Skip to main content

ஓய்வு ஊழியர்களின் நாள் இன்று

 துளிகள் - 161


அழகியசிங்கர்



ஓய்வு ஊதியக்காரர்களில் நானும் ஒருவன். ஓய்வுபெறும்போது எப்படா ஓய்வு பெறப் போகிறோம் என்று ஏங்கிக் கொண்டிருந்தேன்.
ஒவ்வொரு நாளையும் குறைத்துக்கொண்டே வருவேன். வேண்டா வெறுப்பாக அலுவலகம் போகும்போது, வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போடும்போது சத்தமாக எல்லோர் காதுகளில் விழும்படி இன்னும் இவ்வளவு நாட்கள்தான் இருக்கின்றன என்று சொல்வேன். எல்லோரும் சிரிப்பார்கள்.
கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஓடிவிட்டன. தேவையான அளவிற்கு ஓய்வூதியம் வருகிறது. அது போதும். விருப்பமான பொழுதில் எழுந்துகொண்டு விருப்பமான புத்தகங்கள் படித்துக்கொண்டு எழுதிக்கொண்டும் இருக்கிறேன். யாரும் எந்தக் கட்டளையும் இடவில்லை.
உண்மையில் யாராவது இன்று என்ன தேதி என்று கேட்டால், எனக்கு ஞாபகத்தில் வராமல் போய்விடும். இன்று புதன் கிழமை என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் வியாழக்கிழமை.
நான் ஓய்வு பெற்ற பின்தான் என் புத்தகங்கள் எல்லாவற்றையும் கொண்டு வந்தேன். என் ஓய்வூதியம் பணத்திலிருந்துதான் இன்னும் விருட்சம் இதழும், புத்தகங்களும் கொண்டு வந்து கொண்டிருக்கிறேன். உண்மையில் ஓய்வு பெற்றபின்தான் நான் அதிகமாக எழுதிக்கொண்டிருக்கிறேன்.
ஓய்வு பெறுவது பற்றி இரண்டு மூன்று கவிதைகள் எழுதியிருக்கிறேன். 'வரட்டும்' என்கிற கவிதை ஒன்று.

அந்தக் கவிதையை இங்குத் தருகிறேன்.


வரட்டும்..


சந்திரமௌலி என்பவர்
அங்கிருந்து இங்கு வருகிறார்
இங்கிருந்து அங்குப் போகிறார்
பென்சன்காரர்கள்
எங்கே எங்கே எங்கே
என்று கேட்கிறார்கள்
இவரைத் தேடி அலுவலகத்தில்
அவர்
ஆமாம் ஆமாம் ஆமாம் என்கிறார்
யாருக்கும் எந்தத் தீர்வும் கிடைப்பதில்லை
குறையில்லாத மனிதர்களும் இல்லை
2014 பிப்ரவரி மாதத்திற்குப் பின்பு
இவரும் பென்சன்காரர்
Image may contain: one or more people and drawing
Chandramouli Azhagiyasingar

Comments