Skip to main content

நீங்களும் படிக்கலாம் - 30

நீங்களும் படிக்கலாம் - 30

அழகியசிங்கர்



நேற்று குங்குமத்தில் என் பேட்டி வெளியாகி உள்ளது.  பேட்டி   எடுத்த குங்குமம் ஆசிரியர் குழுவிற்கு என் நன்றி.  பேட்டியை எடுப்பதை விட  பேட்டியைச் சரியாகக் கொண்டு வருவது என்பது சாதாரண விஷயம் இல்லை.  அதைத் திறமையாக குங்குமம் பொறுப்பாசிரியர் கதிர் திறன்பட செய்து முடித்துள்ளார். புகைப்படங்கள் எடுத்த வின்சன்ட் பால் அவர்களுக்கும் என் நன்றி.  இப் பேட்டியைப் பற்றி கே என் சிவராமன்  எழுதி உள்ளார்.  அவருக்கும் என் நன்றி.

சில தினங்களாக நான் ஒரு நேர்காணல் புத்தகத்தை எடுத்துப் படித்து முடித்தும் விட்டேன்.  260 பக்கங்கள் கொண்ட புத்தகம் அது.  மறுதுறை மூட்டம் என்பது புத்தகத்தின் பெயர்.  நாகார்ஜ÷னனைப் பேட்டி எடுத்தவர் எஸ். சண்முகம். செம்மையாக்கம் செய்தவர் முபீன் சாதிகா.  

இந்தப் புத்தகத்தைத் தயாரிப்பதற்குள் போதும் போதுமென்று ஆகியிருக்கும்.  அந்த அளவிற்குக் கடினமான ஒன்றாக இருந்திருக்கும். இந்தத் தருணத்தில் பிரேமிளைப் பேட்டி எடுத்த மீறல் 4 சிறப்பிதழைப் பற்றியும் குறிப்பிட வேண்டும்.  100 பக்கங்கள் கொண்ட புத்தகம் இது. பேட்டி எடுத்தவர் காலப்ரதீப் சுப்ரமணியன்.  

100 பக்கங்கள் கொண்ட பிரேமிள் பேட்டியையும், 260 பக்கங்கள் கொண்ட மறுதுறை மூட்டம் புத்தகத்தைப் படிக்கும்போது, இரண்டு புத்தகங்களிலும் உள்ள சில தொடர்பான விஷயங்களை இங்கு விவரிக்க முயற்சி செய்துள்ளேன். இந்த இரண்டு பேட்டிகளிலும் ஒரு முக்கியமான அம்சம், இரு பேட்டிகளிலும் பேட்டி தருபவரின் சுய சரிதம் வெளிப்படுகிறது.  முதல் கேள்வியே அப்படித்தான் ஆரம்பிக்கிறது. 

பிரேமிளைப் பேட்டி எடுத்தவர் இப்படி ஒரு முதல் கேள்வியைத் தொடுக்கிறார்.

சம்பிரதாயமான ஒரு கேள்வியுடன் ஆரம்பிக்கலாமா?  உங்கள் எழுத்தியக்கத்தின் 'ரிஷிமூலகங்கள்' எவை?

இந்தக் கேள்விக்குப் பதிலாக பிரேமிள் தன் சுயசரிதத்தைக் கொஞ்சம் வெளிப்படுத்துகிறார்.  அவர் இப்படி சொல்கிறார் : என் தாயாரின் மூதாதைகளிடையே ஆசுகவிகள் இருந்திருக்கின்றனர்.  தாயார் கூட, எழுதப் படிக்கத் தெரிந்திருக்காவிட்டாலும் நுட்பமான ரசனையும் கவியுணர்வும் கொண்டவர்.  அவர் பேசும்போதும் சரி சண்டையிடும்போதும் சரி, சில வேளைகளில் அவர் சொல்கிறவை அசாதாரணமாக இருக்கும்.'

நாகார்ஜ÷னனைப் பேட்டி எடுக்கும் சண்முகம் úக்ளவி :

நீங்கள் பிறந்த இடம், உங்கள் குடும்பம் பற்றிச் சொல்லுங்கள்..
என்ற கேள்விக்கு, நாகார்ஜ÷னன் கிட்டத்தட்ட 50 பக்கங்கள் வரை அவருடைய குடும்பச் சூழலை விவரிக்கிறார்.  அம்மாவைப் பற்றி பல இடங்களில் குறிப்பிடுகிறார்.  

