Skip to main content

நான் நடத்தும் கூட்டமும் அது நடத்தும் பதைபதைப்பும்


அழகியசிங்கர்






இன்று வழக்கமாக நடத்தும் சனிக்கிழமைக்குப் பதிலாக விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டம் நடத்தினேன்.  த நா குமாரசாமியும் நானும் என்ற தலைப்பில் வ வே சுப்பிரமணியன்  அவர்கள் பேசினார்.  ஆனால் கூட்டம் 6 மணிக்கு ஆரம்பித்து ஏழரை மணிக்கு முடிக்க வேண்டும்.  கிட்டத்தட்ட 7 மணிக்குத்தான் கூட்டம் ஆரம்பிக்கும்படி ஆயிற்று.  
ரொம்ப நாட்களுக்குப் பிறகு நானோ டுவீஸ்ட் காரை ஓட்டிக் கொண்டு போனதால் இந்த விளைவு.  சமீபத்தில் காரை சர்வீஸ் கொடுத்திருந்தேன்.  சர்வீஸ் போய் வந்தபிறகும் நான் காரை எடுத்துக்கொண்டு போக முடியவில்லை.  சர்வீஸ் சரியாக இருக்கிறதா என்று பார்க்கவும் இல்லை.  இது என் தப்பு.  வண்டியை எடுத்துக்கொண்டு போனபிறகுதான் பெற்றோல் ஒரு சொட்டு கூட இல்லை என்று.  கூடவே நண்பர்களான வைதீஸ்வரனையும், ராஜாமணியையும் அழைத்துக்கொண்டு வந்தேன். 
வண்டியை ஓட்டிக்கொண்டு போகும்போது முதல் கியரிலிருந்து இரண்டாவது கியருக்கு மாற்றினேன்.  ரொம்ப கடுமையாக இருந்தது.  எளிதாக மாறக்கூடிய கியர் மாறத் தயாராயில்லை.  இந்தச் சிரமத்துடன் வண்டியை சாமர்த்தியமாக ஓட்டிக்கொண்டுபோனேன். 
போய்ச் சேருவதற்குள்  6.45 ஆகிவிட்டது.  என்னுடன் கூட்டம் நடத்துவதற்கு உற்றத் துணையாக நண்பர் ராஜேஸ் முன்னதாகவே சென்று கூட்ட ஏற்பாடுகளைக் கவனித்துக்கொண்டார்.  
வ வே சு என்னைப் பார்த்து திட்டியிருக்க வேண்டும்.  ஏன் என் கூட்டத்திற்கு வந்திருந்த நண்பர்கள் அனைவரும் என்னைத் திட்டியிருக்க வேண்டும்.  அவர்கள் யாரும் என்னைத் திட்டவில்லை. இது எனக்கு ஆறுதல். இந்தக் கூட்டத்தின் சிறப்பு த நா குமாரசாமியின் புதல்வர் அஸ்வீன்குமார்  வந்திருந்தார்.  ஒரு மணி நேரத்திற்கு மேல் பொழுது போனதே தெரியாமல் வ வே சு அவர்கள் பேசினார்கள்.  த நா குமாரசுôமியை கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தி விட்டார்.  
கூட்டம் ஆரம்பிக்கும் முன் என் சோனி காமெரா தகராறு பண்ண ஆரம்பித்துவிட்டது.  அதில் ஏற்கனவே பதிவாகியிருந்ததை அழிக்க மறந்து விட்டேன்.  நான் அங்கு அவசரம் அவசரமாக அழித்தேன்.  கொஞ்ச நேரத்தில் காமெரா பயன்பாட்டுக்கு வந்து விட்டது.  ராஜேஸ்தான் கை வலிக்க வலிக்க காமெராவை கையில் வைத்துக்கொண்டு வ சே சு பேசியதைப் படம் பிடித்தார்.
நான் ஒவ்வொரு கூட்டத்தையும் நடத்தும்போதும் கேட்கும்போதும் அந்த எழுத்தாளர்களுடைய புத்தகங்களை வாங்கி வைத்துக் கொண்டுவிடுவேன்.    பின் வாங்கிய புத்தகங்களைப் புரட்டி புரட்டிப் பார்ப்பேன். ஏதோ படிப்பேன்.  என் குடும்பத்திற்கு எதோ சொத்து சேர்ப்பதாக நினைத்துதான் இந்தப் புத்தகங்களை வாங்கி சேர்த்துள்ளேன். 
திருப்பூர் கிருஷ்ணன் 2017ஆம் ஆண்டு ஜøன் மாதம் இக் கூட்டத்தை தி ஜானகிராமனும் நானும் என்ற தலைப்பில் ஆரம்பித்து  வைத்தார்.  அந்த மாதத்திலிருந்து தொடர்ந்து இக் கூட்டம் நடந்து வருகிறது.  இன்னும் பல எழுத்தாள நண்பர்களை அழைத்து இக் கூட்டத்தை நடத்துவதற்கு ஆவலாக உள்ளேன்.  இங்குப் பேசியதை எல்லாம் நான் ஆடியோவிலும் வீடியோவிலும் பதிவு செய்துள்ளேன்.  ஆனால் இதையெல்லாம் எழுத்து வடிவமாகக் கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும்.  இயலுமா என்பது பெரிய கேள்விக்குறி. 

Comments