Skip to main content

பிரமிளும் பிரமிளும்


அழகியசிங்கர்





ஞாயிற்றுக்கிழமை நடந்த பிரமிள் படைப்புகள் நூல்கள் வெளியீட்டு விழாவில் பிரமிளைப் பற்றி ஒரு ஐந்து நிமிடங்களுக்கும் குறைவாகவே பேசினேன்.
அதிகப் பேர்கள் பேசப்போவதால் எல்லோரையும் ஐந்து நிமிடங்கள் பேசும்படி கூறினார்.  விழா ஆரம்பிக்கும் முன்னதாக பேசுபவர்கள் சிலரைக் கூப்பிட்டு பிரமிள் புத்தகம் ஒவ்வொன்றாகக் கொடுத்தார்.  மொத்தம் ஆறு தொகுதிகளாக பிரமிள் படைப்புகள் முழுவதும் கொண்டு வந்துள்ளார் கால சுப்பிரமணியம்.   நீதியரசர் மகாதேவன் கடைசி வரை கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பு செய்தார்.  
இப்போது 21 வருடங்களுக்கு முன் உள்ள கதைக்குப் போவோம்.
அப்போது நான் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தேன்.  பிரமிள் என்னைப் பார்க்க வருவார்.  பொதுவாக நாங்கள் சந்திக்கும் இடங்கள்.  மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்டராமன் கோயில், ஜே கிருஷ்ணமூர்த்தியின் பவுண்டேஷன், என்னுடைய அலுவலகக் கான்டின்.  
பிரமிள் சரியாக மதியம் நேரம் வருவார்.  நேராக கான்டீன் போவோம்.  என் அலுவலக கான்டீன் உணவை விரும்பிச் சாப்பிடுவார். ஒரு முறை என் கவிதைப் புத்தகம் ஒன்றை வாங்கிக்கொள்ள முடியுமா என்று கேட்டார்.  நிச்சயமாக என்றேன்.  üமேல் நோக்கிய பயணம்ý என்பது கவிதைத் தொகுதியின் பெயர்.  
üüஇந்தப் புத்தகம் விற்றப் பணத்தை இதை வெளியீட்டாளருக்குத் தர வேண்டாம்.  எனக்குத்தான் இது,ýý என்றார்
திரும்பவும் ஒரு வாரம் கழித்து பிரமிள் என்னைப் பார்க்க அலுவலகத்திற்கு  மதியம் நேரம் வர ஆரம்பித்தார்.  உண்மையில் அவர் வரவை நானும் எதிர்பார்த்திருந்தேன் என்று சொல்வதுகூட சரியாக இருக்கும்.  ஒருவரை அடிக்கடிப் பார்க்கும்போது நமக்கும் அவர்களைப் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்படாமலிருக்காது.
பிரமிள் இந்த முறை கேட்டார் : "என் கவிதைகளைப் படித்தீரா?"
"இல்லை.  ஆனால் படித்து விடுகிறேன்,"  என்றேன்.
"அது என்ன சின்ன புத்தகம்தானே கடகடவென்று படித்து விடலாமே," என்றார்.
"எப்படியும் படித்துவிடுகிறேன்," என்றேன்.  அவர் போனவுடன் முதலில் அவர் புத்தகத்தைப் படித்து விடவேண்டுமென்று நினைத்தேன்.  ஆனால் அவ்வாறு செய்யவில்லை.
அடுத்த வாரம் ஒரு நாள் வந்தார்.  நான் திங்கட் கிழமை வருவார் என்று நினைத்தால் திங்கட் கிழமை வர மாட்டார்.  செவ்வாய் அல்லது புதன் கிழமை வருவார்.
"என்ன படித்தீரா?" என்று கேட்டார்.  "இல்லை.  கவிதைப் புத்தகத்தை எங்கோ வைத்துவிட்டேன்," என்றேன்.
"வேண்டாம்.  கண்டு பிடித்து விடுவேன்.."
