Skip to main content

நீங்களும் படிக்கலாம் - 44



அழகியசிங்கர் 


முகநூல் மூலம் வெளிவந்த புத்தகங்கள்...



டாக்டர் ஜெ பாஸ்கரின் 'அது ஒரு கனாக் காலம்,' என்ற புத்தகத்தை முழுவதும் படித்துவிட்டேன்.  படித்துக் கொண்டிருக்கும்போது  இது சம்பந்தமான வேறு சில புத்தகங்களையும் படிக்க வேண்டுமென்ற எண்ணம் எனக்குத் தோன்றியது.  கடந்த சில ஆண்டுகளாக எனக்கு எழுத்தாள நண்பர்களின் பல புத்தகங்கள் படிக்கக் கிடைக்கின்றன.  ஆனால் என்னுடைய நல்ல பழக்கம் அந்தப் புத்தகங்களை உடனே படிப்பதில்லை.   அது தவறு என்று எனக்குத் தோன்றுகிறது.  ஏன்? உண்மையில் இந்தக் கேள்வியை பாஸ்கரன் புத்தகம்தான்  என்னைக் கேட்டது.
இந்தப் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டதும் சில மாதங்களுக்குமுன் 'யானை பார்த்த சிறுவன்,' என்ற புத்தகத்தைப் படிக்கக் கொடுத்த சுந்தரபுத்தன் புத்தகம் ஞாபகத்திற்கு வந்தது.   மேலும் மாதவ பூவராக மூர்த்தியின், 'இடம், பொருள், மனிதர்கள்,' என்ற புத்தகம் ஒன்றையும் இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.  ஏன் என்னுடைய புத்தகமான  'திறந்த புத்தகத்தை'ப் பற்றியும் சொல்ல விரும்புகிறேன்.
டாக்டரின் புத்தகத்துடன் ஏன் இந்த மூன்று புத்தகங்களையும் தொடர்புகொள்ள விரும்புகிறேன் என்பதற்குக் காரணம் இருக்கிறது. மூன்று புத்தகங்களும் முகநூலிற்குக் கடமைப்பட்டிருக்கின்றன.  டாக்டர் புத்தகமான அது ஒரு கனாக் காலம் தொடராக லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகையில் வெளிவந்திருந்தாலும், அவற்றில் வெளியான சில கட்டுரைகள் முகநூலில் வராமல் இல்லை.   முகநூலில் ஆர்வமுள்ளவர் டாக்டர், சுந்தரபுத்தன், மாதவ பூவராக மூர்த்தி, ஏன் நான் கூட.
சரி இந்த நான்குப் புத்தகங்களுக்கும் உள்ள பொதுவான தன்மை என்ன?  எல்லாம் தன்னைப் பற்றிய வரலாறு.  இந்த வரலாறு தினம் தினம் முகநூலில் வெளியிடப்படுகிற வரலாறு.  டாக்டர் இதுவரை இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் கொண்டு வந்திருக்கிறார். ஒன்று அப்பாவின் டைப்ரைட்டர்.  இன்னொன்று   'அது ஒரு கனாக் காலம் '.
இந்த நான்குப் புத்தகங்களும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக வெளிப்படுகின்றன.  
இந்த நான்குப் புத்தகங்களிலும் ஒரு ஒற்றுமை.  தன்னைச் சொல்வதுதான் அது.    தன் மூலம் பிறரைப் பற்றி சொல்வது குறைவாக இருக்கிறது.  
'அது ஒரு கனாக்காலம்' புத்தகத்தில் அவர் வாழ்ந்த கடந்த கால வாழ்க்கை இப்போது காணாமல் போய்விட்டதை எண்ணி துக்கப் படுவதுபோல் இருக்கிறது.
கடந்தகால வாழ்க்கையைப் பற்றி சொல்வதைத் துல்லியமாக விவரிக்கிறார்.  இந்த விவரணை எனக்கு சந்று ஆச்சரியமாக இருக்கிறது.  அவர் இப்போது பார்க்கும் அகஸ்தியர் கோயிலையும் முன்பு பார்த்த அகஸ்தியர் கோயிலையும் நேரில் பார்க்கிற உணர்வோடு விவரிக்கிறார்.   அம்மாவைப் பற்றி, தாத்தாவைப் பற்றி எல்லாம் ஒரு புகைப்படக் கலைஞர் போல் விவரிக்கிறார்.  
கடந்தகாலத்தை மனதில் பதிய வைத்துக்கொள்வதை நான் முக்கியமான ஒன்றாக நினைக்கிறேன்.  பலருக்குக் கடந்தகாலம் மறந்து விடும். ஏன் நானே ஒரு உதாரணம்.  எனக்குக் கடந்தகாலம் மறந்து போய்க்கொண்டே இருக்கும்.  ஒரு புத்தகம் பத்தாண்டுகளுக்கு முன் படித்திருந்தால் அது மறந்து போயிருக்கும்.  அதே போல் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களும்.    மானசரோவர் என்ற அசோகமித்திரன் நாவலை மூன்றாவது முறையாக இப்போது  படித்து மனதில் ஆழமாகப் பதித்து வைத்திருக்கிறேன்.   இதோ கொஞ்சம் கொஞ்சமாக மறக்க ஆரம்பிக்கும்.  
