3.
அழகியசிங்கர் எழுதும் கதைகளில் நான்தான் கதாபாத்திரமாக வருவேன். என்னைப் பற்றிதான் அவர் எழுதுகிறாரோ என்ற சந்தேகம் எனக்குள் எழும். ஆனால் அவர் எழுதும் எந்தக் கதையாக இருந்தாலும் முதலில் என்னிடம்தான் படிக்கக் கொடுப்பார். பின் அவர் என்னுடன் பேசும்போது, உன்னையேதான் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறேன் என்பார்
''ஒரு பத்மநாபன் உங்கள்முன் நேரிடையாக நின்று கொண்டிருக்கிறேன். இன்னொரு பத்மநாபன் கதைகளில்'' என்பேன்.
அவர் சிரித்துக்கொள்வார். ''எழுதுவதற்கு என்ன அனுபவம் வேண்டும்?'' என்று கேட்பேன். ''நம் வாழ்க்கையே ஒரு அனுபவம்தான். ஒன்றும் செய்யாமலிருந்தாலும் அனுபவம்தான்.'' என்பார்.
இதோ அவரைப் பிரிந்து வந்துவிட்டேன். கும்பகோணம் வட்டாரத்தில் எனக்கு வேலை. மாற்றல். மாற்றல் ஏமாற்றமா மாற்றமா?
கடந்த 24 ஆண்டு வங்கி வாழ்க்கையில் ஒரே விதமான இடம் அலுப்பாகத்தான் இருந்தது. தலைமை இடம். வீடு. 10லிருந்து 5வரை என்று ஒரேவிதமான இயந்திரத்தனம் அலுப்பாகத்தான் இருந்தது. எல்லாம் அலுப்பு. பார்த்த முகங்களையே பார்த்துக்கொண்டிருக்கிற அலுப்பு. மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன். பீச் ஸ்டேஷன். வெள்ளிக்கிழமை பூஜை. இனிப்பு. ஒருவித மாற்றம் வேண்டும். போதும் இது என்று தீர்மானித்தபோதுதான் ''உன் முடிவு தவறு,'' என்றார் அழகியசிங்கர்.
''ஏன்?'' என்று கேட்டேன்.
''ஐம்பதாவது வயதில் நீ குடும்பத்தைவிட்டு தனியாக இருக்க வேண்டும். வங்கி தன் ஆயுதத்தை விட்டு உன்னைத் தாக்கப் போகிறது,'' என்றார்.
''ஊர் உலகத்தில் எல்லோரும் கஷ்டப்பட்டுத்தான் பணி புரிகிறார்கள். வேலைக்காக தூர தேசத்திற்கெல்லாம் போகிறார்கள்,'' என்றேன்.
''நீ உன் சுதந்திரத்தை இழக்கப் போகிறாய். உன் முதல் துக்கம் உன் குடும்பத்தைவிட்டுப் பிரிவது. உன் பொறுப்பு கூடப் போகிறது. உன் வேலை சுமை அதிகரிக்கப் போகிறது. சுருக்கெழுத்தாளராக நீ இருந்த நிம்மதியான வாழ்க்கை உன்னைவிட்டுப் போகப்போகிறது.''
''என்ன பெரிய தூரம். இதோ கும்பகோணம்தான் போகிறேன். 300 கிலோமீட்டர் இருக்குமா?''
''நீ அங்கே போனபிறகுதான் நான் சொல்வது புரியும். நீ என்ன பெரிய அதிகாரியாகப் போகிறாயா? ரத்தன கம்பளத்திலா உன்னை வரவேற்கப் போகிறார்கள். உன் கடைநிலை ஊழியன் கூட உன்னை மதிக்க மாட்டான். உன் மேல் உள்ள அதிகாரி இன்னும் உன்னிடம் எகிறுவான்.. வங்கிக் கதவைத் திறப்பதிலிருந்து மூடுவது வரை உன் பொறுப்பென்றாகிவிடும்...கஷ்டத்தை ஏன் விலைக்கு வாங்குகிறாய் என்பது தெரியவில்லை..''
அழகியசிங்கர் மனம் உடைந்து விட்டார். அவர் சொன்னது எவ்வளவு உண்மை என்று எனக்குப் புரிய ஆரம்பித்துவிட்டது.
(இன்னும் வரும்)
a
Comments