அழகியசிங்கர்
இரண்டு மூன்று நாட்களுக்கு பங்களூர் போய்விட்டு வந்தோம். இலக்கிய நண்பர் வீட்டுத் திருமணத்திற்குத்தான். உண்மையில் இதைச் சாக்காக வைத்துக்கொண்டு பங்களூருக்கு சென்றோம். பெரும்பாலும் சென்னை நகரத்திலேயே பொழுதை ஓட்டிக்கொண்டிருக்கிறோம். ஆனால் எதாவது காரணம் கிடைத்தால் வேறு வேறு ஊர்களுக்குச் சென்று அந்த ஊர்களைப் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றுகிறது. இனி எளிதாக எதாவது காரணத்தைக் கண்டு பிடித்தாவது ஒரு ஊருக்குச் சென்று விட வேண்டும். சமீபத்தில் நான் மயிலாடுதுறைக்குப் போய் வந்தேன். அந்த ஊரின் பேரமைதி என் மனதிலிருந்து நீங்க வில்லை. ஆனால் பங்களூர் வேற விதமாக இருக்கிறது.
நாங்கள் பயணம் செய்த லால்பாக் வண்டி தாமதமாகக் கிளம்பி இரவு பத்து மணிக்கு ஸ்டேஷனுக்கு வந்தது. கே ஆர் புரம் என்ற இடம் என்று நினைக்கிறேன். என் மனைவியின் சகோதரியின் பையன் எங்களை காரில் ஊருக்கு ஒதுக்குப்புறமான கொறமாவ் என்ற இடத்திற்கு அழைத்துக்கொண்டு போனான். ஒரு தெருவில் காரை ஓட்டிக்கொண்டு போனபோது, பங்களூரில் உள்ள அத்தனை நாய்களும் அந்தத் தெருவில் கூடியிருப்பதுபோல் பட்டது. இரவு அங்கு தநங்கிருந்துவிட்டு அடுத்த நாள் மல்லேஸ்வரம் வந்து விட்டோம். என் உறவினர் உடல் நிலை சரியில்லாமல் பல மாதங்களாகப் படுத்தப் படுக்கையில் இருக்கிறார். அவர் சைகை மூலம் என்னுடன் பேசினார்.
பின் அங்கிருந்து கல்யாண மண்டபத்திற்கு வந்தோம். வீடு மாதிரி அந்தக் கல்யாண மண்டபம் இருந்தது. ரொம்ப எளிமையாகப் பிரமாதமான முறையில் கல்யாணம் நடந்தது. கல்யாணம் முடிந்துவுடன் நாங்கள் மல்லேஸ்வரம் திரும்பினோம். அங்கிருந்து நானும் பங்களூரில் உள்ள இலக்கிய நண்பர் ஒருவரும் மெட்ரோ ரயில் பிடித்து பாவண்ணன் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்தோம். அவர் உடல்நிலையை விஜாரித்தேன். பின் அங்கிருந்து வழக்கம்போல ப்ளாசம்ஸ் சென்றோம். நான் வாங்கிய முக்கியமான புத்தகம் ஐ பி ஸிங்கரின் ஷோஷா என்ற நாவல். ஆரம்பத்தில் நான் இந்தப் புத்தகத்தை அமெரரிக்கன் லைப்பரரியில் வாங்கிப் படித்திருக்கிறேன். புத்தகங்களை வாங்கிக்கொண்டு மெட்ரோவில் நான் மட்டும் நண்பர் வழிகாட்டக் கிளம்பி வந்தேன். நண்பர் வசிக்கும் இடம் வேற இடத்தில் தூரத்திலிருக்கிறது. இங்கு மெட்ரோ ரயிலில் கூட்டமான கூட்டம். சென்னையில் இதுமாதிரியான கூட்டத்தைப் பார்க்க முடியாது. பங்களூரில் நான் கண்ட நீளம் நீளமான கட்டடங்களைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது. பங்களூர் தெருவெல்லாம் மேடும் பள்ளுமுமாக இருந்தது. என்னால் மேட்டில் நடக்க சற்றுத் தடுமாற்றமாக இருந்தது. என் மனைவி அதற்குள் இரண்டு மூன்று முறைப் போன் செய்துவிட்டாள் மல்லேஸ்வரம் வருவதற்குள்.
அடுத்த நாள் நாங்கள் டபுள் டக்கரில் பயணம் செய்தோம். எனக்குப் பிடித்த கோலவடைகளை ருசித்துச் சாப்பிட்டேன். காரமாக இருந்தது. இந்த ரயில் பயணத்தில் நான் படித்தப் புத்தம் அ முத்துலிங்கம் அவர்கள் கதைகள். நற்றிணை வெளியிட்ட இரண்டு பாகங்களில் முதல் பாகத்தில் 200 பகங்கள் படித்து முடித்தேன்.
திரும்பவும் நான் சென்னை வந்தபிறகு மயிலாடுதுறையில் தென்பட்ட பேரமைதியும், பங்களுரில் தென்பட்ட பரபரப்பும் இல்லாமல் வேற மாதிரி எனக்கு சென்னைப் பட்டது. ஏப்ரல் மாதத்தில் ஒரு கல்யாணத்திற்கு மதுரை செல்ல உள்ளோம்.
Comments