"உங்கள் அலுவலக கான்டீன் சாப்பாடு நன்றாக உள்ளது,"
"நீங்கள் அடிக்கடி வரவேண்டும்,"  என்றேன்.
பிரமிள் சிலரைத்தான் பார்ப்பார்.  சிலரிடம்தான் உதவிக் கேட்பார்.  அவரிடம் பணம் தங்காது.  எதையும் சேமித்து வைக்க மாட்டார்.  அவர் அந்த அளவு ரசித்து வாழ்ந்தார்.  üüநான் இதுமாதிரிதான் இருக்க முடியும்.   நானும் ஒரு பிச்சைக்காரன்,ýý என்று ஒரு முறை சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
பிரமிள் அடுத்த முறை வந்தபோது நான் அவர் கவிதைத் தொகுதியைப் படித்து விட்டேன்.  üமேல் நோக்கிய பயணம் என்ற காவியத்தில் முதலாவதாக உள்ள காவிய முகம் எனக்குப் புரிந்தது.  ஆனால் இரண்டாவது பகுதியிலிருந்து என் கவனம் எங்கோ போய்விட்டது.  யாரை நோக்கி இந்தக் கவிதை எழுதப் பட்டிருக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
அந்தத் தொகுதியில் வண்ணத்துப் பூச்சியும் கடலும் என்ற கவிதை எனக்குப் பிடித்திருந்தது.  
இதை அவரிடம் சொன்னேன்.
பிரமிள் அதைக் கேட்டு, "டேவிட்டுக்கு அது புரியலைன்னு  சொல்றான்...உமக்கு எப்படி புரிந்தது," என்றார்.
டேவிட் இன்னொரு வங்கியில் பணிபுரிகிறவர்.  அவரும் அடிக்கடி பிரமிளுடன் என்னைப் பார்க்க வருவார்.  உண்மையில் கால சுப்பிரமணியமைவிட ரொம்ப நெருக்கம் டேவிட்டிடம்.  டேவிட் சின்ன வயதிலேயே இறந்து விட்டார்.
பிரமிள் என்னிடம், "என்ன புரிந்து கொண்டீர் அந்தக் கவிதையில்," என்று கேட்கவில்லை.  
ஞாயிற்றுக் கிழமை கூட்டத்தில் பேசும்போது சுப்பிரமணியம் அவர்களிடம் ஒரு விண்ணபப்பத்தைக் கோரினேன்.  அவருடைய கவிதைகள் எல்லாவற்றுக்கும் உரை எழுதுங்கள் என்று.  என்ன காரணத்திற்காக ஏன் அப்படி எழுதினார் என்றுதான்,  அதற்கு தகுதியானவர்  சுப்பிரமணியம்தான்.
கால சுப்பிரமணியம் சொண்டு வந்த ஆறு தொகுப்புகளையும் ரூ.3000 கொடுத்து வாங்கிக்கொண்டேன்.  அற்புதமாக அச்சடித்துள்ளார்.  ஒவ்வொரு தொகுதியாக எடுத்து வைத்துக்கொண்டு படித்து விடலாம்.  ஆனால் அவ்வளவு சுலபத்தில் முடிக்க முடியுமா என்பது தெரியாது. 
'என் புத்தகங்களை எல்லாம் எப்போதும் படிக்கப் போகிறீர்கள்?' என்று கேட்க பிரமிள் இப்போது இல்லை.  
வண்ணத்துப்பூச்சியும் கடலும் என்ற கவிதையை இங்கே அளிக்கிறேன்.
சமுத்திரக் கரையின்
பூந்தோட்டத்து மலர்களிலே
தேன்குடிக்க அலைந்தது ஒரு
வண்ணத்துப் பூச்சி.
வேளை சரிய
சிறகின் திசைமீறி
காற்றும் புரண்டோட
கரையோர மலர்களை நீத்து
                கடல்நோக்கிப் பறந்து
நாளிரவு பாராமல்
ஓயாது மலர்கின்ற
எல்லையற்ற பூ ஒன்றில்
ஓய்ந்து அமர்ந்தது.
முதல் கணம்
உவர்த்த சமுத்திரம்
தேனாய் இனிக்கிறது.

Comments