Skip to main content

சனிக்கிழமை நடந்த இன்னொரு கூட்டம்

சனிக்கிழமை நடந்த இன்னொரு கூட்டம் 

அழகியசிங்கர்




இந்த மாதம் நான் வழக்கம்போல சனிக்கிழமை கூட்டம் நடத்தாமல் வெள்ளிக்கிழமை பொதுவான கூட்டம் ஒன்றை நடத்தினேன்.  த நா குமாரசாமியும் நானும் என்ற பெயரில் வ வே சு அவர்கள் பேசினார்கள். அதற்குக் காரணம் ஒன்று உள்ளது. என்னவென்றால் சனிக்கிழமை என் கதைகளுக்கான  கூட்டம் ஒன்றை நடத்தியதால், வெள்ளிக்கிழமை எப்போதும் நடத்தும் கூட்டத்தை நடத்தினேன்.    சில பேர்களை மட்டும் கூப்பிட்டு என் சிறுகதைக்கான கூட்டத்தை சனிக்கிழமை நடத்தினேன்.  பெரும்பாலும் பேசியவர்கள் அனைவரும் என் நண்பர்கள்.  இக் கூட்டத்திற்கு என் மனைவியும் பேத்தியும் கலந்து கொண்டார்கள்.  என் பழைய நண்பர்கள் வந்திருந்தார்கள்.    பேத்தி தமிழ் வாழ்த்துப் பாட கூட்டம் சிறப்பாக ஆரம்பமானது.
முதன் முதலாக என் கதையைப் பிரசுரம் செய்த என் சகோதரரிடம் என் புத்தகத்தை அளித்தேன்.  அக் கதை எழுதி பிரசுரமான ஆண்டு 1979ஆம் ஆண்டு.  அதிலிருந்து நான் தொடர்ந்து கதைகள் எழுதி வருகிறேன்.  2017ஆம் ஆண்டு வரை மொத்தம் 64 சிறுகதைகளும், 7 குறுநாவல்களும், சின்னஞ்சிறு கதைகளும், ஒரு நாடகமும் என் புத்தகத்தில் கொண்டு வந்துள்ளேன்.   664 பக்கங்கள் கொண்ட புத்தகம் இது. ரைட்டர்ஸ் கேப் என்ற இடத்தில் என் சிறுகதைகளுக்கான கூட்டத்தை ஏற்பாடு செய்தேன்.  
முதன்மை பேச்சாளராக சாருநிவேதிதாவைப் பேச அழைத்தேன்.  அதற்கு முக்கிய காரணம் ஒன்று உண்டு.  முதலில் ஆரம்பிக்கிற கூட்டம் கடைசியில் போகப் போக தொய்வு விழ வாய்ப்புண்டு.  சாரு நிவேதிதா முதலில் பேசுவது நல்லது என்று தோன்றியது.  என் கூட்டம் 3 மணி நேரத்திற்கு மேல் நடந்தது.  
என் கதைகளைப் பற்றி சாரு பேசியதைக் கேட்டு எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  காப்கா தன்மையை என் கதைகள் வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.  தினசரி வாழ்க்கையில் தென்படும் பல அபத்தங்களையும் என் கதைகள் வெளிப்படுத்துவதாக குறிப்புகள் எழுதி வைத்திருந்தார்.  இந்த அளவிற்கு யாரும் என் கதைகளைப் பற்றி பேசியது இல்லை. அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  ஆரம்பமே ஒரு நிறைவான கூட்டமாக மாறியதாக நினைத்தேன்.  எழுதுபவனே இப்படி ஒரு கூட்டத்தை ஏற்படுத்தி எல்லோரும் பேசும்படி செய்ய வேண்டி உள்ளது என்றும் சொன்னார்.  உண்மைதான் தமிழ் சூழல் இப்படித்தான் நடந்துகொண்டு இருக்கிறது.  
பல ஆண்டுகளாக (கிட்டத்தட்ட 40 ஆண்டுகள்) நான் கதைகள் எழுதினாலும் அவை குறித்த அபிப்பிராயத்தை யாரும் எப்போதும் வெளிப்படுத்தியதில்லை.    ஏன் என் கதைகளைப் படித்திருப்பார்களா என்ற சந்தேகம்கூட எனக்கு எப்போதும் ஏற்படுவதுண்டு.  அடிக்கடி என் கதைகள் பத்திரிகைகளிலும் வெளிவந்ததில்லை.  நிச்சயமாக என் கதைகளுக்கு என் பத்திரிகையில் மட்டும்தான்  இடம் உண்டு;.  அப் பத்திரிகையும் வருடம் ஒன்றிக்கு மூன்றோ நான்கோ வரும்.
என் கதைகளைப் பற்றி சாரு சொன்னதைக் கேட்டபிறகு என் கதைகளை நான் திரும்பவும் படிக்க வேண்டும் என்றும் என் கதைகளின் பொதுவான தன்மையைக் குறித்து கருத்தை என்னுள் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் தோன்றியது.  அவர் குறிப்பிட்டபடி ஒரு நாவலை நான் எழுதத் தொடங்க வேண்டுமென்றும் நினைத்துக்கொண்டேன்.  இன்னும் பலரும் சிறப்பாகப் பேசி கூட்டத்தை அசத்தி விட்டார்கள்.  கூட்டம் நடந்த இடமும் புத்தகம் சூழும் இடமாக இருந்தது.  
 


Comments