ஒரு இடத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார் : üஅம்மாவை எடுத்துக்கொண்டால் தி ஜானகிராமன், ஜெயகாந்தன் படைப்புக்களை வாசிக்கும் வழக்கம் கொண்டவர்.  ஜெயகாந்தன்  முன்னிலையில் நடந்த சென்னை சாஹித்திய அகாதமிக் கூட்டத்தில் குப்புசாமியின் சிறுகதை ஒன்று மௌனியின் ஆழியாச்சுடர் கதையை ஒத்திருப்பதை வைத்து அமைப்பியல் ஆய்வு செய்து நான் பேசியபோது அதைக் கேட்க அங்கே அம்மாவும் அமர்ந்திருந்தார்.'

இதுமாதிரியான நேர்காணல் புத்தகங்களில் நேர்காணலில் பங்கேற்பவர் என்ன சொல்கிறார் என்பதே முக்கியம்.  பிரேமிளும், நாகார்ஜ÷னனும் இந்த விதத்தில் பல தகவல்களை அளிக்கிறார்கள்.  அது குறித்து மாறுப்பட்ட கருத்துக்களைச் சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்று தோன்றுகிறது.

நான் இங்கே கூற விரும்புவது. பிரேமிள் தன் பேட்டியில்சொன்ன ஒரு விஷயத்தையும் நாகார்ஜ÷னன் சொன்னதையும் தொடர்புப் படுத்த முடியுமா என்று பார்க்கிறேன் 

பிரேமிள் சொல்கிறார் : கிருஷ்ணமூர்த்தியிடம் "உங்கள் உடல் மறைந்தபிறகு உங்கள் பிரக்ஞை என்னவாகும் என்று கேட்டபோது, "அது அப்படியே போய்விடும்.  ஆனால் நீங்கள் நான் சொன்னவற்றுடன் தொடர்பு கொண்டிருந்தால் ஒரு வேளை நீங்கள் அந்தப் பிரக்ஞையுடன் தொடர்பு கொண்டிருக்கலாம்," என்று சொன்னதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாகார்ஜ÷னன் ஜே கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி ஒரு இடத்தில் இப்படிப் பதிவு செய்திருக்கிறார் :

ஜே கிருஷ்ணமூர்த்தியின் விரிவுரைகளைச் சென்று கேட்கும் வழக்கம் கொண்டிருந்தேன்.  அந்த விரிவுரைகள் அந்த வயதில் அலாதியான கவர்ச்சி கொண்டவையாக இருந்தன.  நாம் வழக்கமாக அடையும் உணர்வுகள் ஒவ்வொன்றையும் எடுத்து, அவை எப்படி நேரெதிராக மாறிவிடுகின்றன என்பதைத் தர்க்க ரீதியாக விளக்கும் உரைகள் அவை.  அந்த விவரிப்பு முறையில் எனக்குச் சுவாரசியம் ஏற்பட்டு அதற்கும் இருத்தலியலுக்குமான ஒப்புமையைக் கண்டு, அந்த வழிமுறைதான் நிகழ்வியல் எனும்
Phenomenology   என உணரப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன,' என்கிறார்.

உண்மையில் நாகார்ஜ÷னன் ஜே கிருஷ்ணமூர்த்தி, ரமணரிடமிருந்து விலகிப் போய்விடுகிறார்.  பிரேமிளோ தன் வாழ்நாள் முழுவதும் ஜே கிருஷ்ணமூர்த்தியுடன் ஒன்றிப் போகிறார்.

