Skip to main content

கதைகளைப் படித்தபடியே வந்தேன்...

கதைகளைப் படித்தபடியே வந்தேன்...

அழகியசிங்கர்



மயிலாடுதுறையிலிருந்து நான் திரும்பி வரும்போது இரண்டு பத்திரிகைகளை வாங்கிக்கொண்டு வந்தேன்.  ஒன்று காமதேனு என்ற பத்திரிகை.  முதல் இதழ்.  இரண்டாவது ஆனந்தவிகடன்.  இது தவிர விருட்சம் இதழுக்கு அனுப்பிய கதைகள்.  இவையெல்லாவற்றையும் பகல் வண்டியில் படித்துக்கொண்டு வருவது என்று தீர்மானித்தேன்.
ஆனந்தவிகடனுக்கும் காமதேனுவிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.  எல்லாம் சினிமாவில் நடிப்பவர்கள் புகைப்படங்கள்தான்.  உள்ளே வேறு விதமாகக் காட்சி அளிக்கிறது காமதேனு.  படிக்கும்போது எனக்கு வீக் என்ற ஆங்கிலப் பத்திரிகை ஞாபகம் வந்தது.  உள்ளே பெட்டி செய்திகளைப் போல் ஒரு முகம், சர்வதேசம், தேசம் என்று பல செய்திகளைக் கொட்டிக் கொடுக்கிறது காமதேனு.  நான் இதை எழுதும் இந்தத் தருணத்தில் 4 இதழ்கள் வந்துவிட்டன. முதலில் நான் கதைகளைத் தேடித்தான் இந்தப் பத்திரிகைக்குள் நுழைந்தேன்.  என் கண்ணிற்கு எந்தக் கதையும் தென்படவில்லை.  ஆனால் புனை என்ற தலைப்பின் கீழ் நர்சிம் அவர்கள் நதி என்ற கதை எழுதியிருக்கிறார்.  நான் இப்போதுதான் பார்த்தேன்.  அப்போது கவனிக்கவில்லை.  கிட்டத்தட்ட 106 பக்கங்கள் கொண்ட பத்திரிகையில் ஒரே ஒரு கதைதான்.  அதுவும் இரண்டரைப் பக்கக் கதை.  
அடுத்தது ஆனந்தவிகடன் 14.03.2018 இதழ் தனுஷ் படம் போட்டப் பத்திரிகை.  அன்பும் அறனும் என்ற தலைப்பில் சரவணன் சந்திரன் தொடர். அதிஷா எழுதும் டெக்னோ தொடர்.  மெனு கார்டு என்ற தலைப்பில் வெ நீலகண்டன் தொடர். தெய்வந்தான் ஆகாதெனினும் என்ற தலைப்பில் தமிழ்ப்பிரபாவின் தொடர்.  பின் சொக்கலிங்கம் பழனியப்பன் தொடர்.  ஓனர் என்ற தலைப்பில் கு ஜெயச்சந்திர ஹாஷ்மியின் சிறுகதை.  இதைத்தான் நான் முதலில் முழுக்கப் படித்தேன்.  வித்தியாசமான கதையாக இருந்தது.  ஓனர் என்ற தலைப்பில் ஆனந்தவிகடனுக்குக் கதை எழுத விரும்புகிறவன் பார்வையில் அவன் வாழ்க்கையைப் பற்றிய கதையை எழுதுவதாக எழுதிக்கொண்டு போகிற கதை.  இந்த வித்தியாசமான கதையைப் படித்தத் திருப்தி எனக்கு இருந்தது.  பின் இந்தப் பத்திரிகைகளை மூடி வைத்துவிட்டு விருட்சம் 105வது இதழுக்கு வந்த கதைகளைப் படிக்கத் தொடங்கினேன்.  விருட்சம் பத்திரிகை பெரும்பாலும் கதைகளும் கவிதைகளும் நிரம்பிய பத்திரிகை.  மற்ற அரட்டைகளுக்கு இடமில்லாத பத்திரிகை.  சினிமா அரசியல் பற்றிய செய்திகள் இல்லாத பத்திரிகை.  எனக்கு வந்த கதைகளைக் கொண்டு வருவதும், கவிதைகளைக் கொண்டுவருவதுமான பத்திரிகை.  நல்ல தாளில் அச்சடிக்கப்படாத நியூஸ் பிரிண்ட்டுக்கு மேலான ஒரு தாளில் அச்சடிக்கிற பத்திரிகை.  80 பக்கங்களுடன் முடித்துவிடுவேன்.  அதை முடிக்க நான் படுகிறபாடுதான் இந்தப் பத்திரிகை.