üகார்லஸ் காஸ்டினேடாýவின் 'ஆக்டிவ் சைட் ஆப் இன்பினிடி' என்ற புத்தகம்.   அந்தப் புத்தகத்தில் காஸ்டினேடாவைப் பார்த்து டான் ஜ÷வான் என்பவர் நடத்தும் உரையாடலில்,  பழைய முக்கியமான நிகழ்ச்சிகளை ஞாபகப்படுத்தி நம் மூளையில் சட்டம் போட்டுப் பாதுகாத்து வைக்கச் சொல்கிறார்.   நாம் வாழ்க்கையில் நாம் எத்தனையோவற்றை கடந்து வந்திருப்போம். அவற்றையெல்லாம் ஞாபக அடுக்குகளாக சட்டம் போட்டு பாதுகாத்து வைக்க வேண்டும்.  வேண்டும்போது எடுத்துப் பார்க்க வேண்டும்.   அதில் தென்படும் தவறுகளைத் திருத்திக் கொள்ளவேண்டும்.  இதைத்தான் பாஸ்கரன் புத்தகத்தில் நான் பார்ப்பதாகத் தோன்றுகிறது.
முகநூலில் எழுதும் யாவருமே கடந்த கால நிகழ்ச்சிகளைத்தான் எழுதுகிறோம்   ஆனால் எப்போதோ எந்தக் காலத்திலோ நடந்த நிகழ்ச்சிகளை எழுதுவதில்லை.  
என்னுடைய திறந்த புத்தகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியை அல்லது ஒரு வாரம் அல்லது ஒரு வருடம் முன் நடந்த நிகழ்ச்சியைத்தான் எழுதகிறேன்.  20 ஆண்டுகளுக்கு முன் நான் பழகிய எழுத்தாளரைப் பற்றி எழுதுவதாக இருந்தால், என்ன அவரிடம் முக்கியமாகப் பேசினேன் என்பது ஞாபகத்தில் எனக்கு இருக்காது.   அவரைப் பற்றிய நிகழ்ச்சியை மட்டும் எழுதி இருப்பேன்.  ஆனால் டாக்டர் அவருடைய புத்தகத்தில் எல்லா நினைவுகளையும் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு,   அசாத்தியமாக  எழுதி இருக்கிறார்.
முகநூலில் எழுதுவது என்பது நாமே நமக்கு ஆசிரியராக இருந்து செயல்பட வேண்டிய ஒன்று.  சாதாரண நிகழ்ச்சியிலிருந்து அசாதாரண நிகழ்ச்சி வரை எதை வேண்டுமானாலும் முகநூலில் எழுதலாம்.  முக்கியமில்லாத சாதாரண நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு அதிகம் கிடைக்கிறது என்பதற்காக முகநூலில் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது அவசியமில்லை.   முகநூலில் எழுதும் யாராக இருந்தாலும் இதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும்.  
டாக்டரின் இந்தப் புத்தகத்தில் ஒளிவு மறைவு இல்லாத தன்மை வெளிப்படுகிறது.  'சரணம் ஐயப்பா' என்ற தலைப்பில் எப்படி ஐயப்பன் மீது பக்தி ஏற்பட்டது என்று எழுதி இருக்கிறார்.  என்னுடைய திறந்த புத்தகத்தில் நான் எந்த சாமியை வணங்குவேன் என்று வெளிப்படையாக எழுதவில்லை. ஆனால் பாஸ்கரனுக்கு அந்தத் துணிச்சல் இருக்கிறது. 
சிவாஜியை சந்தித்த நிகழ்ச்சியைப் பற்றி எழுதியிருக்கிறார்.  லண்டன் அனுபவத்தைப் பற்றியும்.   சிதம்பரம், சென்னை என்று அந்தந்த ஊர்களை விவரிக்கிறார்.  எல்லா எழுத்துக்களிலும் ஒருவித நெகிழ்ச்சித் தன்மை.  இது இயல்பாகவே அவரிடமிருந்து வெளிப்படுகிறது.
அவர் அம்மாவை மனதில் ஆழமாகப் பதித்திருக்கிறார். இப்படி மனதில் பட்டதை எழுதுவதற்கு இந்த முகநூல் ஒரு வரப்பிரசாதம். 

அது ஒரு கனாக் காலம் - கட்டுரைகள் - டாக்டர் ஜெ பாஸ்கரன் - மொத்தப் பக்கங்கள் : 130 - விலை : ரூ. 100 - மணிமேகலைப் பிரசுரம்,  தபால் பெட்டி எண் : 1447, 7 தணிகாசலம் சாலை, தியாகராயநகர், சென்னை 600 017 
 

Comments