Skip to main content

ஒரு வழியாகத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டோம்..

 10.03.2021


துளி - 176



அழகியசிங்கர்







எல்லோருக்கும் வணக்கம்.  இன்று தடுப்பு ஊசி போய்ப் போட்டுக்கொண்டு வந்துவிட்டேன்.  “இதில் சொல்வதற்கு என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். உண்மைதான். ஆனால் எனக்குச் சொல்வதற்கு இருக்கிறது.

கோவிந்தன் ரோடில் உள்ள ஒரு கார்ப்பரேஷன் மருத்துவமனைக்கு முதலில் போனேன்.  நானும் மனைவியும்.

பிபியும் சுகரையும் நான் எப்போதும் சுய பரிசோதனை செய்து கொண்டிருப்பேன். அவை இரண்டும் என் உடன் பிறப்புகள்.

இன்று காலையில் அப்படி சுயப் பரிசோதனை   செய்தபோது சரியாக இருந்தது எல்லாம்.

நாங்கள் இருவரும் மருத்துவ மனைக்குச் சென்றோம். கூட்டம் சுமாராக இருந்தது.

எங்கள் இருவருக்கும் பிபியைப் பார்த்தார்கள்.  அதிகமாகக் காட்டியது.  சிறிது நேரம் உட்காரச் சொன்னார்கள்.

உட்கார்ந்தோம்.  திரும்பவும் சோதித்தார்கள்.  முன்பு இருந்ததை விட ரீடிங் அதிகமாகக் காட்டியது.  எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.  எனக்காவது பரவாயில்லை.  என் மனைவிக்கு ஏன் அப்படிக் காட்டியது என்று தெரியவில்லை.

மருத்துவ மனையில் இருப்பவர்கள்  நீங்கள் பார்க்கும்  மருத்துவரிடம் அனுமதிச் சீட்டு வாங்கிக்கொண்டு வாருங்கள் என்றார்கள்..

அந்த மருத்துவமனையை விட்டு வெளியே வந்தபோது ஒரு ஆட்டோகாரர் எங்களை விசாரித்தார். 

"சுகரும்பிபியும் இருக்கிறது என்ன சார் பண்ணுவது?" என்று கேட்டார்.  பதில் சொல்லமுடியாமல் வந்து விட்டோம்.

நாங்கள் அங்கிருந்து மருத்துவர் ஜெ.பாஸ்கரனைப் பார்க்க மாம்பலத்தில் உள்ள பப்ளிக் ஹெல்த் சென்டருக்கு வந்தோம்.  

அங்குள்ள தடுப்பூசி போட்டுக்கொள்ளும் இடத்திற்குச் சென்றோம். தடுப்பூசியைப் போடுவதற்கு முன் பிபி செக் பண்ணுவதில்லை என்று குறிப்பிட்டார்கள்.  அங்கிருந்து போனில் டாக்டர் ஜெ.பாஸ்கரனைத் தொடர்பு கொண்டேன். 
 
அவர் ஒரு ஏழுபேர்களுக்கு ஊசி போடுவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.  நாங்களும் அந்தக் கூட்டத்தில் சேர்ந்து கொண்டோம்.  

தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்தவர்களைப் பார்க்கும்போது பரிதாபமாக இருந்தது. அவர்கள் எல்லோரும் முகத்தில் கவலையை வைத்துக்கொண்டு இருப்பதாகப் பட்டது. 

பப்ளிக் ஹெல்த் சென்டரில் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டோம்.  தடுப்பூசிப் போடுவதற்கு முன் எந்த பிபியும் செக் பண்ணவில்லை.  அது தேவையுமில்லை.  என் பதட்டம்தான் பல மடங்கு பிபி உயர்வதற்குக் காரணமாக இருக்கிறது.  

இந்தப் பதட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கிறேன்.
\  
தடுப்பூசிப் போட்டு வீட்டிற்கு வந்தபிறகு நன்றாகத் தூங்கினேன்.  எழுந்தவுடன் நான் வைத்திருக்கும் பிபி கருவியை எடுத்து செக் பண்ணினேன்.  எப்போதும் போல் சரியாகக் காட்டியது?

Comments