Skip to main content

கவிதையும் ரசனையும் - 6 (பகுதி 2)

 அழகியசிங்கர்



'லாங்ஸ்டன் ஹியூஸ்கவிதையைப் பார்ப்போம்.


 

            'கலப்புஎன்பது அக் கவிதையின் தலைப்பு.

 

 

            என் தந்தை ஒரு வெள்ளையன்

            என் தாய் ஒரு கறுப்பி

            என் வெள்ளை தந்தையைச் சபித்தால்

            என் சாபம் எனக்கே திரும்பும்

 

            என் கறுப்புத் தாயைச் சபித்தால்

            அவள் நரகத்தில் இருக்க விரும்பினால்

            அந்த கெட்ட விருப்புக்கு வருத்தம்

            அவள் நன்றாக இருக்கட்டும் அதுவே

            என் இப்போதைய விருப்பம்

 

            என் தந்தை இறந்தது அழகிய பங்களாவில்

            என் தாய் செத்தது ஒரு குடிகையில்

            நான் சாகப் போவது எங்கேயோ

            நான் வெளுப்பும் இல்லை கருப்பும் இல்லையே 

 

 

 

            பெரும்பாலும் மொழிபெயர்ப்புக் கவிதைகளுக்கு சிறுபத்திரிகைகள்தான் தான் அடைக்கலம் கொடுக்கின்றன.  ஆனால் இன்னும் கூட வணிக ரீதியாக இயங்கும் பத்திரிகைகள் மொழிபெயர்ப்புக் கவிதைகளைப் பிரசுரம் செய்வதில்லை.  ஏன் என்று தெரியவில்லை?

 

            ஆனால் ஒருவர் விதம்விதமாக கவிதைகள் எழுத வேண்டுமென்று நினைத்தால் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் வாசிக்க வாசிக்கப் பலவிதங்களில் எழுத உதவும்.  இதை சி சு செல்லப்பா புரிந்து வைத்திருந்தார்.

 

            மேலே குறிப்பிடப்பட்ட லாங்ஸ்டன் ஹியூஸ் கவிதையைப் பார்ப்போம்.  தந்தை வெள்ளையனுக்கும் தாய் கறுப்பிக்கும் பிறந்திருக்கும் பையன் வழியாக இந்தக் கவிதை சொல்லப்பட்டிருக்கிறது.  பையனுக்குச் சந்தேகம் வந்துவிடுகிறது. அவன் சாகப் போவது எங்கே?  அவன் கருப்புமில்லை வெளுப்புமில்லை. அவன் தந்தை ஒரு வெள்ளையன் என்பதால் அவன் அழகிய பங்களாவில் இறந்து போகிறான். அவன் தாய் செத்தது ஒரு குடிசையில்.  அவன் வெள்ளைத் தந்தையைச் சபித்தால் என் சாபம் எனக்கே திரும்பும் என்று கவிகுரலோன் கூறுகிறான்.

 

            லாங்ஸ்டன் ஹியூஸ் ஒரு நீக்ரோ கவிஞர்.  இன்னும் அதிகமாக மொழிபெயர்ப்புக் கவிதைகளை எடுத்து ஆராய வேண்டும் என்று தோன்றுகிறது.

 

            'பிரமிள் படைப்புகள்என்ற புத்தகத்தில் கவிதைகள் என்ற தலைப்பில் அவருடைய கவிதைகள்மொழிபெயர்ப்புக் கவிதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.  அதில் எஸ்ரா பவுண்ட் கவிதைகளை மொழி பெயர்த்திருக்கிறார் பிரமிள்.  அதில் ஒரு கவிதை. 

           

 

சுருட்டுக்கடை

 

 

ஆண்டவனே! சுக்கிரபகவானே! 

நெடர்களைப் போஷிக்கும் புதனே! 

கெஞ்சிக் கேட்கிறேன்,

காலாகாலத்தில் 

எனக்கொரு

நட்டுக்கடை வைத்துக்கொடுங்கள் சாமி!

 

விதவிதமாகப் பதனிட்டு 

கண்ணாடி பீரோவினுள் 

அழகான பெட்டிகளில் 

அடுக்கப்பட்ட 

வெவ்வேறு வெட்பதட்பங்களின் 

சுருட்டுக்கள். 

 

கூடவேஎடைபோட 

எண்ணெய்ப் பிசுக்கு 

ரொம்பவும் இல்லாத ஒரு தராசு. 

 

இன்னும் ஒன்று - 

கலைந்த தலைமயிரைச் செப்பனிட்டு

சிறுவிஷமச் சொற்கள் பரிமாற 

அவ்வப்போது சில 

வேசிகளும் வரவேண்டும். 

 

ஆண்டவனே! சுக்கிரபகவானே! 

திருடர்களைப் போஷிக்கும் புதனே! 

எனக்கு ஒரு சுருட்டுக்கடை வேண்டும் சாமி! 

 

இல்லையானால் வேறு ஏதும் ஒரு தொழில் - 

நிரந்தரமும் மூளை தேவைப்படுகிற 

இந்த எழுத்துத் தொழில் தவிர.  

 

 

            இந்தக் கவிதையைப் படிக்கும்போது சிரிப்பு தாங்க முடியவில்லை.  கவிதையில் திருடர்களைப் போஷிக்கும் புதனே என்கிறார்.  கடவுளிடம் என்ன வேண்டிக்கொள்கிறார் தெரியுமாசுருட்டுக் கடை வைத்துக்கொடுக்க அருள் புரிய வேண்டும் என்கிறார்.

 

      ஒரு கவிதையை எப்படியெல்லாம் கற்பனை செய்யலாம்  என்பதற்கு இது முன்மாதிரி.  எஸ்ரா பவுண்ட் என்ற கவிஞர் இதுமாதிரியெல்லாம் எழுதி உள்ளார்.

 

 கடைசியில் முடிக்கும்போது திருடர்களைப் போஷிக்கும் புதனே என்கிறார்.  ஏன் இப்படியெல்லாம் வேண்டிக்கொள்கிறார் என்றால் மூளை தேவைப்படுகிற எழுத்துத் தொழில் தவிர இதை அளிக்கச் சொல்கிறார்.

            இப்படி சிறுபத்திரிகைகளில் வரும் மொழிப்பெயர்ப்புக் கவிதைகளை இன்னும் பின்னால் ஆராய்ந்து பார்ப்போம்.


(08.12.2020 தேதியிட்ட திண்ணை இணைய வார பத்திரிகையில் பிரசுரமான கட்டுரை)





 

Comments