Skip to main content

சி சு செல்லப்பாவின் இரண்டாவது நாவல்.....


சி சு செல்லப்பாவின் இரண்டாவது நாவல்.....


அழகியசிங்கர்




இந்தக் கட்டுரையைப் படிப்பவர்கள் எல்லோருக்கும் தோன்றும்  எனக்குப் புத்தி எதாவது குழம்பிப் போயிருப்பதாக. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.   சி சு செல்லப்பா ஒரே ஒரு நாவல்தான் எழுதியிருக்கிறார்.  எப்படி இரண்டாவது நாவல் எழுதியிருப்பதாகச் சொல்ல முடியும்.  அவர் எழுதிய ஒரே நாவல் சுதந்திர தாகம் என்றுதான்  நீங்கள் முணுமுணுப்பது என் காதில் விழாமல் இல்லை.
சுதந்திரதாகம் என்ற நாவலை எழுதிய சி சு செல்லப்பா அவர் முயற்சியில் புத்தகமாகவும் கொண்டு வந்து விட்டார்.  80 வயதில் அவர் செய்த சாதனையாகத்தான் இதை  நான் நினைக்கிறேன்.  தானே நாவல் எழுதி தானே புத்தகமாகப் பதிப்பித்த துணிச்சல் சி சு செல்லப்பாவைத் தவிர யாருக்கும் வராது.   அதாவது அவருடைய 80வது வயதில்.  தமிழில் எந்த எழுத்தாளராவது  இது மாதிரி துணிச்சலாக இருந்திருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியவில்லை.   ஏன் இந்தியா அளவில் எந்த எழுத்தாளராவது உண்டா?  உங்களுக்கு விபரம் தெரிந்தால் குறிப்பிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.   சி சு செ முயற்சியில் எத்தனையோ இடர்பாடுகளுக்கிடையே சுதந்திர தாகம் வெளிவந்து விட்டது.  அது கொடுத்த தெம்பு இன்னொரு புத்தகத்தையும் சி சு செ கொண்டு வந்து விட்டார்.  என்ன துணிச்சல் பாருங்கள் அவருக்கு.. 500 பிரதிகள் அடித்து விட்டார்.  அந்தப் புத்தகம் ஒரு நாவல் என்பதுதான்  என் கணிப்பு.  அதை நீங்கள் மறுப்பீர்கள்.  உண்மைதான் நீங்கள் மறுப்பதற்கு எல்லாக் காரணங்களும் உங்களுக்கு இருக்கின்றன.
ஆனால் அந்தப் புத்தகத்தை முதலில்  நானும் ஒரு கட்டுரைத் தொகுப்பாகத்தான் பார்த்தேன்.   கட்டுரைத் தொகுப்பிற்கான எல்லாத் தகுதிகளும் அப் புத்தகத்தில் இருக்கிறது.  ஆனால் அது கட்டுரைத் தொகுப்பு இல்லை.  இதை ஒரு நாவலாகப் பாருங்கள.  சரி என்ன புத்தகம் அது.  புத்தகம் பெயரைக் குறிப்பிடாமல் நாவல் என்று குறிப்பிடுகிறீர்களே என்று நீங்கள் முணுமுணுப்பது காதில் விழுகிறது.
ராமையாவின் சிறுகதை பாணிதான் அந்த நாவலின் பெயர்.  உங்களுக்கு என் மீது கோபம் வருவதற்கு எல்லாவிதமான காரணமும் இருக்கிறது.  நானும் அப்படித்தான் நினைத்தேன்.  இது ஒரு கட்டுரைத் தொகுப்பு என்று.  சி சு செ, ராமையாவின் சிறுகதைளை அலசி உள்ளார் என்றுதான் தோன்றியது.  அப்படியும் இப்படியும் புரட்டிக் கொண்டிருந்தேன்.  திடீரென்று எனக்குத் தோன்றியது.  இது ஒரு நாவல் என்று.  தமிழில் வித்தியாசமாக எழுதப்பட்ட நாவல்.  பல உண்மைச் சம்பவங்களைக் கொண்ட நாவல் என்று.
