அழகியசிங்கர்
நான் அஸ்தினாபுரம் வங்கிக் கிளையில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். 2008ஆம் ஆண்டு. அன்று சனிக்கிழமை. மார்ச்சு ஒன்றாம் தேதி. காலை நேரம். என் நண்பர்களிடமிருந்து போன் வந்தது. 'ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.' செய்தியைக் கேட்டவுடன் அதிர்ந்து விட்டேன். என் நெருங்கிய நண்பரும் எழுத்தாளருமான ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்துகொண்டு விடுவார் என்பதை சற்றும் நம்பமுடியவில்லை. என் நண்பர்கள் 'உடனே கிளம்பி வரும்படி' சொன்னார்கள். நான் வங்கி மேலாளரிடம் சென்று, üஎனக்குத் தெரிந்தவர் திடீரென்று இறந்து விட்டார், நான் கிளம்ப வேண்டும்.ý என்றேன். மேலாளர் கொஞ்சமும் இரக்கமில்லாமல், 'உங்களை இப்போது அனுப்ப முடியாது. வேலையெல்லாம் முடித்துவிட்டுப் போங்கள்,' என்றார். நான் சொன்ன விஷயத்தின் மீது அவருக்குத் துளிக்கூட இரக்கமே இல்லை. என்ன செய்வது என்று புரியவில்லை.
பின் என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். நான் அங்கிருந்து கிளம்பிவிடுவது என்ற முடிவுக்கு வந்தேன். பரபரப்பாக இருந்தேன். ஒரு மனிதன் எந்த இடிமாதிரி செய்தி கேட்டாலும் பதட்டப்படாமல் இருக்கப் பழக்கமாகியிருக்க வேண்டும். இரக்கம் துளிக்கூட இல்லாத மனிதர்தான் என் வங்கிக் கிளையின் மேலாளர். என் இயல்பில் அப்படியெல்லாம் இருக்க முடியவில்லை.
அவர் ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டுமென்ற என் பதட்டம் என் மனதைப் பிறாண்டிக்கொண்டிருந்தது. நான் வங்கியைவிட்டுக் கிளம்புவதாக இருந்தேன். திரும்பவும் என் நண்பர்களிடமிருந்து போன். 'நீங்கள் அவசரப்பட்டுக் கிளம்பி வரவேண்டாம்.. அவர் உடலை ராயப்பேட்டை மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்று விட்டார்கள். நாளை தான் உடல் கிடைக்கும்,' என்றார்கள்.
என் மனம் சமாதானம் அடையவில்லை. மேலாளர் ஒரு இரக்கமற்றவர். அவர் முகத்திலேயே விழிக்காமல் இருக்க வேண்டுமென்று யோசித்தேன்.
அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை. ராயப்பேட்டை மருத்துவ மனையில் பிரேத அறையில் இருந்த ஸ்டெல்லா புரூஸ் உடலை அவருடைய உறவினர்கள் பெற்றுக்கொண்டார்கள். என்னால் எதுவும் நம்ப முடியவில்லை. அங்கிருந்து சுடுகாட்டிற்குச் சென்றோம். அவருடைய பூத உடலைப் பார்க்க அதிகம் பேர்கள் வரவில்லை. இத்தனைக்கும் அவர் ஒரு பிரபலமான எழுத்தாளர். எல்லா டிவி சானல்களிலும் தினசரி பத்திரிகைகளிலும் அவரைப் பற்றிய செய்திகள் வந்திருந்தன. என்னிடம் கூட டிவியில் பேட்டி எடுத்தார்கள். அவர் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி பலருக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கலாம். அதனால் அவரைப் பார்க்க விரும்பாமல் இருக்கலாம்.
அதற்கு முன்தினம்தான் எழுத்தாளர் சுஜாதா இறந்து போயிருந்தார். அவர் வீட்டிற்கு ஏகப்பட்ட பேர்கள் வந்திருந்தார்கள். ஆனால் ஸ்டெல்லா புரூஸ் விஷயத்தில் அதுமாதிரி எதுவும் நடக்கவில்û. அவர் தற்கொலை செய்துகொண்டது துணிச்சலான விஷயம் இல்லை. ஒரு கோழைதான் அப்படி செய்திருக்க முடியுமென்று தோன்றியது. அவர் தானே மரணத்தைத் தேடிக்கொண்டார். ஆத்மாநாம் தற்கொலை செய்துகொண்டதை விமர்சித்தவர், தானும் அப்படியொரு முடிவை எடுப்பார் என்று யாரும் நம்பியிருக்க மாட்டார்கள்.
ஸ்டெல்லா புரூஸ் பூத உடலைச் சுற்றி வரும்போது அவரைப் பார்த்து அன்று ஒரு கேள்வியைக் கேட்டேன். "ஏன் இந்தமாதிரியான முடிவை எடுத்தீர்கள்?" என்று. ஆனால் அவர் பதில் சொல்லவில்லை. அன்று இரவு நான் சரியாக தூங்கவில்லை. ஏன் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் எனக்கு ஸ்டெல்லாபுரூஸ் ஞாபகம் வந்து கொண்டிருந்தது. பல மாதங்கள் ஆயிற்று இது சரியாகப் போக..
(மார்ச்சு 1ஆம் தேதி ஸ்டெல்லா புரூஸ் நினைவுநாள்)
Comments