இன்னொரு இடத்தில் நாகார்ஜ÷னன் சொல்கிறார் : 'அழுக்கடைந்த பூணூலை விடுதி அறை ஆணியில் மாட்டிய ஓரிரவில் குளித்து, அறைக்குச் செல்லாமல், யாரும் பார்க்க நேரிடலாம் என்ற கவலையின்றி நிர்வாணமாக மொட்டை மாடிக்குச் சென்று கட்டாந்தரையில் கிடந்தேன்.  அப்போது பெரிதும் விடுதலை அடைந்த உணர்வு ஏற்பட்டது.  அந்த நொடிக்குப் பிறகு பூணூலை இதுவரை அணிவதே இல்லை.  குடும்பத்தாருக்கும் எனக்கும் உள்ளார்ந்த அளவில் தீராத பிரச்னையை உருவாக்கிவிட்டது இதுவே எனலாம்.  இது பற்றி இருதரப்பிலும் பேசுவதில்லை.

அதேபோல் என்னைப் பிராமணன், அந்தணன், பார்ப்பான், ஐயர் என்றெல்லாம் விமர்சிப்போரும் கிண்டல் செய்வோரும் என் நிலையின் தர்க்கத்தைப் புரிந்துகொண்ள முடியாதவர்களே மறுப்பவர்களே என்கிறார்.
ஒருவர் பிராமணரா இல்லையா என்பதற்கு ஒரு அடையாளம் பூணூல் என்றாலும் இது குறித்து இவ்வளவு தூரம் யோசிக்க வேண்டுமா என்று தோன்றுகிறது. 

பிரேமிளோ அவருடைய பேட்டியில் ஒரு விஷயத்தைச் சொல்கிறார் : 

கிருஷ்ணமூர்த்தி பவுன்டேசன் உள்ள வசந்த விஹாரில் சனிக்கிழமை மாலைகளில் வீடியோ காண்பிக்கிறார்கள்.  அங்கே ஒரு இளைஞர் நண்பரானார்.  அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பழகியபோது, ஒரு சமயத்தில் தான் ஐயங்கார் வகுப்பைச் சேர்ந்தவர் என்றும் ஆனால் பூணூல் போடுவதில்லை என்றும் சொன்னார்.  ஏன் என்று கேட்டேன்.  அது அபத்தமான விஷயம் என்றார்.  ஆனால் இதனால் தன்னுடைய வீட்டில் தகப்பனார், அவரைவிட முக்கியமாகத் தாய், பாட்டி, தாத்தா இவர்களுக்கெல்லாம் மிக வருத்தம் என்பதையும் சொன்னார்.  நான் அவரிடம் கேட்ட அடுத்த கேள்வி, üஉங்களுடைய வீட்டுப் பெரியவர்கள் ஏதேனும் ஜாதீய முரட்டுப் பார்வை உடையவர்களா? மற்ற ஜாதியினரை மிக இழிவாக நடத்துபவர்களா?  என்பதுதான்.  அவர்கள் ஜாதி வெறி பிடித்தவர்களா என்பதை  அறிந்துகொள்ள முயற்சித்தேன்.  'இல்லை.  அவர்கள் ரொம்பவும் சாதாரணமானவர்கள். அனுஷ்டானங்களைப் பின்பற்றுகிறார்களே தவிர, என்னளவில் பார்த்தால் மிகவும் மனிதத் தன்மை உள்ளவர்கள் என்றுதான் சொல்லவேண்டும். அதுமாதிரியான குறைபாடு அவர்களிடம் இல்லை," என்றார்.  "அப்படியானால் நீங்கள் பூணூல் போடாமல் இருப்பது அவர்களுக்கு எதிரான ஒரு செயல் ஆகிவிடுகிறதே. இது காரணமற்ற எதிர்ப்பு ஆகிவிடுகிறது அல்லவா?" என்றேன்.  "இல்லையில்லை. நான் அவர்களுக்கு எதிராக இதைச் செய்யவில்லை.  மடத்தனமாகப்பட்டது.  அவ்வளவுதான்," என்றார். 
பிறகு பிரேமிள் அவரைத் திரும்பவும் பூணூலைப் போடும்படி செய்கிறார். 

இப்படி இரண்டு வித மனோ நிலைகளை விவரிப்பதற்காக இதைக் கூறுகிறேன்.  நாகார்ஜ÷னன் நேர்காணல் பற்றி இன்னும் சொல்ல வேண்டியது உள்ளது.  அதை அடுத்தப் பகுதியில் சொல்கிறேன்.  

Comments