Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 62


அழகியசிங்கர்  


 கொட்டாவி


சச்சிதானந்தன்

தமிழில் : சிற்பி

                                      



கொட்டாவி
ஒரு இயற்வை விதி மட்டுமல்ல
மறுப்பின் அடையாளமும் கூட.
தனிமனிதர்களோடும், நாடுகளோடும்.

மசூதி இடிக்கப்படும் போது
நாம்ல் கொட்டாவி விடுகிறோம்.

புத்தர் சிலை உடைக்கப்படும்போது
கொட்டாவி விட்டு நாம் பழிதீர்த்துக் கொள்கிறோம்

கொட்டவி
யுத்தத்திற்கும் ஏகாதிபத்தியத்துக்கும்
எதிரான போராட்டத்தில் ஒரு புதிய போர்முறையாகும்
நண்பனே,

காதலின் தீவிரத்தை வெளிப்படுத்த
கொட்டாவியைவிட நல்ல சைகை
இல்லை யென்கிறாள் காதலி

புரட்சி கொட்டாவி வழியாக
என்கிறார் பழைய தோழர் சிவப்பு வண்ணத்தில்
விடுதலை கொட்டாவி வழியாக
என்கிறது சுவர் அறிவிப்பு பச்சையில்
ஆதியில் கொட்டாவி இருந்தது
என்கிறது புதிய சுவிசேஷம்

வேதங்கள் கடவுளின் கொட்டாவி
என்கிறார் அவிவேகானந்தன்
தன் கலையின் தரிசனம் ஒரு கொட்டாவியில்
அடங்கும் என்கிறார் பரிசுத்த அழகியல் வாதி

கொட்டாவியில் நிர்வாணம் என்கிறது காவி
கொட்டாவி விட்டு மனித உரிமைப் பிரகடனம்
கொட்டாவியால் சாதிகளுக்கெதிரான சங்கிலி
கொட்டாவியின் நூறு பூ விரிவது கண்டு
உணர்ச்சி வசப்படுகிறான் கவிஞன்.

அயல்நாட்டு உறவுத்துறை
அமைச்சரின் கொட்டாவி
பாலஸ்தீனத்துக்காகவா, இசுரேலுக்காகவா என்று
அதிகாரிகளுக்கிடையே விவாதம்.

கண்டனக் கூட்டத்தில் சொற்பொழிவுக்குப் பதில்
ஒரு நீண்ட கொட்டாவி:

கொட்டாவியின் மேகங்களுக்கு இடையில்
கொட்டாவிப் பறவைகள் பறக்கின்றன
கொட்டாவியின் சூரியன் இதோ மேலே சுடர்விடுகிறான்
அச்சம் வேண்டாம் மனிதர்களே, கடவுளின்
கொட்டாவிக்குள் நம் உலகம் பத்திரமாக இருக்கிறது.

நன்றி : ஆலிலையும் நெற்கதிரும் - சச்சிதானந்தன் - தமிழில் : சிற்பி - முதல் பதிப்பு : 2016 - விலை : ரூ.250 - குணா பில்டிங்க்ஸ் - 443 அண்ணா சாலை - தேனாம்பேட்டை - சென்னை 18 

Comments