முதலில் பிரேம பிரபா என்பவர் எழுதிய புறவழிச் சாலையும் மாயக்கண்ணாடியும் என்ற கதை.  ரொம்ப வித்தியாசமாக எழுதப்பட்ட கதை.  கடவுளைப் பார்க்க விழைகிற ஒருவனின் கதை. இந்தக் கதையை எடுத்துக்கொண்டு போகும் கற்பனை அபாரமாக இருக்கிறது.  இக் கதையை நிச்சயமாக விருட்சம் இதழில் பிரசுரம் செய்யத் தீர்மானித்துள்ளேன்.  இன்னும் இதை எழுதிய பிரேம் குமாருக்கு தகவல் அனுப்பவில்லை.  ஒருவன் கடவுளைத் தேடிக்கொண்டே போகிறான்.  ஆனால் இறுதியில் கடவுளை அவன் சந்தித்து விடுகிறான்.  இதுதான் இக் கதை.  மூன்று பக்கங்களில் எழுதப்பட்ட கதை. 
சீர்காழியில் வசிக்கும் என் நண்பர் தாஜ் எழுதிய கதை üபெண்கள்.ý   உரையாடல் மூலம் கதையை ஆரம்பிக்கிறார்.  ஒரு எழுத்தாளனைப் பேட்டி எடுக்க ஒரு பெண் வருகிறாள்.  அவளுக்கும் என் வி சார் என்பவருக்கு நடக்கும் உரையாடலை மையமாக வைத்து தாஜ் திறமையாக ஒரு சிறுகதையை எழுதி அனுப்பி உள்ளார்.  விருட்சத்தில் இந்தக் கதையையும் தேர்ந்தெடுக்க உள்ளேன்.  இன்னும் இந்த விஷயமாக தாஜ் அவர்களிடம் செய்தியைத் தெரிவிக்கவில்லை.
ரயில் பயணத்தில் நான் படித்தத் திருப்தியான கதையில் இதுவும் ஒன்று. 
உஷாதீபன் எழுதிய ஆற்றாமை என்ற கதை.  பையனுக்குப் பெண் பார்ப்பதைப் பற்றிய கதை.  கணவன் மனைவிக்குள் ஏற்படும் போராட்டம்.  அப்பாவிற்கும் பையனுக்கும் ஏற்படுகிற முரண்பாடு.  இந்தக் கதையை எளிதாகவும் வித்தியாசமாகவும் கொண்டு சென்று முடித்திருக்கிறார்.  பையனுக்குக் கஷ்டப்பட்ட ஏழைக் குடும்பத்துப் பெண்ணா பார்ப்போம் என்பதில் கதையை முடிக்கிறார்.  இந்தக் கதையையும் நான் விருட்சத்திற்காகத் தேர்ந்தெடுத்துள்ளேன். டோரியன் சீமாட்டி என்ற கதை.  இதையும் பிரேம பிரபா என்கிற பிரேம் குமார்தான் எழுதியிருக்கிறார்.  வித்தியாசமான கதை.  ரிஷி என்பவர் மாத்யு என்கிற மனநல மருத்துவரைப் பார்க்கச் செல்கிறான்.  அவன் விவரிக்கும் கனவுதான் கதை.  கனவில் தென்பட்ட கதை மாந்தார்கள் நிஜத்திலும் இருப்பதாக ஒரு மாயத் தோற்றத்தை உருக்குகிற கதைதான் இது. இந்தக் கதையும் விருட்சத்திற்கு தேர்ந்தெடுத்துள்ளேன்.  இவருடைய இரண்டு கதைகளில் எதாவது ஒரு கதையை இந்த இதழிலிலும் இன்னொரு கதையை அடுத்த இதழிலும் பிரசுரிக்க தீர்மானித்திருக்கிறேன்.  
ஏற்கனவே சில கதைகளைத் தேர்ந்தெடுத்து இதழ் தயாரித்துக்கொண்டிருக்கிறேன்.  இன்னும் சில கதைகளையும் கவிதைகளையும் சேர்த்தால் 80 பக்க அளவுள்ள 105வது இதழ் முடிந்துவிடும்.  ஏற்கனவே நான் தேர்ந்தெடுத்த கதைகளில், பா ராகவனின் ஆதிவராகம், ஸிந்துஜாவின் பிணை, சிறகு இரவியின் ஜிட்டு கிருஷ்ணமணி, பானுமதி எழுதிய நீதி என்ற கதை.  இவை எல7;லாவற்றையும் இதழில்  சேர்த்துவிட்டேன். இதைத் தவிர கவிதைகள், புத்தக விமர்சனங்கள் என்றெல்லாம் இந்த இதழ் 80 பக்கத்திற்கு மேல் போய்விடும்போல் தோன்றுகிறது.  80 பக்கம் மேல்போனால் ஆபத்து.  
விருட்சம் சந்தா அனுப்பவருக்கு அசோகமித்திரன் கையெழுத்தில் எழுதிய கட்டுரையைத் ஜெராக்ஸ் செய்து அனுப்ப உள்ளேன்.

Comments