப்பாகப் பேசும் பேராசிரியர் குறித்து என்ன சொல்வது?
 
ஜானகிராமன் புகழைப்பாடும்போது தன்னிலை மயக்கம் இருக்கக் கூடாது.  ஜானகிராமனின்  புகழ் கடைசிவரை ஓங்கும் என்றும், ஜெயகாந்தன், சுந்தர ராமசுவாமி, கந்தசாமி புகழ் காலத்தால் மங்கும் என்று குறிப்பிட்டார்.  ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, கந்தசாமி பெயர்களை இழுப்பது தேவையில்லாத விஷயம். பேராசிரியருக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை.  அவர் இனி நாகர்கோவிலுக்கு டிக்கட் எடுத்துக்கொண்டு போக முடியாது.

மூன்றாவதாகச் சொன்னதுதான் மோசமான விஷயம். தேவையில்லாமல் என்னைப் பற்றிப் பேசியதுதான்.  நானும் அவரைப் போலக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருப்பவன். கூட்டத்தில் ஒரு பொருட்டே இல்லை.

 பேராசிரியர், தி.ஜானகிராமன் குறித்து கட்டுரைகளை எல்லோரிடமிருந்து  1000 பக்கங்களுக்கு மேல் பெற்றுத் தொகுத்துள்ளார். ஆயிரம் ரூபாய் மேல் மதிப்புள்ள அந்தப் புத்தகத்தை விலைக்கு   நானும் திருப்பூர் கிருஷ்ணனும் வாங்க வேண்டுமாம். காலச்சுவடு பதிப்பகம் கொண்டு வந்ததால் அதற்கு நஷ்டம் ஏற்படக்கூடாதாம். அதோடு இன்னொன்று சொல்கிறார் விருட்சம் இதழிற்கு மதிப்புரைக்காகப் புத்தகங்களைச் சேர்க்கிறேனாம். ஆனால் மதிப்புரை வருவதில்லையாம். அதனால் இந்தப் புத்தகத்தை விலை கொடுத்து வாங்க வேண்டுமாம். 'தமிழ் இந்து' மாதிரி பத்திரிகையில் மதிப்புரை வரவேண்டுமென்றால் எத்தனை பிரதிகள் வேண்டுமானாலும் அனுப்பத் தயாராக இருப்பார். அது போகட்டும். என்னைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் இவர் இப்படி உளறுவது சரியில்லை. மேலும் இதை இப்படி ஒரு பொது மேடையில் சொல்வதும் இன்னும் மோசம்.  விருட்சம் பத்திரிகை 34 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் பத்திரிகை.  அதற்கு இலவசமாக யாரும் இப்போதெல்லாம் மதிப்புரைக்குப் புத்தகங்கள் அனுப்புவதில்லை.  அப்படியே அனுப்பப்படுகிற  புத்தகங்களை நான் விளம்பரப் படுத்தாமல் இருப்பதில்லை. 

நான் ஒவ்வொரு மாதமும்  என் ஓய்வூதியம் பணத்தில் ரூ.1000க்கு புத்தகம் வாங்கும் பழக்கம் உள்ளவன்.  போஸ்டல் காலனி வீட்டில் நான் ஒரு நூல் நிலையம் வைத்திருக்கிறேன்.  அங்குதான் எல்லாப் புத்தகங்களையும் சேர்த்துக்கொண்டிருக்கிறேன்.

வருடத்தில் எல்லா மாதங்களிலும் புத்தகங்கள் வாங்கி சேகரிக்கும் வழக்கம் உள்ளவன்.  ஏன் காலச்சுவடு பதிப்பகத்தில்கூட புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். எனக்கு விருப்பமான புத்தகங்களைத்தான் நான் வாங்க முடியும்.  ப்ளாட்பாரங்களிலும் புத்தகம் பார்த்தவுடன் வாங்கி சேகரிப்பேன்.  மேலும் நண்பர்கள் சிலர் நன்கொடையாகப் புத்தகங்களைக் கொடுத்திருக்கிறார்கள்.
  
ஆனால் பேராசிரியர் கல்யாணராமன் தொகுத்த புத்தகத்தை அவர் இதுமாதிரி தத்துப்பித்தென்று பேசியதால் வாங்கப் போவதில்லை.
  
நானும் விருட்சம் வெளியீடாகப் புத்தகங்களைக் கொண்டு வருகிறேன்.  விருட்சம் பத்திரிகை தொடர்ந்து நடத்தி வருகிறேன். நான் எல்லோரிடமும் புத்தகங்கள் வாங்கும்படி வேண்டுகோள் விடுக்க முடியுமே தவிர வற்புறுத்த முடியாது.

மேலும் திருப்பூர் கிருஷ்ணனை எடுத்துக்கொள்ளுங்கள்.  அவர் இலக்கியத்திற்காகப் பல ஆண்டுகள் உழன்று கொண்டிருப்பவர், அவருக்கு என்ன கிடைத்தது இதன் மூலம். இலக்கியம் மீதுள்ள அக்கரையால் மிகக் குறைவான ஊதியத்தில் ஒரு பத்திரிக்கையின் ஆசிரியராக இருக்கிறார்.  தி.ஜானகிராமன் மீது அன்பு கொண்டவருக்கு மரியாதை செய்யும் விதமாக அவருக்கு ஜானகிராமன் கட்டுரை புத்தகம் கொடுக்கிறேன் என்று சொல்லியிருக்க வேண்டும். இதற்கெல்லாம் பரந்த மனம் கொண்டவருக்குத்தான் தோன்றும். 

மாதம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் பேராசிரியர் கல்யாணராமன் ஆணவத்தால் பேசியதாக இதை எடுத்துக்கொள்ளலாமா?

பேராசிரியர் போன்ற பல பல்கலைப் பேராசிரியர் மனது வைத்தால் எத்தனையோ புத்தகங்களை வாங்கி நூல் நிலையங்களில் குவித்திருக்க முடியும்.எத்தனையோ பதிப்பகங்களின் நிலையை சரி செய்திருக்க முடியும்,  ஆனால் கல்யாணராமன் போன்ற பேராசிரியர்களுக்கு அது மாதிரி மனம் வருவதில்லை.

காக்கைகள்தான் சென்ற இடமெல்லாம் வாய் வைக்கும். சில விளம்பர காக்கைகள் சென்ற இடமெல்லாம் அலப்பறை செய்து கொண்டே இருக்கின்றன. விளம்பர காக்கைகளுக்கு வாய்ப்பூட்டு போட முடியுமா?
  
  
  

Comments