மேலும் இப் புத்தகத்தைக் கட்டுரைத் தொகுப்பாக அதுவும் ராமையாவின் சிறுகதைகளை அலசுகிற புத்தகமாக நீங்கள் நினைத்தால் அதுவும் உண்மைதான்.  ஆனால் சி சு செ ராமையாவின் சிறுகதைகளை அணுகியிருக்கிறார் என்றாலும் விமர்சனப் பூர்வமாக அணுகியிருக்கிறாரா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  முன் கதைச் சுருக்கமாக ராமையாவின் 287 கதைகளைக் கொடுத்திருக்கிறார்.  இந்தப் புத்தகத்தின் பின்னால் ஒரு லிஸ்ட் கொடுத்திருக்கிறார்.  அதில் ராமையா 304 கதைகள் எழுதியிருப்பதாகக் கூறி உள்ளார்.  அந்த லிஸ்டில் எந்தந்தக் கதைகள் எந்தந்தப் பத்திரிகைகளில் வெளிவந்தன என்பதும், எந்த ஆண்டு வெளிவந்தது என்ற விபரமும் குறிப்பிடப்பட்டுள்ளது.  ராமையாவின் சிறுகதைகளைப் பற்றி கூறும்போது கதையின் தலைப்பைக் கொடுத்து சுருங்கிய வடிவத்தில் கதைகளைக் கூறி உள்ளார்.  அந்தக் காலத்தில் ராமையாவுடன் கதை சம்பந்தமாக நடத்திய உரையாடலையும் குறிப்பிடுகிறார்.  ராமையாவின் மீது சி சு செல்லப்பாவிற்கு இருக்கும் அன்பு போல் வேற எந்த எழுத்தாளருக்கும் எந்த எழுத்தாளர் மீதும் அன்பு இருக்குமா என்பது தெரியவில்லை.
ராமையாவின் மீது அளாதியான மதிப்பு சி சு செவுக்கு.  ஏன் பக்தி என்று கூட சொல்லலாம்?
ராமையாவின பேட்டியிலிருந்து ஆரம்பமாகிறது இந்தப் புத்தகம்.  ராமையாவின் சிறுகதைகளைப் பற்றி சொல்லிக்கொண்டு வரும்போது பல உபரி தகவல்களையும் சி சு செ கொடுக்கிறார்.  ராமையாவின் ஒரு கதையைப் படித்துவிட்டு இது தழுவல் கதை என்பதைக் கண்டு பிடித்து விடுகிறார்.  ராமையாவிடம் இது குறித்துத் தெரிவிக்கிறார்.  ராமையாவும் ஒப்புக்கொள்கிறார்.  புதுமைப்பித்தனும் இதுமாதிரி தழுவல் கதைகளை எழுதியிருப்பதாக் கூறுகிறார் சி சு செ.  புதுமைப் பித்தனும் இதை மறுக்கவில்லை என்கிறார் சி சு செ.
இன்னொரு தகவல் க நா சு நடத்திய சந்திரோதயம் என்ற பத்திரிகை நடத்துவதற்கு சி சு செல்லப்பாவும் க நா சுவுக்கு உதவியதாகக் கூறுகிறார்.  அப் பத்திரிகையை இலக்கியத் தரமாக மாற்ற.
ராமையாவின் சில கதைகளை சாதாரண கதைகள் என்று குறிப்பிடும் சி சு செ இப் புத்தகம் இறுதியில் இப்படி கூறுகிறார் பாரதி மகாகவி என்றால் ராமையா மகா கதைஞன் என்று. 1933ஆம் ஆண்டிலிருந்து கதை எழுத ஆரம்பித்த ராமையா 1971ஆம் ஆண்டு வரை கதைகள் எழுதியிருக்கிறார்.  இப் புத்தகம் படித்தவுடன் ராமையாவின் எல்லாக் கதைகளையும் படிக்க வேண்டுமென்கிற ஆர்வம் ஏற்படுகிறது.  அதற்கான வழி இருக்கிறதா என்பது தெரியவில்லை.  சினிமாவிற்கு கதைகள் தேடுபவர்கள் இப் புத்தகத்தைப் படித்தால் ஏகப்பட்ட கதைகள் கிடைக்க வாய்ப்பு உண்டு.  சினிமா துணை இயக்குநர்கள் இப் புத்தகம் வாங்கத் தயரா?
மேலும் இப் புத்தகத்தை நாவலாகத்தான் நான் கருதுகிறேன்.  368 பக்கங்கள் கொண்ட இந் நாவலை எந்தப் பக்கத்திலிருந்தும் படிக்கலாம்.  இப் புத்தகம் தொடர்ந்து படிக்க வேண்டுமென்ற வாசிப்பு அனுபவத்தைக் கட்டுடைக்கிறது.  இன்று ராமையாவும் இல்லை சி சு செல்லப்பாவும் இல்லை.  சி சு செ ராமையாவைப் பற்றி எழுதிய இப் புத்தகம்தான் உள்ளது.  1995ஆம் ஆண்டு வெளிவந்த இப் புத்தகத்தின் விலை ரூ. 125 தான்.  500 பிரதிகள் என்பதால் ஏகப்பட்ட பிரதிகள் விற்காமல் இருக்கின்றன.  சி சு செ புதல்வர் என்னிடம் விற்கக் கொடுத்திருக்கிறார்.  படு சுவாரசியமான இப் புத்தகத்தை ரூ.20க்குத் தரத்தயாராக உள்ளேன்.  
அவசியம் இப் புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும்.ரூ.20 ஐ என் கணக்கில் செலுத்தினால் இப் புத்தகத்தை உடனே அனுப்பி வைப்பேன்.

Comments